தெய்வீகம் நிறைந்த பங்குனி மாதம்.. அட இத்தனை சிறப்புகளா?
panguni month
தமிழ் மாதங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பெருமை உண்டு. மாசி மாதத்தில் இலைகளை உதிர்க்கும் மரங்கள், பங்குனி மாதம் புது தளிர்களை ஏந்தி பூத்துக்குலுங்கும் வசந்த காலமாக இருக்கும்.
இம்மாதத்தில் தெய்வங்களின் திருமணம் நடைபெறுவதால் இது திருமண மாதம் என்ற சிறப்பினைப் பெறுகிறது.
அந்த வகையில் பங்குனி மாதத்தின் சிறப்புகள் என்னென்ன? என்பதைப் பற்றி பார்க்கலாம்.
பங்குனி மாதத்தின் சிறப்புகள் :
பங்குனி மாதம் மாரியம்மன் கோவில்களில் கொடியேற்றி பூச்சாட்டுதல் என்னும் பண்டிகை பதினைந்து நாட்கள் நடைபெறும். குறிப்பாக சமயபுரம் மற்றும் பண்ணாரி மாரியம்மன் கோவில் போன்ற பிரசித்தி பெற்ற கோவில்களில் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது.
அதேபோல் ராம நவமி விழா பல ஆலயங்களில் பங்குனி மாதத்தில் தான் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது.
பங்குனி மாதத்தில் நமது இல்லங்களிலும் பல விசேஷங்கள் மற்றும் பண்டிகைகளை கொண்டாடுகிறோம். அவை காமன் எரிப்பு பண்டிகை, ஹோலி பண்டிகை, வசந்த உற்சவம் போன்றவை ஆகும்.
காமாட்சி அன்னை ஊசி முனையில் தவமிருந்து ஏகாம்பரேஸ்வரரோடு ஐக்கியமானதும் இந்த பங்குனி மாதத்தில்தான்.
கார்த்திகை மாதத்தைப் போலவே, அம்மையப்பனின் இணைவாக இந்த மாதமும் சிறப்புப் பெறுவதால் சைவ, வைணவ பேதமின்றி அனைத்து ஆலயங்களிலும் தெய்வத் திருமணங்கள் இந்த மாதத்தில் நடைபெறுகின்றன.
பங்குனி மாதத்தில் வரும் பங்குனி உத்திரம் மிகவும் சிறப்பானது. இந்நாளில் கன்னிப் பெண்கள் விரதமிருந்து ஆலயங்களில் நடைபெறும் இறைவனின் மணக்கோலத்தை தரிசித்தால் விரைவில் திருமணம் கைகூடும்.
தெய்வ திருமணங்கள் பலவும் நடந்தேறிய மாதமும் இந்த பங்குனி மாதம் தான். பார்வதி - பரமேஸ்வரன், ஆண்டாள் - ஸ்ரீரங்கநாதர், தெய்வானை - முருகன் என தெய்வத் திருமணங்கள் அனைத்தும் பங்குனி மாதத்தில் வரும் உத்திர நட்சத்திர நாளில் நடந்ததாக புராணங்கள் கூறுகின்றன.
கணக்கு தணிக்கையாளர் என்று நவகிரகங்களில் குரு பகவானைக் குறிப்பிடுவார்கள். அரசு அலுவலகங்கள், கருவூலங்கள், வங்கிகள் என சூரியன் சார்ந்த அனைத்து துறைகளும் கணக்கு தணிக்கைக்கு உட்படுத்தப்படுவதும் மாதங்களில் கடைசி மாதமான இந்த பங்குனி மாதத்தில்தான்.
அரசன் முதல் ஆண்டி வரை நாம் அனைவரும் செய்யும் தவறுகளைத் திருத்திக் கொள்ளும் மாதமாகவும், குரு பகவானின் ஆதிக்கம் நிறைந்த மாதமாகவும் பங்குனி மாதம் விளங்குகிறது.