விநாயகருக்கு அருகம்புல் மாலை சாற்றப்படுவது ஏன் தெரியுமா?
arugampul malai
வினைகளை போக்குபவர் விநாயகர். எந்த ஒரு காரியத்தை தொடங்கினாலும் அது எவ்விதத் தடையும் இல்லாமல் முற்றுப்பெற விநாயகர் வழிபாட்டுடன் தொடங்குவது நமது வழக்கம். உணவு பிரியரான விநாயகருக்கு படைக்கும் பொருட்களில் கூட அர்த்தம் இருக்கிறது.
விநாயகருக்கு கொழுக்கட்டை படைப்பது ஏன்?
விநாயகர் சதுர்த்தி நாளில், பிள்ளையாருக்கு செய்யப்படும் பிரசாதங்களில் முக்கியமானது, 'மோதகம்" மற்றும் கொழுக்கட்டை. தேங்காய், வெல்லப்பாகு, அரிசி மாவால் செய்யப்படும் இந்த நிவேதன பொருளில் ஒரு உண்மை உள்ளது.
மோதும் அகங்கள் இருக்கக்கூடாது. எல்லோரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்ற தத்துவத்தை வலியுறுத்திதான் மோதகத்தை படைக்கின்றோம்.

மேல் தோலாக இருக்கும் மாவு பொருள், அண்டம்;. அதன் உள்ளே இருக்கும் பூரணம், பிரம்மம். நமக்குள் இருக்கும் பூரணம் போன்ற நல்ல பண்புகளை மூடி மறைப்பது, மாயை. இந்த மாயை-யை அகற்றிவிட்டால், பூர்ணத்துவமான நல்ல பண்புகள் வெளியாகும். இதுவே, கொழுக்கட்டை உணர்த்தும் தத்துவம்.
கொழுக்கட்டையின் கூர்மையான முன் பகுதி, விநாயகர் கூரிய புத்தியை அருள்வார் என்பதை தெரிவிக்கிறது. கொழுக்கட்டையின் வெள்ளை நிற வெளிப்பகுதி, எல்லோருக்கும் தெளிவான உள்ளம் தருவார் என்பதை தெரிவிக்கிறது. கொழுக்கட்டையின் உட்புறத்தில் இனிப்பான பகுதியோ, கணபதி எப்போதும் இனிய அருள் வழங்குவார் என்பதை சொல்லாமல் சொல்கிறது.
விநாயகருக்கு அருகம்புல் மாலை சாற்றப்படுவது ஏன் தெரியுமா?
அனலாசுரன் என்ற அசுரனை விநாயகர் கோபத்தில் விழுங்கி விட்டார். அப்போது வயிற்றுக்குள் சென்ற அனலாசுரன் அங்கு வெப்பமடையச் செய்தான்.

விநாயகருக்கு அந்த வெப்பத்தைத் தாங்க முடியவில்லை, அவருக்கு குடம் குடமாகக் கங்கை நீர் அபிஷேகம் செய்யப்பட்டது. அதனால் எந்த பயனும் ஏற்படவில்லை.
இந்நிலையில் ஒரு முனிவர் அருகம்புல்லைக் கொண்டு வந்து விநாயகரின் தலை மேல் வைத்தார். அவரது எரிச்சல் அடங்கியது.
அனலாசுரனும் வயிற்றுக்குள் ஜீரணமாகி விட்டான். அன்று முதல் தன்னை அருகம்புல் கொண்டு அர்ச்சிக்க வேண்டுமென விநாயகர் கட்டளையிட்டார். இதன் காரணமாகவே விநாயகர் வழிபாட்டில் அருகம்புல் முக்கியத்துவம் பெறுகின்றது.

விநாயகரின் முன் நம் தலையில் கொட்டி கொள்வது ஏன்?
அகத்தியர் கொண்டுவந்த கமண்டலத்தை காகம் வடிவெடுத்து வந்த விநாயகர் கவிழ்த்தார். பின், ஒரு அந்தணச் சிறுவனின் வடிவத்தில் அகத்தியர் முன்பு வந்து நின்றார். கோபம் கொண்ட அகத்தியர் விநாயகரின் தலையில் கொட்டினார். அப்போது விநாயகர் சுயரூபம் எடுத்து, உலக நன்மைக்காக காவிரி நதியை உருவாக்க அவ்வாறு செய்ததாக கூறினார். அகத்தியர் தன் தவறுக்காக வருந்தி தன் தலையிலேயே கொட்டிக்கொண்டார். அன்று முதல் விநாயகரின் முன் தலையில் கொட்டி வழிபடும் வழக்கம் ஏற்பட்டது.