அமெரிக்காவின் எஃப்பிஐ வலைவீசி தேடி கொடூர பெண் குற்றவாளி இந்தியாவில் கைது!
woman wanted criminal US FBI arrested
அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பான எஃப்பிஐ வெளியிட்ட மிக முக்கிய 10 குற்றவாளிகள் பட்டியலில் 4வது இடத்தில் இருந்த சின்டி ரோட்ரிக்யூஸ் சிங் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தப் பட்டியலில் சொந்த குழந்தையை கொன்றதாகக் குற்றம்சாட்டப்பட்ட முதல் பெண் இவர்தான் என்பதால் இந்த வழக்கு அதிக கவனம் பெற்றது.
500 பேரைக் கொண்ட உலகின் மிக முக்கிய குற்றவாளிகள் பட்டியலில் இடம்பெற்ற இவர்தான், சொந்த மகனை கொன்றதாகப் பதிவான முதல் பெண் என்பதால் அவர் 4வது இடத்தில் வைக்கப்பட்டிருந்தார்.
40 வயதான சின்டி, 2022 ஆம் ஆண்டு தனது 6 வயது மகன் நோயல் ரோட்ரிக்யூஸை கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டார். பின்னர் 2023 ஆம் ஆண்டு, தனது கணவர் அர்ஷ்தீப் சிங் மற்றும் 6 பிள்ளைகளுடன் அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு தப்பிச் சென்றார்.
அவர் மார்ச் 22 அன்று இந்தியாவுக்குப் புறப்பட்ட விமானத்தில் கடைசியாகக் காணப்பட்டார். ஆனால் அந்த விமானத்தில் சிறுவன் நோயல் இல்லை. அதற்கு முந்தைய நாளே சின்டி, “என் மகன் காணவில்லை” என்று புகார் அளித்திருந்தார்.
நோயலின் தந்தை மெக்சிகோவில் வசித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. விசாரணையில், நோயலுக்கு பேய் பிடித்துவிட்டதாக சின்டி நம்பியதும், தன் இரட்டைப் பிள்ளைகளுக்கு ஆபத்து ஏற்படும் என பயந்ததும் தெரியவந்துள்ளது. மேலும் கடுமையான நுரையீரல் பிரச்னையால் அவதிப்பட்ட நோயல், பட்டினியிலும் தண்ணீரின்றியும் வதைக்கப்பட்டதாக குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்கா அதிகாரிகள், இந்த வழக்கு குற்றவாளிகளுக்கான எச்சரிக்கையாக இருக்கும் என்று தெரிவித்துள்ளனர். குற்றம் செய்தவர் எந்த நாட்டிலும் மறைந்தாலும், கைது செய்யப்பட்டு தண்டனைக்கு ஆளாவார் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
சின்டியை கைது செய்வதற்காக எஃப்பிஐ, இன்டர்போல் மற்றும் இந்திய அதிகாரிகள் இணைந்து நடவடிக்கை எடுத்தனர். தற்போது அவர் கைது செய்யப்பட்டு அமெரிக்காவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.
English Summary
woman wanted criminal US FBI arrested