ஆஸ்திரேலிய மண்ணில் ஒருநாள் தொடரை வெற்றியில்லாமல் முடிக்காத பெருமையைத் தொடர்ந்த இந்தியா! 
                                    
                                    
                                   ind vs aus last odi 
 
                                 
                               
                                
                                      
                                            ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சிட்னியில் நடைபெற்ற இந்த கடைசி ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
முதலில் விளையாடிய அவர்கள் 46.4 ஓவர்களில் 236 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனனர். மேத்யூ ரென்ஷா 56 ரன்களுடன் அணியின் தலைசிறந்த வீரராக இருந்தார். கேப்டன் மிட்செல் மார்ஷ் 41, மேத்யூ ஷார்ட் 30, டிராவிஸ் ஹெட் 29 ரன்கள் எடுத்தனர். இந்திய பந்துவீச்சாளர்கள் சிறப்பாக விளையாடினர். ஹர்ஷித் ராணா 4 விக்கெட்டுகளைப் பெற்று ஆஸ்திரேலிய துடுப்பாட்டத்தை சிதறடித்தார். வாஷிங்டன் சுந்தர் 2 விக்கெட்டுகள் எடுத்தார்; முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, குல்தீப் யாதவ், அக்ஷர் படேல் தலா ஒரு விக்கெட்டினை வீழ்த்தினர்.
பின்னர் 237 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்தியா, 38.3 ஓவர்களில் வெற்றியை எளிதாக கைப்பற்றியது. தொடக்க வீரர் ஷுப்மன் கில் 26 பந்துகளில் 24 ரன்கள் எடுத்து அவுட்டானார். அதன்பின் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இணைந்து அற்புதமான கூட்டணி அமைத்தனர்.
ரோஹித் சர்மா 125 பந்துகளில் 121 ரன்கள் அடித்து சதம் விளாசினார்; அதில் 13 பவுண்டரிகளும் 3 சிக்ஸர்களும் அடங்கும். விராட் கோலி 81 பந்துகளில் 74 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இருவரும் இணைந்து இந்தியாவை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுத் தந்தனர்.
தொடரை ஏற்கனவே இழந்திருந்தாலும், கடைசி போட்டியில் பெற்ற இந்த வெற்றி மூலம் ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா ஒருநாள் தொடரை வெற்றியில்லாமல் முடிக்காத பெருமையைத் தொடர்ந்துள்ளது.