விசில் சின்னம் எங்கும் ஒலிக்கும்… 2026-ல் கோட்டை நம்மதே: விஜய் நம்பிக்கை முழக்கம்...!
whistle symbol heard everywhere fort ours 2026 Vijay confident declaration
தமிழக வெற்றிக் கழகத்தின் 3-ஆம் ஆண்டு தொடக்க விழா இன்று பனையூரில் உள்ள கட்சி தலைமையகத்தில் உற்சாகமும் எழுச்சியும் நிறைந்த சூழலில் நடைபெற்றது. இதில் த.வெ.க. தலைவர் விஜய் தலைமையுரை நிகழ்த்தி தொண்டர்களை உற்சாகப்படுத்தினார்.அவர் பேசும்போது, “இன்று நம் கட்சி மூன்றாவது ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறது.

இத்தனை குறுகிய காலத்தில் தமிழக அரசியலில் பெரிய சக்தியாக உருவெடுத்திருப்பது உங்கள் உழைப்பும், நம்மை நேசிக்கும் கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கையும் தான் காரணம். உங்களை நம்பித்தான் நானும், நம்ம கட்சியும் நிற்கிறோம்,” என்று தெரிவித்தார். கட்சியின் ஒவ்வொரு தோழருக்கும், தொண்டருக்கும் தலைமைத் தொண்டனாக தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
1977-ல் எம்.ஜி.ஆர். அளித்த பேட்டியை நினைவுகூர்ந்த அவர், “அண்ணா இருந்த இடத்தில் தகுதியற்றவர்கள் அமர்கிற நிலையை பார்த்து கண்ணீர் வடித்தேன்; அந்த கண்ணீரை துடைக்கத்தான் என் இயக்கம் தொடங்கியது” என்று எம்.ஜி.ஆர். கூறியதை மேற்கோள் காட்டினார்.
அதுபோலவே, 2017 மற்றும் 2021-க்கு பிறகு தமிழகத்தின் அரசியல் நிலையை பார்த்த மக்கள் மனவேதனை அடைந்தனர். அந்த வேதனையை மாற்றவே தமிழக வெற்றிக் கழகம் உருவானது என்றார்.“நாம் பேசினாலே சிலர் கொந்தளிப்பார்கள். அது அவர்களின் இயல்பு. எம்.ஜி.ஆர். கட்சி தொடங்கியபோதும் கேலி செய்தார்கள். அனுபவம் இல்லை, நடிகர் கட்சி என்று சாடினார்கள்.
ஆனால் மக்களே பதில் சொன்னார்கள். இன்று அதே பழைய ஆயுதங்களைத்தான் நமக்கெதிராகவும் பயன்படுத்துகிறார்கள்” என்று சாடினார்.விஜய்க்கு அரசியல் அனுபவம் இல்லை என்று விமர்சிப்பவர்களை நோக்கி, “அதே வார்த்தைகள்தான் ஒருகாலத்தில் எம்.ஜி.ஆருக்குமே கூறப்பட்டது.
வரலாறு திரும்பத் திரும்ப அதையே காட்டுகிறது,” என்றார். ஊழல், அநீதி குறித்து நாம் கேள்வி கேட்டாலே பழைய குற்றச்சாட்டுகளை உருட்டி விடுவார்கள்; ஆனால் உண்மையை சொல்லாமல் நாம் அமைதியாக இருக்க மாட்டோம் என்றும் வலியுறுத்தினார்.தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தும் ஒரே சக்தி த.வெ.க. தான் எனக் கூறிய அவர், “மும்முனை, நான்கு முனை போட்டி என்று பேசட்டும்.
மக்கள் சக்தியாக நாமொரு பக்கம் நிற்கிறோம். தி.மு.க., பா.ஜ.க. உள்ளிட்ட மற்ற அணிகள் வேறு பக்கம். ஆனால் தி.மு.க.வை வீழ்த்தக் கூடிய வலிமை நம்மிடமே உள்ளது” என்றார்.‘வீட்டைவிட்டு வெளியே வா’ என விமர்சிப்பவர்களை நகைச்சுவையுடன் பதிலளித்த அவர், “ஒவ்வொரு வீட்டிலும் ஒரு விஜய் இருக்கிறார்.
தேர்தல் நாளில் வாக்குச்சீட்டை கையில் எடுத்துக் கொண்டு அவர்கள் எல்லாம் வரிசையாக வருவார்கள்; அன்றுதான் உண்மை தெரிய வரும்” என்றார்.கருத்துக்கணிப்புகள் குறித்து பேசும்போது, “ஊர் ஊராக, வீடு வீடாக சென்று பார்த்தால் ஒவ்வொரு வீட்டிலும் த.வெ.க. இருப்பதை காண்பீர்கள்.
விசில் சின்னம் போகாத ஊரே இல்லை. மக்கள் மனதில் ஏற்கனவே தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது,” என்றார்.கட்சித் தொண்டர்களை நோக்கி, “ஒற்றுமையாக வேலை செய்யுங்கள். நம் வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்யுங்கள். மாற்றத்தை மக்களுடன் சேர்ந்து நான் கொண்டு வருகிறேன்.
மக்கள் ஊதும் விசில் சத்தத்தில் ஊழல் சக்திகள் ஓடிப்போகும். 2026-ல் செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் த.வெ.க. ஆட்சிக் கொடி பறக்கும். வெற்றி நிச்சயம்,” என்று உறுதியுடன் உரையை முடித்தார்.
English Summary
whistle symbol heard everywhere fort ours 2026 Vijay confident declaration