தமிழக அரசின் 14,829 தொடக்கப்பள்ளிகளுக்கு மூடுவிழா நடத்த வேண்டியிருக்கும்... எச்சரிக்கை விடுத்தது அன்புமணி இராமதாஸ்! - Seithipunal
Seithipunal


பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் உள்ள 14,829 அரசு தொடக்கப்பள்ளிகளில் 5 வகுப்புகளிலும் சேர்த்து 30-க்கும் குறைவான மாணவர்கள் தான் பயில்வதாக வெளியாகியுள்ள செய்திகள் கவலையளிக்கின்றன. அரசு பள்ளிகள் மீது மக்கள் நம்பிக்கையிழந்து விட்டனர்; இதே நிலை தொடர்ந்தால் இப்பள்ளிகளுக்கு மூடுவிழா நடத்த வேண்டியிருக்கும் என்பதை உணர்த்த அரசுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை மணியாகவே இந்தத் தரவுகள் வெளியாகியுள்ளன.

தமிழ்நாடு அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடர்பாக வெளியாகியுள்ள புள்ளிவிவரங்களின்படி, மொத்தமுள்ள 24,349 அரசு தொடக்கப்பள்ளிகளில், 14,829 பள்ளிகளில், அதாவது 60.90 பள்ளிகளில் மொத்தமுள்ள 5 வகுப்புகளிலும் சேர்த்து 30-க்கும் குறைவான மாணவர்கள் மட்டுமே பயின்று வருகின்றனர். அதிலும் கூட, 6,635 பள்ளிகளில் 20-க்கும் குறைவான மாணவர்களும், 3,027 பள்ளிகளில் 10-க்கும் குறைவான மாணவர்களும் தான் பயின்று வருகின்றனர். 20 முதல் 30 மாணவர்கள் வரை பயிலும் அரசு தொடக்கப்பள்ளிகளின் எண்ணிக்கை 5,167 ஆகும். அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை எதிர்பார்க்கப்பட்டதை விட அதிக வேகத்தில் வீழ்ச்சியடைந்து வருவதையே இந்த தரவுகள் காட்டுகின்றன.

இதில் குறிப்பிடப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், 30-க்கும் குறைவான மாணவர்கள் படிக்கும் சுமார் 15 ஆயிரம் பள்ளிகளில் பாதிக்கும் மேற்பட்டவை வட மாவட்டங்களில் தான் உள்ளன என்பதாகும். குறிப்பாக, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, சேலம், கடலூர், திருவள்ளூர் ஆகிய 5 வட மாவட்டங்களில் 30-க்கும் குறைவான மாணவர்கள் பயிலும் அரசு தொடக்கப் பள்ளிகள் 3,062 உள்ளன. இது மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ள அரசு தொடக்கப்பள்ளிகளில் 20.65 விழுக்காடு என்பது குறிப்பிடத்தக்கது.

அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை வீழ்ச்சி அடைவது என்பது கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக தொடர்கதையாகி வருகிறது. அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் எண்ணிக்கை 2024-25ஆம் ஆண்டில் 45.10 லட்சமாக இருந்தது. 2025-26 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 43.03 லட்சமாக குறைந்து விட்டது. அதாவது ஒரே ஆண்டில் அரசு பள்ளிகளின் மாணவர்கள் எண்ணிக்கை 2.07 லட்சம் குறைந்துள்ளது.

இதற்கு முன் 2022-23 ஆம் ஆண்டில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் எண்ணிக்கை 50 லட்சத்து 42,026 ஆக இருந்தது. அதனுடன் ஒப்பிடும் போது 3 ஆண்டுகளில் அரசு பள்ளி மாணவர்கள் எண்ணிக்கை 7.39 லட்சம் குறைந்துள்ளது. 2015-16 ஆம் ஆண்டில் அரசு பள்ளிகளின் மாணவர்கள் எண்ணிக்கை 75.52 லட்சமாக இருந்தது. ஆனால், 11 ஆண்டுகளில் மாணவர் சேர்க்கை 32 லட்சத்து 49 ஆயிரம் குறைந்திருக்கிறது. அதாவது 11 ஆண்டுகளில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் எண்ணிக்கை 43.02% குறைந்துள்ளது.

அரசு பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து வருவது ஏன்? என்பதைக் கண்டறிய ஆய்வுகள் எதுவும் தேவையில்லை. அரசு பள்ளிகளில் போதிய எண்ணிக்கையில் ஆசிரியர்கள் இல்லாததும், அரசு பள்ளிகளில் அடிப்படைக் கட்டமைப்புகள் கூட ஏற்படுத்தப்படாததும் தான் இதற்கு காரணம் என்பதை பாட்டாளி மக்கள் கட்சி கடந்த 15 ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது. 5 வகுப்புகளைக் கொண்ட அரசு தொடக்கப் பள்ளிகளுக்கு ஒன்று அல்லது இரண்டு ஆசிரியர்கள் மட்டும் இருந்தால், அவர்களால் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் எவ்வாறு பாடம் நடத்த முடியும்? அவ்வாறு பாடமே நடத்தப்படாத பள்ளிகளில் தங்களின் குழந்தைகள் பயில்வதை எந்தப் பெற்றோர் விரும்புவார்கள்? ஆகிய வினாக்களுக்கு விடைகளை கண்டறிந்தாலே அரசு பள்ளி மாணவர்கள் எண்ணிக்கை வீழ்ச்சிக்கு தீர்வு காண தமிழக அரசால் முடியும்.

பொதுத்தளத்தில் உள்ள புள்ளிவிவரங்களின் அடிப்படையில் கடந்த 12 ஆண்டுகளாக அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருகிறது. ஒரே ஒரு ஆண்டில் கூட அரசு பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை. இந்த விவரங்கள் அனைத்தும் தமிழ்நாடு அரசுக்கு நன்றாகத் தெரியும். மத்திய அரசும் இது தொடர்பான புள்ளிவிவரங்களை ஒவ்வொரு ஆண்டும் வெளியிட்டு வருகிறது. அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை எண்ணிக்கை அதிகரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியும் ஒவ்வொரு ஆண்டும் வலியுறுத்தி வருகிறது. ஆனால், பிரச்சனைகளை களைந்து பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதே நிலை தொடர்ந்தால் இன்னும் சில ஆண்டுகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ள பள்ளிகளுக்கு மூடுவிழா நடத்துவதைத் தவிர வேறு வழியில்லை. அதைத் தடுக்க வேண்டும் என்றால், அரசு பள்ளிகளுக்கு தேவையான அளவில் ஆசிரியர்களை நியமிக்கவும், உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக பள்ளிக்கல்வித் துறைக்கு ஒதுக்கப்படும் நிதியை உடனடியாக 50 விழுக்காடும், அடுத்த மூன்றாண்டுகளில் 100 விழுக்காடும் உயர்த்த வேண்டும். அரசு பள்ளிகளுக்கு புத்துயிரூட்டுவதை ஒரு சிறப்பு இயக்கமாகவே தமிழ்நாடு அரசு முன்னெடுக்க வேண்டும்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

pmk anbumani ramadoss tn govt school education issue


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?


செய்திகள்



சினிமா

Seithipunal
--> -->