பும்ராவின் ஃபிட்னெஸ் பற்றி தெரியாம பேசாதீங்க.. பரத் அருண்!
Don't talk about Bumrah fitness without knowing it Bharat Arun
மும்பை:இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கும் ஜஸ்ப்ரித் பும்ரா, தற்போது சிறப்பாக செயல்பட்டாலும் பல்வேறு விமர்சனங்களை சந்தித்து வருகிறார். உலக டெஸ்ட் தரவரிசையில் நம்பர் ஒன் பவுலராக இருக்கும் அவர், அண்மையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் அசத்தலான பந்து வீச்சு மூலம் 32 விக்கெட்டுகளை வேட்டையாடினார். ஆனால் கடைசி போட்டியில் ஏற்பட்ட முதுகு காயம் காரணமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ள நேரிட்டது. இதனால் இங்கிலாந்து தொடரில் அனைத்து போட்டிகளிலும் பங்கேற்க முடியாமல், மூன்று போட்டிகளில் மட்டுமே விளையாடினார். அதில் இரு முறை ஐந்து விக்கெட் சாதனையைப் படைத்திருந்தாலும், இந்தியா வெற்றியை பெற முடியவில்லை. இதனைத் தொடர்ந்து பும்ராவின் பணிச்சுமை மற்றும் ஃபிட்னஸ் குறித்த கேள்விகள் எழுந்தன.
இந்நிலையில், முன்னாள் பவுலிங் பயிற்சியாளர் பரத் அருண், பும்ராவின் ஃபிட்னஸ்க்கான அர்ப்பணிப்பை பாராட்டியுள்ளார். மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “2013ஆம் ஆண்டு அண்டர்-19 முகாமிலிருந்து பும்ரா முதன்முதலில் என்சிஏ வந்தார். அப்போது அணியில் சேர வாய்ப்பு குறைந்திருந்தாலும், அவரின் திறமை எங்களை கவர்ந்தது. பந்து வீச்சில் தாக்கத்தை ஏற்படுத்த, உடல் வலிமையும் தியாகமும் அவசியம் என்பதை எடுத்துரைத்தோம். அதனை பும்ரா உடனே ஏற்றுக்கொண்டு உணவு பழக்கத்திலும் உடற்பயிற்சியிலும் கடுமையான கட்டுப்பாட்டை கடைபிடித்தார்” என்றார்.
மேலும், “விராட் கோலி போலவே ஃபிட்னஸ்ஸில் பும்ராவும் முன்னுதாரணமாக திகழ்கிறார். பர்கர், பீசா, மில்க்ஷேக் போன்ற தமக்குப் பிடித்த உணவுகளை ஒரே நாளில் விட்டுவிட்டு, கிரிக்கெட் கனவை மேலே வைத்தார். குஜராத்தில் வாழும் பஞ்சாபி இளைஞரான பும்ரா, தனது விருப்பங்களை தியாகம் செய்து இந்திய வேகப்பந்து தாக்குதலின் முக்கிய வீரராக உருவெடுத்துள்ளார்” என்றும் பரத் அருண் பாராட்டினார்.
பும்ராவின் மீது எழுந்த விமர்சனங்களுக்கு இந்தக் கருத்துகள் உறுதுணையாக அமையும் நிலையில், இந்திய அணியின் எதிர்கால வெற்றிகளில் அவர் மீண்டும் முக்கிய பங்கு வகிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
Don't talk about Bumrah fitness without knowing it Bharat Arun