விநாயகர் சதுர்த்தி பண்டிகை என்றாலே வீட்டில் மணக்கும் இனிப்பு வாசனையும், வாழையிலையில் வரிசையாக அடுக்கப்படும் கொழுக்கட்டைகளும்தான் முதலில் நினைவுக்கு வரும். மென்மையான அரிசி மாவுக்குள் வெல்லம், தேங்காய் கலந்த இனிப்புப் பூரணத்தை வைத்து ஆவியில் வேகவைக்கும் இந்த பாரம்பரிய உணவு, தலைமுறைகள் கடந்து வந்த நம் உணவுப் பண்பாட்டின் இனிமையான அடையாளமாகவும் விளங்குகிறது.ஆனால், கொழுக்கட்டை செய்யும்போது மாவில் விரிசல் ஏற்படுவது அல்லது ஆவியில் வேகும்போது கொழுக்கட்டை வெடித்துச் சிதைவது பலருக்கும் இருக்கும் பொதுவான சிக்கல். மாவின் பதம், பூரணத்தின் அளவு, மூடும் விதம் என சில விஷயங்களில் மட்டும் கவனம் செலுத்தினால், இந்தப் பிரச்சினையை எளிதாகத் தவிர்க்கலாம்.
கொழுக்கட்டை வெடிப்பதற்கு என்ன காரணம்?
மாவு மிகவும் கெட்டியாகவோ அல்லது அதிகமாக உலர்ந்ததாகவோ இருப்பது, பூரணத்தை அளவுக்கு அதிகமாக நிரப்புவது, மாவை மிகவும் மெல்லியதாகத் தட்டுவது போன்ற காரணங்களால் கொழுக்கட்டையில் விரிசல் ஏற்படலாம்.எனவே, கொழுக்கட்டை தயாரிக்கும்போது கீழே உள்ள ஐந்து விஷயங்களை மறக்காமல் கவனியுங்கள்.

கொதிக்கும் தண்ணீரே முக்கியம்!
அரிசி மாவைப் பதப்படுத்தும்போது நன்றாகக் கொதிக்கவைத்த தண்ணீரைப் பயன்படுத்துவது அவசியம். கொதிக்கும் நீரை ஒரே நேரத்தில் முழுவதுமாக ஊற்றாமல், சிறிது சிறிதாகச் சேர்த்து மாவை கிளற வேண்டும்.மாவுக்குத் தேவையான அளவு தண்ணீர் மட்டுமே சேர்த்து, கட்டிகள் இல்லாமல் நன்றாகக் கலக்க வேண்டும். தண்ணீரின் அளவு அதிகமாகிவிட்டால் மாவு தளர்ந்து விடும் என்பதால், இந்த நிலையில் கூடுதல் கவனம் தேவை.
மாவு மென்மையாக இருக்க வேண்டும்
சூடாக இருக்கும் மாவை உடனே கைகளால் பிசையாமல், கை பொறுக்கும் அளவுக்கு சிறிது நேரம் ஆறவிட வேண்டும். பின்னர் கைகளில் சிறிதளவு எண்ணெய் அல்லது நெய் தடவி மாவை நன்றாகப் பிசையுங்கள்.மாவுக்குள் எந்தக் கட்டியும் இல்லாமல், மென்மையாகவும் நெகிழ்வாகவும் இருக்கும் வகையில் பிசைவது முக்கியம். மாவு மிகவும் இறுக்கமாக இருந்தால் கொழுக்கட்டை செய்யும்போது ஓரங்களில் விரிசல் ஏற்படலாம்.
மாவு காயாமல் பார்த்துக்கொள்ளுங்கள்
பிசைந்து வைத்த மாவை நீண்ட நேரம் திறந்தபடி வைத்திருந்தால், அதன் மேற்பரப்பு விரைவாக உலர்ந்து விடும். பின்னர் அதைக் கொண்டு கொழுக்கட்டை பிடிக்கும்போது மாவில் சிறு சிறு விரிசல்கள் உருவாகலாம்.இதனைத் தவிர்க்க, பயன்படுத்தும் வரை மாவை ஈரத்துணியால் மூடி வைக்க வேண்டும். ஒவ்வொரு முறையும் தேவையான அளவு மாவை மட்டும் எடுத்துப் பயன்படுத்துவது நல்லது.
பூரணத்தை அளவோடு நிரப்புங்கள்
கொழுக்கட்டைக்குள் அதிக அளவு பூரணம் வைத்தால், ஆவியில் வேகும்போது உள்ளே உருவாகும் அழுத்தத்தால் மாவு வெடிக்கக்கூடும்.அதேபோல், மாவை மிகவும் மெல்லியதாகத் தட்டுவதும் விரிசலுக்குக் காரணமாகலாம். எனவே, மாவை நடுத்தரமான தடிமனில் தட்டி, நடுப்பகுதியில் தேவையான அளவு பூரணத்தை மட்டும் வைத்து மூட வேண்டும்.
மூடும் பகுதி கச்சிதமாக இருக்க வேண்டும்
பூரணத்தை வைத்த பிறகு மாவின் ஓரங்களை மெதுவாக இணைத்து, எங்கும் இடைவெளி இல்லாதபடி நன்றாக மூட வேண்டும். சிறிய விரிசல் இருந்தால்கூட ஆவியில் வேகும்போது அது பெரிதாகி கொழுக்கட்டை வெடிக்க வாய்ப்புள்ளது.மாவைத் தட்டும்போதே ஓரங்களில் விரிசல் தெரிந்தால், சிறிது தண்ணீர் அல்லது எண்ணெய் தடவி மெதுவாகச் சரிசெய்துவிட்டு அதன் பிறகு பூரணத்தை நிரப்பலாம்.
மாவின் பதம் சரியாக இருக்கிறதா?
கொழுக்கட்டை செய்யத் தொடங்குவதற்கு முன், மாவிலிருந்து சிறிய உருண்டை ஒன்றை எடுத்து உள்ளங்கையில் வைத்து தட்டி பாருங்கள்.அதன் ஓரங்கள் வெடிக்காமல், மென்மையாகவும் சீராகவும் வந்தால் மாவு சரியான பதத்தில் உள்ளது என்று தெரிந்துகொள்ளலாம். மாவு சரியான பதத்தில் இருந்தால்தான் கொழுக்கட்டையும் மென்மையாகவும் அழகாகவும், ஆவியில் வேகும்போது வெடிக்காமலும் வரும்.
விநாயகர் சதுர்த்திக்கு புதுவித கொழுக்கட்டை வகைகள்
பாரம்பரிய இனிப்பு கொழுக்கட்டையுடன் இந்த ஆண்டு சற்று வித்தியாசமாகவும் சத்தானதாகவும் சில புதிய வகைகளை செய்து பார்க்கலாம்.
ஓட்ஸ்–பாதாம் வெல்லக் கொழுக்கட்டை
ஓட்ஸின் நார்ச்சத்தும், பாதாமின் ஊட்டச்சத்துகளும் இணையும் இந்தக் கொழுக்கட்டை, சுவையானதோடு சத்தான சிற்றுண்டியாகவும் அமையும்.
தேவையான பொருட்கள்:
ஓட்ஸ் மாவு – 1 கப்
பாதாம் – கால் கப்
வெல்லம் – அரை கப்
தேங்காய் துருவல் – கால் கப்
எள் – 1 மேசைக்கரண்டி
ஏலக்காய்த்தூள் – சிறிதளவு
செய்முறை:
முதலில் பாதாம் மற்றும் ஓட்ஸை லேசாக வறுத்துக்கொள்ள வேண்டும். பாதாமை பொடியாக நறுக்கி, ஓட்ஸ், வெல்லம், தேங்காய் துருவல், எள் மற்றும் ஏலக்காய்த்தூளுடன் சேர்த்து நன்றாகக் கலந்து பூரணம் தயாரிக்க வேண்டும்.பின்னர் ஓட்ஸ் மாவில் வெந்நீரைச் சிறிது சிறிதாக ஊற்றி மென்மையாகப் பிசைய வேண்டும். மாவைச் சிறிய உருண்டைகளாகப் பிரித்து, கிண்ணம் போன்ற வடிவில் தட்டி அதன் நடுவில் தயாரித்த பூரணத்தை வைக்க வேண்டும்.பூரணத்தைச் சுற்றி மாவை நன்றாக மூடி, இட்லித் தட்டில் அடுக்கி சுமார் 10 முதல் 12 நிமிடங்கள் ஆவியில் வேகவைத்தால் சுவையான ஓட்ஸ்–பாதாம் வெல்லக் கொழுக்கட்டை தயார்.
அவல்–ரவை காய்கறிக் கொழுக்கட்டை
இனிப்பு கொழுக்கட்டைக்கு மாற்றாக காரசாரமான சுவையில் செய்யக்கூடிய இந்த வகை, மாலை நேரச் சிற்றுண்டியாகவும் பரிமாறலாம்.
தேவையான பொருட்கள்:
அவல் – 1 கப்
ரவை – அரை கப்
நிலக்கடலை – கால் கப்
கேரட் – அரை கப்
பச்சைப் பட்டாணி – கால் கப்
பச்சை மிளகாய் – 2
இஞ்சி – சிறிதளவு
கறிவேப்பிலை – சிறிதளவு
கடுகு – அரை தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
ரஸ்க் பொடி – அரை கப்
மிளகுத்தூள் – அரை தேக்கரண்டி
செய்முறை:
அவலை நன்றாகக் கழுவி சிறிது நேரம் ஊறவைத்து, பின்னர் தண்ணீரை வடித்துக்கொள்ள வேண்டும். நிலக்கடலையைத் தனியாக வறுத்து கொரகொரப்பாகப் பொடிக்க வேண்டும்.வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி கடுகு தாளிக்கவும். பின்னர் நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கேரட் மற்றும் பச்சைப் பட்டாணியைச் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.இதனுடன் அவல், ரவை, உப்பு மற்றும் நிலக்கடலைப் பொடியைச் சேர்த்து கலக்க வேண்டும். தேவையான அளவு வெந்நீர் தெளித்து, கலவையைச் சிறிது நேரம் ஆறவிட்டு உருண்டைகளாகப் பிடிக்க வேண்டும்.உருண்டைகளை இட்லித் தட்டில் வைத்து 10 முதல் 12 நிமிடங்கள் ஆவியில் வேகவிட வேண்டும். இறுதியில் மிளகுத்தூள் கலந்த ரஸ்க் பொடியில் இவற்றை உருட்டி, சிறிதளவு எலுமிச்சைச் சாறு சேர்த்து பரிமாறினால் சுவை கூடும்.
சாக்லேட் ஓட்ஸ் கொழுக்கட்டை
குழந்தைகளுக்குப் பிடித்த சாக்லேட் சுவையையும் ஓட்ஸின் சத்தையும் இணைத்து தயாரிக்கக்கூடிய இந்தக் கொழுக்கட்டை, பண்டிகை நாளில் சிறியவர்களின் கவனத்தை ஈர்க்கும்.
தேவையான பொருட்கள்:
ஓட்ஸ் மாவு – 1 கப்
கோகோ பொடி – 1 மேசைக்கரண்டி
தேங்காய் துருவல் – கால் கப்
சாக்லேட் துருவல் – கால் கப்
வெல்லம் – அரை கப்
செய்முறை:
முதலில் தேங்காய் துருவல், வெல்லம், சாக்லேட் துருவல் மற்றும் கோகோ பொடியை ஒன்றாகச் சேர்த்து பூரணமாகத் தயாரித்துக்கொள்ள வேண்டும்.ஓட்ஸை லேசாக வறுத்து, ஆறியதும் அரைப்பானில் போட்டு நன்றாக மாவாக்க வேண்டும். இந்த மாவில் வெந்நீரைச் சிறிது சிறிதாகச் சேர்த்து மென்மையாகப் பிசைய வேண்டும்.மாவைச் சிறிய உருண்டைகளாகப் பிரித்து, ஒவ்வொன்றையும் கிண்ணம் போல் தட்டி நடுவில் சாக்லேட் பூரணத்தை வைத்து நன்றாக மூட வேண்டும். பின்னர் இட்லித் தட்டில் அடுக்கி 10 முதல் 12 நிமிடங்கள் ஆவியில் வேகவிட வேண்டும்.ஆவியில் வெந்ததும் வெளியே எடுத்து சிறிது நேரம் ஆறவிட்டால், மணமும் சுவையும் நிறைந்த சாக்லேட் ஓட்ஸ் கொழுக்கட்டை பரிமாறத் தயாராகிவிடும்.இந்த விநாயகர் சதுர்த்தியில் வழக்கமான கொழுக்கட்டையுடன் புதுமையான சுவைகளையும் சேர்த்துப் பாருங்கள். மாவின் பதத்தைச் சரியாகப் பார்த்து, பூரணத்தை அளவோடு நிரப்பி, ஓரங்களை கச்சிதமாக மூடினால் மென்மையானதும் அழகானதுமான கொழுக்கட்டைகளை எளிதில் தயாரிக்கலாம்.