என்னை நிர்பந்திக்க முடியாது...! - உதயநிதிக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதற்கான காரணத்தை உடைத்த சபாநாயகர்...! - Seithipunal
Seithipunal


முதலமைச்சர் விஜய்யின் பதிலுரையின்போது தி.மு.க. உறுப்பினர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டதால், தமிழ்நாடு சட்டசபையில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. தி.மு.க. உறுப்பினர்கள் தன்னை நிர்பந்தப்படுத்தி எந்த முடிவையும் எடுக்க வைக்க முடியாது என்று சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் ஆவேசமாக தெரிவித்தார்.மூன்று நாட்கள் விடுமுறைக்குப் பிறகு தமிழ்நாடு சட்டசபை இன்று காலை மீண்டும் கூடியது. காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்திற்கு பதிலளித்து முதல்-அமைச்சர் விஜய் பேசினார்.

த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர்களின் கரவொலிக்கு இடையே தனது உரையை தொடங்கிய அவர், தமிழ்நாட்டில் போதைப்பொருள் பயன்பாட்டை கட்டுப்படுத்துதல், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்தல், காவல் மரணங்களை தடுப்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் குறித்து விளக்கமளித்தார்.

பெண்களை இழிவுபடுத்தும் கருத்துகளுக்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது என்றும், தவறு செய்தவர் யாராக இருந்தாலும் சட்டம் தனது கடமையை முறையாக செய்யும் என்றும் விஜய் தெரிவித்தார்.தொடர்ந்து பேசிய விஜய், தமிழக அரசியலில் அண்மைக்காலமாக ஆபாசமும் வன்முறையும் அதிகரித்து வருவதாக விமர்சித்தார்.

“அவதூறாகவும், அநாகரிகமாகவும் பேசும் அரசியல் நமக்கு எதற்கு? இங்குள்ள ஒரு உறுப்பினர் எலும்பை உடைப்பேன் என்று பேசுகிறார். அவர் என்ன எலும்பியல் மருத்துவரா? தி.மு.க.வுக்கு வாக்களிக்காதவர்களுக்கு நல்ல சாவு வராது என்று ஒருவர் பேசுகிறார்.இதுபோன்ற பேச்சுகளால்தான் அவர்கள் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருக்கிறார்கள். மக்கள் அளித்த தீர்ப்பையாவது மதிக்க வேண்டும்” என்று விஜய் கூறினார்.மிசா காலத்தைப் பற்றி பேசுபவர்களுக்கு அதன் வரலாறு குறித்தும் தனக்குத் தெரியும் என்றும் அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து தி.மு.க. ஆட்சிக் காலத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகளை சுட்டிக்காட்டிய விஜய், சர்க்காரியா ஆணைய அறிக்கையில் இடம்பெற்றுள்ள தகவல்களை குறிப்பிட்டார்.வீராணம் குழாய் திட்டத்திற்கான ஒப்பந்தம் வழங்குவதில் லஞ்சம் பெறப்பட்டதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும், முரசொலி கட்டிடம் தொடர்பாகவும் கமிஷன் பெறப்பட்டதாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டியுள்ளதாக கூறினார்.

சத்யநாராயணா பிரதர்ஸ் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்குவதற்காக அப்போதைய முதல்-அமைச்சர் கருணாநிதி தனது பதவியை தவறாக பயன்படுத்தியதாகவும் விஜய் குற்றம்சாட்டினார்.தான் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் எங்கே என்று கேட்பவர்களுக்கு, சட்டசபை நூலகத்திலேயே அதற்கான ஆவணங்கள் இருப்பதாக விஜய் தெரிவித்தார்.“ஆதாரத்தை அருகிலேயே வைத்துக்கொண்டு வேறு இடங்களில் தேடுகின்றனர்” என்று அவர் விமர்சித்தார்.

தி.மு.க.வின் கட்சி நிதி வசூல் தொடர்பாகவும் அமலாக்கத்துறை பல்வேறு தகவல்களை தெரிவித்துள்ளதாக விஜய் கூறினார்.கட்சி நிதியாக குறிப்பிட்ட அளவு தொகை பெறப்பட்டதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளதாகவும், அதற்கான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.மதுபான விற்பனைத் துறையை கவனித்த அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாகவும் விஜய் குற்றம்சாட்டினார்.

இந்த விவகாரத்தில் இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகளும் சிக்கியுள்ளதாகவும், செந்தில் பாலாஜியின் சகோதரர் தொடர்பாகவும் அமலாக்கத்துறை தகவல் தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறினார்.மேலும், கட்சி நிதி வசூல் விவகாரத்தில் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய நபர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளதாகவும் விஜய் தெரிவித்தார்.“தி.மு.க. இருக்கும் இடத்தில் ஊழல் இருக்காது என்று அவர்கள் கூறுகின்றனர்.

ஆனால், நான் கூறுவது வேறு. தி.மு.க. இருக்கும் இடத்தில் ஊழல் இருக்கும்; ஊழல் இருக்கும் இடத்தில் தி.மு.க. இருக்கும்.ஊழல் என்ற வார்த்தையை சொன்னாலே தி.மு.க.வினர் எழுந்து நிற்கிறார்கள். ஊழல் செய்யவில்லை என்று அவர்களால் கூற முடியுமா?” என்று விஜய் கேள்வி எழுப்பினார்.கடந்த தி.மு.க. ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு மற்றும் போதைப்பொருள் பயன்பாடு உள்ளிட்ட பிரச்சினைகள் இருந்ததாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

சட்டம்-ஒழுங்கு குறித்து பேசுவதற்கு முன்பு, தங்களது ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற சம்பவங்களை அவர்கள் கண்ணாடியில் திரும்பிப் பார்ப்பது நல்லது என்றும் விஜய் தெரிவித்தார்.முதல்-அமைச்சர் தனது பதிலுரையை வழங்கிக் கொண்டிருந்தபோது, தி.மு.க. உறுப்பினர்கள் அவரது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து முழக்கங்களை எழுப்பினர்.பல உறுப்பினர்கள் எழுந்து நின்று தங்களது எதிர்ப்பை பதிவு செய்ததுடன், தங்களுக்கு பதிலளிக்க வாய்ப்பு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

இதனால் பேரவையில் கூச்சல், குழப்பம் நிலவியது.இந்த அமளிக்கு இடையே காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மானியக் கோரிக்கைகள் மீதான தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அறிவித்தார்.இதையடுத்து தி.மு.க. உறுப்பினர்கள் சபாநாயகர் இருக்கைக்கு முன்பாக அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை தங்களது இருக்கைகளுக்கு திரும்பிச் செல்லுமாறு சபாநாயகர் அறிவுறுத்தினார்.

ஆனால், தி.மு.க. உறுப்பினர்கள் தொடர்ந்து முழக்கங்களை எழுப்பியதால், சபாநாயகர் கடும் எச்சரிக்கை விடுத்தார்.“உங்கள் மிரட்டல்களுக்கெல்லாம் நான் அடிபணிய முடியாது. பேசுவதற்கு அனுமதி வழங்க முடியாது. விதிகளை மீறி தொடர்ந்து செயல்பட்டால், அவைக் காவலர்களால் வெளியேற்றப்படுவீர்கள்” என்று அவர் எச்சரித்தார்.மேலும் சபாநாயகர் கூறுகையில், “விதிகளுக்கு உட்பட்டு உங்கள் விளக்கத்தை அளிப்பதற்கான வாய்ப்புகள் அனைத்தும் இருந்தன.

ஆனால் அந்த வாய்ப்புகளை நீங்களே இழந்துவிட்டீர்கள்.முதல்-அமைச்சர் பேசத் தொடங்கியதில் இருந்தே கூச்சல், குழப்பத்தை ஏற்படுத்தியது தவறு. உங்கள் பதாகைகளை கொண்டு வந்து காண்பிப்பதற்கான இடம் இது அல்ல. உங்கள் செயல்பாட்டை வன்மையாக கண்டிக்கிறேன்” என்றார்.அப்போது முதல்-அமைச்சர் விஜய் எழுந்து, தி.மு.க. உறுப்பினர்கள் பேசுவதற்கு வாய்ப்பு வழங்குமாறு சபாநாயகரிடம் கேட்டுக்கொண்டார்.

இதனை ஏற்றுக்கொண்ட சபாநாயகர், “முதல்-அமைச்சரின் கோரிக்கையை ஏற்று, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசுவதற்கு அனுமதி வழங்குகிறேன். தி.மு.க. உறுப்பினர்கள் முதலில் தங்களது இருக்கைகளுக்குச் சென்று அமருங்கள்” என்று தெரிவித்தார்.இதையடுத்து தி.மு.க. உறுப்பினர்கள் தங்களது இருக்கைகளில் சென்று அமர்ந்தனர்.பின்னர் சபாநாயகர் பேசுகையில், “முதலிலேயே நான் இதைத்தான் செய்ய நினைத்தேன்.

முதல்-அமைச்சர் பேசியபோது நீங்கள் அமைதியாக இருந்து அவரது உரையை முழுமையாக கேட்டிருந்தால், அதற்கு பதிலளிக்க உங்களுக்கு வாய்ப்பு வழங்கியிருப்பேன்.முதல்-அமைச்சர் எப்போது பதில் அளிப்பார் என்று கேட்டவர்கள், அவர் பதிலுரை வழங்கியபோது அதை முழுமையாகக் கேட்டிருக்க வேண்டும்.அவரது பேச்சு வெளியே செல்லாமல் தடுக்க வேண்டும் என்பதுதான் உங்கள் நோக்கம் என்றால், அதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.

நீங்கள் குரல் கொடுத்துக் கொண்டிருந்தாலும், முதல்-அமைச்சர் தனது உரையை முழுமையாக நிறைவு செய்துள்ளார். இப்போது எதிர்க்கட்சித் தலைவர் பேசுவதற்கு அனுமதி வழங்குகிறேன்” என்றார்.ஆனால், எதிர்க்கட்சித் தலைவர் பேசுவதற்கான அனுமதி வழங்கப்பட்ட பின்னரும், தி.மு.க. உறுப்பினர்கள் மீண்டும் எழுந்து நின்று முழக்கங்களை எழுப்பத் தொடங்கினர்.

இதனால் ஆவேசமடைந்த சபாநாயகர், “இவ்வாறு எழுந்து நின்று என்னை நிர்பந்தப்படுத்துவதை அனுமதிக்க முடியாது. இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எனது முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டும்.தற்போது எதிர்க்கட்சித் தலைவர் பேசுவதற்கு நான் அனுமதி வழங்கவில்லை” என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.இதனால் சட்டசபையில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

You cant force me Speaker broke down reason why Udhayanidhi denied opportunity


கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...


செய்திகள்



சினிமா

Seithipunal
--> -->