வாக்கு கிடைக்காது என்பதால் தமிழ்நாடு ஒதுக்கலா...? - பாஜக மீது பரபரப்பு குற்றச்சாட்டு
Tamil Nadu being neglected because no votes gained sensational accusation against BJP
பாஜகவின் சித்தாந்த அரசியலுக்கு தமிழ்நாடு எப்போதும் சவாலாக இருப்பதால், தமிழர்களின் மீது அந்தக் கட்சி கொண்டிருக்கும் புறக்கணிப்பும் பகையும் இந்த ஒன்றிய பட்ஜெட்டின் மூலம் மீண்டும் வெளிப்பட்டுள்ளது என்று அமைச்சர் ரகுபதி கடுமையாக விமர்சித்துள்ளார்.பட்ஜெட்டை குறித்து அவர் தனது ‘எக்ஸ்’ பதிவில், “தேர்தல் நடைபெறும் மாநிலங்களை கவர்ந்து சிறப்புத் திட்டங்களை அறிவிப்பது ஒன்றிய அரசின் வழக்கம்.

ஆனால் தமிழ்நாடு என்றாலே அந்த அக்கறை காணாமல் போகிறது. எவ்வளவு வாக்குறுதிகள் கொடுத்தாலும் தமிழ்நாட்டில் பாஜகவுக்கு ஆதரவு கிடையாது என்பதை அறிந்தே, திட்டமிட்டு இந்த பட்ஜெட்டில் மாநிலத்தை முற்றிலும் புறக்கணித்துள்ளனர்” என சாடினார்.ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட்டில் தமிழ்நாட்டை ஏமாற்றுவது பாஜக அரசின் தொடர்ச்சியான நடைமுறையாகி விட்டது.
‘தமிழ்நாடு’ என்ற பெயரே இடம்பெறாத பட்ஜெட்டுகளை தாக்கல் செய்த அதே அரசு, எதிர்ப்பு எழுந்ததால் இந்த முறை பெயரளவுக்கு மட்டும் மாநிலத்தை சேர்த்துள்ளது. ஆனால் நடைமுறையில் பயன்படும் எந்தச் சிறப்புத் திட்டமும் அறிவிக்கப்படவில்லை.முன்னதாக பீகார், ஆந்திரா போன்ற தேர்தல் மாநிலங்களுக்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாயில் திட்டங்கள் வாரி வழங்கிய மத்திய அரசு, தமிழ்நாட்டுக்கு மட்டும் வெறுமனே கைவிட்டுள்ளது.
வெள்ளத்தடுப்பு, தேசிய நெடுஞ்சாலை, மின் நிலையம் உள்ளிட்ட திட்டங்களுக்கு பீகாருக்கு மட்டும் சுமார் 70 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், தமிழ்நாட்டுக்கான அறிவிப்புகள் கிட்டத்தட்ட பூஜ்யம் என அவர் குற்றம்சாட்டினார்.
மாநிலங்களுக்கான வரிப்பகிர்வை 41% இலிருந்து 50% ஆக உயர்த்த வேண்டும் என்ற தமிழ்நாட்டின் நீண்டகால கோரிக்கை மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது. பிரதமராகுமுன் அதையே கோரிய மோடி, இன்று அதனை நடைமுறைப்படுத்த மறுப்பது இரட்டை நிலைப்பாட்டைக் காட்டுகிறது என்றும் ரகுபதி குறிப்பிட்டார்.மேலும், மாணவர்களின் கல்விக்கான சமக்ரா சிக்ஷா நிதி ரூ.3,548 கோடி, ஜல்ஜீவன் திட்டத்துக்கான ரூ.3,112 கோடி உள்ளிட்ட நிலுவை நிதிகளை விடுவிப்பதற்கான அறிவிப்புகளும் இல்லை.
கோவை–மதுரை மெட்ரோ திட்டம், தொழிற்துறை மீட்பு திட்டங்கள் போன்ற முக்கிய தேவைகள் அனைத்தும் புறக்கணிக்கப்பட்டுள்ளன.நாட்டின் பொருளாதாரத்திற்கு 9% பங்களிப்பு செய்யும் தமிழ்நாட்டுக்கு வரிப்பகிர்வில் வெறும் 4% மட்டுமே வழங்கப்படுவதால், ஆண்டுதோறும் சுமார் ரூ.5,000 கோடி இழப்பு ஏற்படுகிறது. அதற்குப் பதிலாக டிரெக்கிங், பறவைக் கண்காணிப்பு கோபுரம் போன்ற அற்ப அறிவிப்புகளைச் செய்து மக்களை ஏமாற்ற முயல்கிறது ஒன்றிய அரசு என அவர் விமர்சித்தார்.
கடந்த தேர்தல்களில் அறிவிக்கப்பட்ட தொழில் வழித்தடம், கடல் பூங்கா, தேசிய நெடுஞ்சாலை, மீன்பிடி துறைமுக மேம்பாடு, ஜவுளி பூங்கா போன்ற திட்டங்கள் எதுவும் நிறைவேறாத நிலையில், புதிய வாக்குறுதிகளுக்கும் நம்பிக்கை இல்லை எனவும் அவர் கூறினார்.ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டால் பங்குச்சந்தை செயல்பட்டு, கடும் சரிவால் முதலீட்டாளர்களுக்கு ரூ.10 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது.
இதுவே பட்ஜெட்டின் பலவீனத்தை வெளிப்படுத்துகிறது என்றும் சுட்டிக்காட்டினார்.இவ்வாறு தமிழ்நாட்டை தொடர்ந்து புறக்கணிக்கும் பாஜக அரசுக்கும், அதனை ஆதரிக்கும் சக்திகளுக்கும் வரவிருக்கும் தேர்தலில் தமிழக மக்கள் தக்க பதில் அளிப்பார்கள். எத்தனை முகமூடிகள் அணிந்தாலும் தமிழ்நாட்டில் அவர்கள் இனி தலையெடுக்க முடியாது என்பதே இந்த பட்ஜெட்டின் உண்மை செய்தி,” என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
English Summary
Tamil Nadu being neglected because no votes gained sensational accusation against BJP