'நீட் தேர்வு என்றதை விதைத்ததே நீங்கள்தான்'...! - முகமூடியை கழற்றுங்கள்...! - காங்கிரஸுக்கு டிடிவி தினகரன் சவால்
You ones who planted NEET exam Take off your mask TTV Dhinakaran challenges Congress
நீட் தேர்வு விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டை கடுமையாக விமர்சித்துள்ள அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தமிழகத்தில் மாணவர்கள் போராடினால் கைது நடவடிக்கை மேற்கொள்ளும் அரசு, டெல்லியில் அனுமதியின்றி போராடிய ராகுல்காந்தி கைது செய்யப்பட்டதை மட்டும் ஜனநாயகப் படுகொலை எனக் கூறுவது முரண்பாடாக இல்லையா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது,"நீட் தேர்வு என்ற கருத்துக்கு அடித்தளம் அமைத்த காங்கிரஸ் கட்சியே, இன்று அதற்கு எதிராக போராட்டம் நடத்துவது அரசியல் கேலிக்கூத்தாக உள்ளது.

2010-ம் ஆண்டு மத்தியில் ஆட்சியில் இருந்தபோது, மருத்துவப் படிப்புகளுக்கு நாடு முழுவதும் ஒரே நுழைவுத் தேர்வு நடத்தும் கருத்தை உருவாக்கி, நீட் தேர்வுக்கு அடித்தளம் அமைத்தது காங்கிரஸ் கட்சி.ஆனால், தற்போது அதே நீட் தேர்வுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் தெருக்களில் இறங்கிப் போராடுவது, மாணவ, மாணவியர்களின் உணர்வுகளை அரசியல் ஆதாயத்துக்காக பயன்படுத்தும் செயலாகவே பார்க்க வேண்டியுள்ளது.
கடந்த காலத்தில் நீட் தேர்வை அறிமுகப்படுத்த முயன்றது தவறு என்பதை காங்கிரஸ் கட்சி தற்போது ஒப்புக்கொள்கிறதா? அல்லது அப்போது எடுக்கப்பட்ட முடிவு சரியானது என்றால், தற்போதைய போராட்டங்கள் அரசியல் காரணங்களுக்காக நடத்தப்படுகிறதா? என்பதை அக்கட்சி முதலில் நாட்டு மக்களுக்கு விளக்க வேண்டும்.
தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக சாலைகளில் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது காவலர்களை ஏவி, வலுக்கட்டாயமாக கைது செய்துவிட்டு, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் உரிய முன் அனுமதி பெற்று, குறிப்பிட்ட இடத்தில் அமைதியாகப் போராடலாம் என்று அதிகாரத் தொணியில் கூறும் தவெக அரசு, டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியின் இல்லம் முன்பு எவ்வித அனுமதியும் இன்றி போராட்டம் நடத்திய ராகுல்காந்தி கைது செய்யப்பட்டதை மட்டும் ஜனநாயகப் படுகொலை எனக் கூறுவது முரண்பாடாகத் தெரியவில்லையா?
தனது கடந்தகால முடிவுகளையும், தவறுகளையும் மறைத்துவிட்டு, மாணவ, மாணவியர்களின் எதிர்கால நலன் என்ற முகமூடியை அணிந்து கொண்டு காங்கிரஸ் கட்சியினர் நடத்தும் இந்தப் போராட்டம், மாணவர்களைத் தூண்டிவிட்டு அதன் மூலம் அரசியல் ஆதாயம் தேடும் முயற்சியே தவிர, மாணவ, மாணவியர்களின் நலனைப் பாதுகாக்கும் போராட்டம் அல்ல என்பதை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள் என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன்” என டிடிவி தினகரன் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
English Summary
You ones who planted NEET exam Take off your mask TTV Dhinakaran challenges Congress