இந்தியாவில் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டிகளில் பாகிஸ்தான் அணிக்கு மத்திய அரசு அனுமதி..!
Central government allows Pakistan team to participate in Asia Cup hockey matches in India
ஆசிய கோப்பை ஹாக்கி போட்டிகள் அடுத்த மாதம் இந்தியாவின் பீஹாரில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் விளையாட பாகிஸ்தான் அணிக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஜம்மு காஸ்மீர் பஹல்காம் தாக்குதலுக்கு பின்னர் இரு நாடுகள் இடையே நிலவிவரும் அசாதாரண சூழலுக்கு இடையே அனுமதி முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
பல ஆண்டுகளாகவே இந்தியா - பாகிஸ்தான் இடையே பிரச்னை நிலவி வருகிறது. இந்த விரிசல் காரணமாக விளையாட்டு துறையிலும் அதன் தாக்கம் எதிரொலித்தது. இதே நேரத்தில் கிரிக்கெட் உட்பட எந்தவொரு விளையாட்டிலும் பல ஆண்டுகளாக இந்திய அணியினர், பாகிஸ்தான் சென்று விளையாடுவதில்லை. அதேபோல், அவர்களும் இங்கு வந்து விளையாடுவதில்லை.

மேலும், ஆசிய கோப்பை, உலக கோப்பை போன்ற சில தொடர்களில் மட்டுமே இந்தியா-பாகிஸ்தான் அணிகள் நேருக்கு நேர் மோதும் சூழல் ஏற்படுகிறது. மற்றபடி இரு நாடுகளும் தனிப்பட்ட தொடர்களில் விளையாட்டை தவிர்த்து வருகின்றன.
ஆனாலும், இந்தியா உடன் போட்டிகளில் விளையாட பாகிஸ்தானை சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் ஆர்வம் காட்டினர்.அதனை அவர்கள் வெளிப்படையாக தெரிவித்தும் இருந்தனர். ஆனால், பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் மற்றும் அதைத் தொடர்ந்து இந்தியாவின் 'ஆபரேஷன் சிந்தூர்' ஆகியவற்றைத் தொடர்ந்து இரு நாடுகளும் மீண்டும் பரம எதிரிகள் ஆகியுள்ளன.

இந்நிலையில், இந்தியாவில் ஆகஸ்ட் 29 முதல் செப்டம்பர் 07 வரை ஆடவர் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டிகள் நடைபெறவுள்ளன. இதில் பாகிஸ்தான் அணி பங்கேற்க முன்வருமா, அதற்கு இந்தியா சம்மதிக்குமா என கேள்விகள் எழுந்த நிலையில், பாகிஸ்தான் அணி பங்கேற்பதற்கு மத்திய அரசு தரப்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. மத்திய உள்துறை அமைச்சகம், வெளியுறவுத் துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளன.
இது குறித்து மத்திய விளையாட்டுத் துறை அமைச்சக வட்டாரங்கள் கூறுகையில்,
''பல நாடுகள் பங்கேற்கும் போட்டிகளில் எந்த அணி இந்தியாவில் விளையாடுவதையும் நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால், இருதரப்புத் தொடர்கள் வேறு'' என்று தெரிவித்துள்ளன.
English Summary
Central government allows Pakistan team to participate in Asia Cup hockey matches in India