'திமுக இருக்கும் இடத்தில் தவறு இருக்கும்'...! - சர்க்காரியா அறிக்கை முதல் செந்தில் பாலாஜி வரை... அடுக்கடுக்கான ஆதாரங்களை வெளியிட்ட முதல்வர்! - Seithipunal
Seithipunal


காவலர்கள் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நிறைவடைந்ததை தொடர்ந்து, சட்டசபையில் முதல்-அமைச்சர் விஜய் இன்று பதிலுரை அளித்தார். அப்போது, தி.மு.க. ஆட்சிக் காலத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் பல்வேறு முறைகேடுகள் மற்றும் ஊழல் தொடர்பாக அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை அவர் முன்வைத்தார்.

“ஆபாசமும் வன்மமும் நிறைந்த அரசியல் எதற்கு?”
தமிழ்நாட்டில் அண்மைக்காலமாக ஆபாசமும் வன்மமும் நிறைந்த அரசியல் போக்கு காணப்படுகிறது என்று முதல்-அமைச்சர் விஜய் தெரிவித்தார்.அரசியல் ரீதியாக கருத்துகளை பதிவு செய்வதற்கு அனைவருக்கும் உரிமை உள்ளது. ஆனால், பெண்களை இழிவுபடுத்தும் வகையிலான கருத்துகளை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. அவதூறாகவும், அநாகரிகமாகவும், ஆபாசமாகவும் பேசும் அரசியல் நமக்கு எதற்கு? பெண்களைப் பற்றி இழிவான கருத்துகளை தெரிவிப்பவர்கள் மீது சட்டம் தனது கடமையை செய்யும் என்று அவர் கூறினார்.

“எலும்பை உடைப்பேன் என்றால் அவர் எலும்பியல் மருத்துவரா?”
சட்டசபையில் உள்ள ஒரு உறுப்பினர், “எலும்பை உடைப்பேன்” என்று பேசியதாக குறிப்பிட்ட விஜய், “அவர் என்ன எலும்பியல் மருத்துவரா?” என்று கேள்வி எழுப்பினார்.தி.மு.க.வுக்கு வாக்களிக்காதவர்களுக்கு நல்ல சாவு வராது என்று ஒருவர் பேசியதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இதுபோன்ற பேச்சுகளால்தான் அவர்கள் தற்போது எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருக்கிறார்கள். மக்கள் அளித்த தீர்ப்பையாவது அவர்கள் மதிக்க வேண்டும் என்றும் விஜய் தெரிவித்தார்.மிசா காலத்தைப் பற்றி தொடர்ந்து பேசுபவர்கள், அதன் வரலாறு தனக்கும் தெரியும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.

“ஒரு சான்றை பார்க்கலாமா?”
தனது மேஜையில் இருந்த மூன்று கோப்புகளை திறக்குமாறு தி.மு.க. உறுப்பினர்கள் கூறியதை குறிப்பிட்ட விஜய், “அதில் ஒரு சான்றை பார்க்கலாமா?” என்று கேள்வி எழுப்பினார்.கடந்த ஆட்சிக் காலத்தில் அமலாக்கத்துறை அனுப்பியிருந்த விவரங்களையும், விசாரணை ஆணையத்தின் அறிக்கையில் இடம்பெற்றுள்ள தகவல்களையும் சுட்டிக்காட்டிய அவர், அதில் பல்வேறு குற்றச்சாட்டுகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்தார்.அந்த அறிக்கையை முழுமையாக படித்துக் கூறுவதற்கு இரண்டு நாட்கள் ஆகும் என்பதால், அதில் இடம்பெற்றுள்ள முக்கியமான தகவல்களை மட்டும் சுருக்கமாக எடுத்துரைப்பதாகவும் விஜய் தெரிவித்தார்.

சர்க்காரியா ஆணைய அறிக்கையை சுட்டிக்காட்டிய விஜய்
கடந்த கால தி.மு.க. ஆட்சியில் வீராணம் குழாய் திட்டத்திற்கான ஒப்பந்தம் வழங்குவதில் கமிஷன் பெறப்பட்டதாக சர்க்காரியா ஆணைய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக விஜய் தெரிவித்தார்.அந்த அறிக்கையில் ஒப்பந்தம் வழங்குவதற்காக குறிப்பிட்ட அளவில் கமிஷன் கேட்கப்பட்டதாகவும், பல்வேறு காலகட்டங்களில் லஞ்சம் வழங்கப்பட்டதாகவும் தகவல்கள் இடம்பெற்றுள்ளதாக அவர் கூறினார்.மேலும், முரசொலி கட்டிடம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களிலும் கமிஷன் பெறப்பட்டதாக அமலாக்கத்துறை குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளதாக விஜய் தெரிவித்தார்.சத்யநாராயணா பிரதர்ஸ் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்குவதற்காக அப்போதைய முதல்-அமைச்சர் கருணாநிதி தனது பதவியை தவறாக பயன்படுத்தியதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

“ஆதாரம் அருகிலேயே இருக்கிறது”
இந்த குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்கள் எங்கே என்று கேட்பவர்களுக்கு பதிலளித்த விஜய், சட்டசபை நூலகத்திலேயே அவை இருப்பதாக தெரிவித்தார்.“ஆதாரத்தை அருகிலேயே வைத்துக்கொண்டு வேறு இடங்களில் தேடுகின்றனர்” என்று அவர் விமர்சித்தார்.

“கட்சி நிதி வசூலிலும் முறைகேடு”
கட்சி நிதி வசூல் தொடர்பாகவும் அமலாக்கத்துறை பல பக்கங்களில் தகவல்களை அனுப்பியுள்ளதாக விஜய் தெரிவித்தார்.கட்சி நிதியாக குறிப்பிட்ட சதவீதம் வரை தொகை பெறப்பட்டதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளதாகவும், அதற்கான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும் அவர் கூறினார்.அந்த துறைக்கு அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாகவும் விஜய் குற்றம்சாட்டினார்.மதுபான விற்பனைத் துறையை கவனித்த அமைச்சருடன் இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகளும் இந்த விவகாரத்தில் சிக்கியுள்ளதாக அவர் தெரிவித்தார். செந்தில் பாலாஜியின் சகோதரர் தொடர்பாகவும் அமலாக்கத்துறை தகவல் தெரிவித்துள்ளதாக விஜய் கூறினார்.கட்சி நிதி வசூல் தொடர்பான விவகாரத்தில் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய நபர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

“இன்னும் கோப்புகளை திறந்தால் எத்தனை பூதங்கள் வெளிவரும்?”
இரண்டு துறைகள் தொடர்பான கோப்புகளை திறந்தாலேயே இவ்வளவு தகவல்கள் வெளிவருகின்றன என்றால், இன்னும் பல கோப்புகளை திறந்தால் எத்தனை பூதங்கள் வெளிவரும் என்று தெரியவில்லை என விஜய் கூறினார்.

“தவறு இருக்குமிடத்தில் தி.மு.க. இருக்கும்”
“தி.மு.க. இருக்கும் இடத்தில் தவறுகள் இருக்காது” என்று அவர்கள் கூறுகின்றனர். ஆனால், நான் கூறுவது, தி.மு.க. இருக்கும் இடத்தில் தவறுகள் இருக்கும்; தவறுகள் இருக்கும் இடத்தில் தி.மு.க. இருக்கும் என்பதுதான் என்று விஜய் கடுமையாக விமர்சித்தார்.ஆதாரம் வேண்டும் என்று கேட்கிறீர்களே, இதுபோதுமா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.தவறு செய்து சிக்கிக் கொள்பவர்கள் ஒரு தரப்பினர் என்றும், தவறு செய்துவிட்டு அதை வெளியில் தெரியாத வகையில் மறைப்பவர்கள் மற்றொரு தரப்பினர் என்றும் குறிப்பிட்ட விஜய், தி.மு.க. இரண்டாவது வகையைச் சேர்ந்தது என்று குற்றம்சாட்டினார்.ஊழல் என்ற வார்த்தை வந்தாலே தி.மு.க. உறுப்பினர்கள் எழுந்து நிற்கிறார்கள். ஊழல் செய்யவில்லை என்று அவர்களால் உறுதியாக கூற முடியுமா என்றும் விஜய் கேள்வி எழுப்பினார்.

“முதலில் உங்கள் ஆட்சியை திரும்பிப் பாருங்கள்”
கடந்த தி.மு.க. ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு மற்றும் போதைப்பொருள் பயன்பாடு போன்ற பிரச்சினைகள் இருந்ததாகவும் விஜய் குற்றம்சாட்டினார்.சட்டம்-ஒழுங்கு குறித்து பேசுவதற்கு முன்பு, தங்களது ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற சம்பவங்களை அவர்கள் கண்ணாடியில் திரும்பிப் பார்ப்பது நல்லது என்றும் அவர் தெரிவித்தார்.

“இயற்கையும் இறைவனும் நம் பக்கம்”
1967-ல் அண்ணா, 1977-ல் எம்.ஜி.ஆர்., 1983-ல் என்.டி.ஆர்., 2026-ல் விஜய் என்று குறிப்பிட்ட முதல்-அமைச்சர் விஜய், இயற்கையும் இறைவனும் தங்கள் பக்கம் இருப்பார்கள் என்று தெரிவித்தார்.அன்பின் முன்பு எதிரிகள் தோல்வியடைவது உறுதி என்று அவர் மூன்று முறை வலியுறுத்தினார்.“நாற்காலிக்காகவோ, அதிகாரத்திற்காகவோ நான் அரசியலுக்கு வரவில்லை. மக்களுக்கு நல்லது செய்யவும், அவர்களுக்கு செய்ய வேண்டிய நன்றிக்கடனை நிறைவேற்றவும் மட்டுமே வந்துள்ளேன்” என்று விஜய் தெரிவித்தார்.இவ்வாறு தி.மு.க. ஆட்சிக் காலம் மற்றும் கட்சி தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கடுக்காக முன்வைத்து முதல்-அமைச்சர் விஜய் தனது பதிலுரையை நிறைவு செய்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Where DMK is there will be mistakes From Sarkaria report to Senthil Balaji Chief Minister released layer upon layer evidence


கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...




சினிமா

Seithipunal
--> -->