மக்களின் வரிப்பணத்தில் வெளிநாடு சென்ற முதலமைச்சர் ஈர்த்த முதலீடுகள் எப்போது வரும்...? - டி.டி.வி. தினகரன் அனல் பறக்கும் கேள்வி - Seithipunal
Seithipunal


மக்கள் வரிப்பணத்தில் அரசு முறைப் பயணமாக வெளிநாடு சென்ற முதலமைச்சர் திரும்பி வந்துவிட்டார். ஆனால், அவர் ஈர்த்ததாக தெரிவிக்கப்பட்ட முதலீடுகள் எப்போது தமிழகத்துக்கு வரும்?” என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,"தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யின் அரசுமுறை வெளிநாட்டுப் பயணத்தின்போது ரூ.15,300 கோடிக்கும் அதிகமான முதலீட்டு முன்மொழிவுகள் மற்றும் உறுதிமொழிகள் பெறப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தமிழக அரசு செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது.

ஆனால், முதலமைச்சர் பயணிகள் விமானத்தில் பொதுமக்களுடன் பயணம் செய்தார், தமிழகத்துக்கு பெருமளவு முதலீடுகளை ஈர்த்து வருகிறார் என தவெக தரப்பில் வெளியிடப்பட்ட காணொலிகளுக்கும், முதலீடு தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள விவரங்களுக்கும் இடையே மிகப்பெரிய வேறுபாடு இருப்பதாக டி.டி.வி. தினகரன் விமர்சித்துள்ளார்.

முதலீடுகளை ஈர்ப்பதற்காக மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படும் இந்தப் பயணத்தில், முதலீட்டாளர்களுடனான சந்திப்புகள், தொழில் ஒப்பந்தங்கள், வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் அதன் மூலம் தமிழகத்துக்கு கிடைக்கக்கூடிய பொருளாதாரப் பலன்கள் குறித்து விரிவான தகவல்கள் வெளியிடப்பட வேண்டிய நிலையில், மோட்டார் வாகனப் பந்தயத்தை தொடங்கி வைத்தது, ரசிகர்களைச் சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டது போன்ற செய்திகள் மட்டுமே வெளிவந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதனால், முதலமைச்சரின் வெளிநாட்டுப் பயணம் உண்மையில் தமிழகத்துக்கு புதிய தொழில் முதலீடுகளை கொண்டு வருவதற்காக மேற்கொள்ளப்பட்டதுதானா என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுவதாகவும் டி.டி.வி. தினகரன் குறிப்பிட்டுள்ளார்.கடந்த 10-ந்தேதி சென்னையில் இருந்து புறப்பட்ட முதலமைச்சர் விஜய்யின் ஆறு நாள் அரசுமுறை வெளிநாட்டுப் பயணத்தில், 14-ந்தேதி ஒருநாள் மட்டுமே முதலீட்டாளர்களை சந்தித்ததாகவும், அன்றைய தினம் முதலீடு தொடர்பான பேச்சுவார்த்தைகள் மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டதாகவும் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்.

முதலீட்டாளர்களைச் சந்தித்த அந்த ஒரு நாளைத் தவிர, மீதமுள்ள ஐந்து நாட்களில் முதலமைச்சர் யார் யாரை சந்தித்தார்? தமிழகத்துக்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன? என்பது குறித்த விளக்கத்தை அரசு அளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் கூட்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொள்வதற்காக லண்டன் செல்ல வேண்டிய அவசியம் என்ன என்றும் டி.டி.வி. தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தியாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தையே முதலமைச்சரின் வெளிநாட்டுப் பயணத்தின் முக்கிய சாதனையாக அரசு முன்னிறுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் அவர் விமர்சித்துள்ளார்.மேலும், ஐரோப்பாவைச் சேர்ந்த முன்னணி வாகன உதிரிபாக உற்பத்தி நிறுவனம் தமிழகத்தில் ரூ.3,000 கோடி முதலீடு செய்ய விருப்பம் தெரிவித்துள்ளதாக அரசு குறிப்பிட்டுள்ள நிலையில், அந்த நிறுவனத்தின் பெயர் வெளியிடப்படாதது பல்வேறு கேள்விகளை எழுப்புவதாகவும் டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்.

பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளான செப்டம்பர் 15-ந்தேதி தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த தாய்மாமன் தங்க மோதிரம் வழங்கும் திட்டம், தந்தை பெரியாரின் பிறந்தநாளான செப்டம்பர் 17-ந்தேதி தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கான பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு அரசு நிகழ்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இத்தகைய சூழலில் முதலமைச்சரின் வெளிநாட்டுப் பயணத்தால் தமிழகத்துக்கு கிடைத்த பயன்கள் என்ன என்பதை அரசு விளக்க வேண்டும் என்றும் டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு, போதைப்பொருள் புழக்கம், விவசாயிகளின் கோரிக்கைகள், நெல் கொள்முதல், மின்சாரம், புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் திட்டம், ஆவின் பால் தட்டுப்பாடு, விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் இருப்பதாகவும், அவற்றுக்கு அரசு உரிய கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

முதலமைச்சரின் வெளிநாட்டுப் பயணம் தொடர்பாக பல்வேறு கேள்விகள் எழுந்துள்ள நிலையில், அதற்கு அரசு விரிவான விளக்கம் அளிக்க வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் வலியுறுத்தியுள்ளார்.முதலமைச்சரின் ஆறு நாள் வெளிநாட்டுப் பயணத்தில் அவர் நாள் வாரியாக சந்தித்த முதலீட்டாளர்கள் யார், அதன் மூலம் எவ்வளவு முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன, எத்தனை புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன, அதன் மூலம் எத்தனை வேலைவாய்ப்புகள் உருவாகும், அந்தத் திட்டங்கள் எத்தனை நாட்களுக்குள் செயல்பாட்டுக்கு வரும் என்பன உள்ளிட்ட முழுமையான விவரங்களை அரசு வெளியிட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த விவரங்களை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள டி.டி.வி. தினகரன், “மக்கள் வரிப்பணத்தில் அரசு முறைப் பயணமாக சென்ற முதலமைச்சர் வந்துவிட்டார். அவர் ஈர்த்த முதலீடுகள் எப்போது வரும்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.இவ்வாறு தனது அறிக்கையில் டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

When investments attracted by Chief Minister who went abroad people tax money come ttv Dhinakaran question


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?


செய்திகள்



சினிமா

Seithipunal
--> -->