2026 ஆசிய விளையாட்டு: பாய்மரப் படகோட்டம் மற்றும் ஸ்குவாஷில் பதக்கங்கள் — இந்தியாவின் மொத்த பதக்க எண்ணிக்கை 62 ஆக உயர்வு! - Seithipunal
Seithipunal


ஜப்பானின் ஐச்சி-நகோயா நகரில் நடைபெற்று வரும் 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டியின் 12-வது நாளில், இந்திய விளையாட்டு வீரர்கள் பாய்மரப் படகோட்டம் மற்றும் ஸ்குவாஷ் போட்டிகளில் முறையே வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களைக் கைப்பற்றி அசத்தியுள்ளனர். இதன் மூலம் இந்தியாவின் மொத்தப் பதக்க எண்ணிக்கை 62 ஆக (10 தங்கம், 22 வெள்ளி, 30 வெண்கலம்) உயர்ந்துள்ளது.

பாய்மரப் படகோட்டத்தில் வரலாற்று வெள்ளி:

ஆண்களுக்கான பாய்மரப் படகோட்டப் போட்டியின் ‘ஸ்கிப்’ பிரிவில், இந்தியாவின் பிரின்ஸ் குரிசின்கல் நோபல் மற்றும் மனு பிரான்சிஸ் அடங்கிய ஜோடி 23 ‘நெட்’ புள்ளிகளுடன் (மொத்தம் 29 புள்ளிகள்) 2-வது இடத்தைப் பிடித்து வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றியது. இப் பிரிவில் சீனா தங்கப் பதக்கத்தையும், ஹாங்காங் வெண்கலப் பதக்கத்தையும் வென்றன. இத்தொடரில் பாய்மரப் படகோட்டத்தில் இந்தியா பெறும் முதல் பதக்கம் இதுவாகும்.

மகளிர் ஸ்குவாஷ் அணிக்கு வெண்கலம்:

மகளிர் ஸ்குவாஷ் அணிகள் பிரிவில் அனஹத் சிங், தன்வி கன்னா மற்றும் ஜோஸ்னா சின்னப்பா ஆகியோர் அடங்கிய இந்திய அணி வெண்கலப் பதக்கம் வென்றது. லீக் சுற்றுகளில் சீனா, ஜப்பான், ஈரானையும், காலிறுதியில் சிங்கப்பூரையும் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய அணி, அரையிறுதியில் ஹாங்காங் அணியிடம் 1-2 என்ற கணக்கில் போராடித் தோல்வியடைந்தது. முதல் போட்டியில் அனஹத் சிங்கும், தீர்மானமிக்க 3-வது போட்டியில் ஜோஸ்னா சின்னப்பாவும் தோல்வியடைந்த நிலையில், 2-வது ஆட்டத்தில் தன்வி கன்னா 3-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். அரையிறுதி வரை முன்னேறியதன் மூலம் இந்திய மகளிர் அணிக்கு வெண்கலப் பதக்கம் உறுதியானது.

ஆடவர் ஸ்குவாஷ் அரையிறுதி:

மற்றொருபுறம், அபய் சிங், வீர் சோத்ரானி மற்றும் வேலவன் செந்தில் குமார் ஆகியோர் அடங்கிய இந்திய ஆடவர் ஸ்குவாஷ் அணி குவைத்தை வீழ்த்தி அரையிறுதிக்குத் தகுதி பெற்று, மலேசிய அணியை எதிர்கொள்கிறது.

முன்னதாகத் துப்பாக்கிச் சூடு, மகளிர் கிரிக்கெட், கபடி, 4x400 தொடர் ஓட்டம் மற்றும் வில்வித்தை ஆகிய பிரிவுகளில் தங்கம் வென்று அசத்திய இந்திய அணி, 12-வது நாளிலும் தனது பதக்க வேட்டையைத் தொடர்ந்து வெற்றிகரமாக முன்னெடுத்து வருகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Asian Games 2026 Indias Medal Tally Reaches 62 as Sailing and Women's Squash Secure Silver and Bronze on Day 12


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?


செய்திகள்



Seithipunal
--> -->