திருக்கார்த்திகை ஸ்பெஷல்.. சொக்கப்பனை கொளுத்துவது ஏன்.? அறிவியல் ரீதியாக யோசிக்கலாம் வாங்க..!!
chokkapanai on karthigai deepam
கார்த்திகை மாத பௌர்ணமி நாளும், கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்த திருக்கார்த்திகை நாளில் இல்லங்களிலும், கோவில்களிலும் தீபங்களை ஏற்றி மகிழ்ச்சியாக கொண்டாடப்படுவது தீபத் திருநாள்.
கார்த்திகை மாதத்தில் வருகின்ற தீபத் திருநாள் ஏனைய கார்த்திகை நாட்களினை விடவும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகின்ற ஒரு நாள் ஆகும். கார்த்திகை தீபத் திருநாளில் மாலைவேளையில் வீடுகளின் வெளிப்புறங்களிலும், வீட்டு முற்றத்திலும் விளக்கேற்றிக் கொண்டாடுவார்கள்.
கார்த்திகை தீப கொண்டாட்டம் ஏன்?
அடிமுடி காணமுடியாத ஜோதிப்பிழம்பாக சிவபெருமான் தோன்றினார். அதனால் பிரம்மனும், விஷ்ணுவும் சிவபெருமானே முழுமுதற்கடவுள் என்று ஏற்றுக்கொண்டனர். அவர்கள் இருவரும் தாம் கண்ட ஜோதியை எல்லோரும் காணும்படி காட்சியருள வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். சிவபெருமான், திருக்கார்த்திகை நட்சத்திரத்தன்று ஜோதிப்பிழம்பாக காட்சியருளினார். முழுமுதற்கடவுள் சிவபெருமானே என்ற நோக்கில் கார்த்திகை தீபத் திருநாள் கொண்டாடப்படுகிறது.

கார்த்திகை கூம்பு :
கார்த்திகை தீப விழாவின் முதன்மையான நிகழ்வு சொக்கப்பனை ஏற்றுதல். பனை மரத்தை பூலோக கற்பக விருட்சம் என்றும், பொற்பனை என்றும் சிறப்பிப்பார்கள். அதை அக்னியின் வடிவம் என்பார்கள்.
கார்த்திகை தீபத் திருநாளில் பனைமரத்தை வெட்டி எடுத்து வந்து ஆலயத்தின் முன்னுள்ள முற்றத்தில் வெட்டவெளியில் நடுவார்கள். அதை சுற்றி 10 அல்லது 15 அடி உயரத்திற்கு பனை ஓலைகளைக் கொண்டு கூம்பு போன்று அமைப்பார்கள். மாலையில் ஆலயங்களின் உச்சியில் தீபம் ஏற்றியதும், பஞ்ச மூர்த்திகளுக்கு தீபாராதனை செய்து, கோவிலுக்கு முன்புறம் அமைக்கப்பட்டிருக்கும் இந்த கூம்புகளுக்கு முன்பாக எழுந்தருளச் செய்வார்கள்.

பின்னர், சுவாமிக்கு தீபாராதனை செய்து, அந்த சுடரால் இந்த சொக்கப்பனைகளை கொளுத்துவர். சுடர் வேகமாகப் பரவி கொழுந்துவிட்டு எரியும். அந்த ஜோதியை சிவனாகவே எண்ணி வழிபடுவார்கள். இது, அக்னி மய லிங்கமாகும்.
அறிவியல் ரீதியாக யோசிக்கலாம் வாங்க...
கார்த்திகை மாத தீபத் திருநாளில் மட்டுமல்லாமல் கார்த்திகை மாதம் முழுவதும் நம் முன்னோர்கள் தீபமேற்றி வழிபட்டனர். ஏன் கார்த்திகை மாதம் தீபம் ஏற்றி வழிபட்டார்கள்?
கார்த்திகை மாதத்தில் மழைக்காலமும், பனியும் சற்று இணைந்தே குளிருடன் காணப்படும். இதனால் சளி, காய்ச்சல் அதிகமாகவே இருக்கும். அதுமட்டுமின்றி இக்காலத்தில் சிறு சிறு பூச்சிகளும், கொசுகளும் உலாவும்.
இதை கட்டுப்படுத்தவே நல்லெண்ணெய், காட்டாமணக்கு, சிற்றாமணக்கு, பசு நெய், வேப்பெண்ணெய் மற்றும் பலவகை மூலிகை எண்ணெய்களை பயன்படுத்தி வீடெங்கும் தீபமேற்றப்பட்டது.
இதனால் கொசு மற்றும் பூச்சிகள் குறைந்து நோய்களும் கட்டுக்குள் இருக்கும். மேலும் பல்வேறு மூலிகைகளை இந்நாளில் தூபமாக எரிப்பதாலும் பல்வேறு நன்மைகள் விளைகின்றன.
அறிவியல் ரீதியாகவும் கார்த்திகை தீபத் திருநாள் நமக்கு பல நன்மைகளை அள்ளி தருகிறது.
English Summary
chokkapanai on karthigai deepam