நடுவானில் 180 உயிர்களைக் காப்பாற்றிய இந்திய விமானி ஸ்மித் மச்சார்: குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி, டிரம்ப் புகழாரம்!
Captain Smit Machchhar Honoured by President Murmu PM Modi Trump for Saving 180 Lives in Mid-Air Emergency
துபாய் சர்வதேச விமான நிலையத்திலிருந்து இஸ்ரேல் நாட்டின் டெல் அவிவ் நகருக்குச் சென்ற ஃபிளைதுபாய் (Flydubai) போயிங் விமானத்தில் 27 குழந்தைகள் உட்பட 174 பயணிகள் மற்றும் பணியாளர்கள் என மொத்தம் 180-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்த போது, துணை விமானி திடீரென இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முதன்மை கேப்டன் ஸ்மித் மச்சாரைக் கத்தியால் குத்தி கொடூரத் தாக்குதல் நடத்தினார். விமானத்தைக் கீழே விழவைத்துத் தற்கொலைத் தாக்குதல் நடத்த முயன்ற துணை விமானியிடமிருந்து விமானத்தின் கட்டுப்பாட்டை மீட்க, படுகாயமடைந்த நிலையிலும் கேப்டன் ஸ்மித் மச்சார் கடுமையாகப் போராடினார்.
பயணிகளைக் காப்பாற்றிய சமயோசித நடவடிக்கை:
ரத்த வெள்ளத்தில் சரிந்த நிலையிலும் மன உறுதி தளராமல், காக்பிட் கதவைத் திறந்து அவசரச் சமிக்ஞைகளை அனுப்பிய கேப்டன் ஸ்மித் மச்சார், பயணிகள் மற்றும் மாற்றுப் பணியாளர்கள் உள்ளே வர வழிவகுத்தார். இதையடுத்து, உள்ளே வந்த பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் தாக்குதல் நடத்தியவரைக் மடக்கிப் பிடித்தனர். பின்னர், விமானத்தைச் சவுதி அரேபியாவின் தபூக் நகரில் வெற்றிகரமாக அவசரமாகத் தரையிறக்கி 180 உயிர்களையும் பத்திரமாகக் காப்பாற்றினர்.
உலகத் தலைவர்கள் & குடியரசுத் தலைவர் புகழாரம்:
கேப்டன் ஸ்மித் மச்சாரின் ஒப்பற்ற வீரத்தையும் சமயோசிதத்தையும் பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோர் 'உண்மையான ஹீரோ' எனப் பாராட்டிப் புகழ்ந்துள்ளனர்.
அவரது அசைக்க முடியாத மன உறுதிக்குத் தலைவணங்குவதாகத் தெரிவித்துள்ள குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, "கேப்டன் ஸ்மித் மச்சார் குறித்து இந்தியத் தேசமே பெருமிதம் கொள்கிறது. படுகாயமடைந்த நிலையிலும் பிறர் உயிரைக் காக்க அவர் காட்டிய துணிச்சலும் துரித நடவடிக்கையும் ஒரு பெரும் துயரத்தைத் தடுத்து நிறுத்தியுள்ளது. அவரது வீரத்தை வணங்குவதோடு, அவர் விரைவில் முழுமையாகக் குணமடையப் பிரார்த்திக்கிறேன்" என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கேப்டன் ஸ்மித் மச்சாரின் உடல்நிலை தற்போது சீராக உள்ளதாக இந்தியத் தூதரகம் அறிவித்துள்ளது.
English Summary
Captain Smit Machchhar Honoured by President Murmu PM Modi Trump for Saving 180 Lives in Mid-Air Emergency