ஆட்சியர் அலுவலக சாலையில் நெருப்புடனும் எரிந்த மொபட்...! நெஞ்சை பதறவைக்கும் தீ விபத்து...!
scooty caught fire Collector Office Road fire accident
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே சென்று கொண்டிருந்த மொபட் ஒன்று திடீரென தீப்பற்றி கொழுந்துவிட்டு எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கண்ணிமைக்கும் நேரத்தில் தீ மளமளவென பரவியதில், அந்த மொபட் முழுவதுமாக எரிந்து உருக்குலைந்தது. எனினும், வாகனத்தை விட்டு உடனடியாக விலகியதால் அதில் பயணம் செய்தவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

தேனி அருகே உள்ள பகுதியைச் சேர்ந்த பாண்டியன் என்பவர் இன்று தனது மொபட்டில் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் பின்புறச் சாலை வழியாக சென்று கொண்டிருந்தார்.அப்போது எதிர்பாராதவிதமாக மொபட்டின் இயந்திரப் பகுதியில் இருந்து திடீரென புகை வெளியேறியது.
இதனை கவனித்த பாண்டியன் அதிர்ச்சியடைந்தார்.நிலைமையை உணர்ந்த பாண்டியன் சற்றும் தாமதிக்காமல் மொபட்டை சாலையோரமாக நிறுத்தினார். பின்னர் வாகனத்தில் இருந்து கீழே இறங்கி பாதுகாப்பான இடத்தை நோக்கி ஓடினார்.அவர் வாகனத்தை விட்டு விலகிய சில நொடிகளிலேயே, மொபட்டின் எரிபொருள் தொட்டி பகுதியில் தீப்பற்றியது.
தொடர்ந்து தீ வேகமாகப் பரவி, மொபட் முழுவதும் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது.சிறிது நேரத்திலேயே தீயின் வெப்பம் அதிகரித்து, மொபட்டின் அனைத்து பகுதிகளும் தீக்கிரையாகின. நெருப்பு பிழம்பாக காட்சியளித்த மொபட், மெழுகு உருகுவதைப் போல உருகி முற்றிலும் சேதமடைந்தது.
வாகனத்தில் தீப்பற்றியதும் பாண்டியன் உடனடியாக விலகிச் சென்றதால், அவருக்கு எந்தவித காயமும் ஏற்படாமல் உயிர் தப்பினார்.மொபட் தீப்பற்றி எரிவது குறித்து தகவல் கிடைத்ததும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
அவர்கள் துரிதமாக செயல்பட்டு, மொபட்டில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர்.மாவட்டத்தின் முக்கிய அரசு அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் இந்த தீ விபத்து நிகழ்ந்ததால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், தீயணைப்பு நடவடிக்கையின்போது அந்தச் சாலையில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
English Summary
scooty caught fire Collector Office Road fire accident