'காங்கிரஸ் கட்சியின் அழிவுக்கு காரணம் இதுதான்'; பரபரப்பை கிளப்பிய மாணிக்கம் தாகூர் எம்.பி..!
What does MP Manickam Tagore say is the reason for the decline of the Congress party
கரூர் தொகுதி காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி இன்று ''தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சிக்கு இருக்கும் அடையாளம், மரியாதை என்பது பெருந்தலைவர் காமராஜர் கட்டிக் காத்த பாரம்பரியத்திற்கும், நேரு, காந்தி குடும்பத்தின் தியாகத்திற்குமான தமிழ்நாட்டு மக்களின், அன்பும், மரியாதையும் தான் என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும்'' என்று சமூக வலைத்தளப் பதிவு செய்திருந்தார்.
அவர் வெளியிட்ட பதிவில் மேலும் கூறியுள்ளதாவது;
''எந்த ஒரு அரசியல் கட்சியும், தனது கட்சி நாடாளுமன்ற உறுப்பினரை, தேர்தல் நேரத்தில், தேர்தல் ஆணையத்திற்கு வாக்குச் சாவடி முகவர் பட்டியலை கொடுக்க விடாமல் முடக்க வேண்டும் என்று நினைக்காது. ஆனால் காங்கிரஸ் கட்சியில் அது நடக்கிறது.
தமிழ்நாடு காங்கிரசில் நடைபெறும் விசயங்கள் மிகுந்த கவலை அளிப்பதாக உள்ளது. கொள்கை நிலைப்பாடுகளை, அரசியல் செயல்பாடுகளை நீர்த்துப் போகச் செய்ய நடக்கும் முயற்சிகள் மிகுந்த வேதனை அளிக்கிறது. தினமும் தமிழ்நாடு காங்கிரஸ், மக்கள் பிரச்சினைகள் அல்லாத தவறான காரணங்களுக்காகவே செய்திகளில் அடிபடுகிறது.

தமிழ்நாடு எந்தக் காலத்திலும் இல்லாத, ஒரு பேராபத்தை,மதவாத, பிரிவினைவாத,வன்முறை சக்திகளிடமிருந்து எதிர்நோக்கி உள்ளது.
எதையாவது செய்து, மக்கள் உணர்வுகளைத் தூண்டி, ஆட்சி அதிகாரத்தைப் பிடித்து, பெருந்தலைவர் காமராசர், பெரியார் உள்ளிட்ட மாபெரும் தலைவர்களால் கட்டிக் காக்கப்பட்ட இம்மண்ணின் சமூக நீதி, சுயமரியாதை, மக்கள் நல அரசியல், வளர்ச்சியை குழிதோண்டிப் புதைக்க ஒரு கூட்டம் காத்துக் கொண்டிருக்கிறது.
இந்தச் சூழலில், எதிர்நோக்கியுள்ள தேர்தலை மிகக் கவனமாக கையாள வேண்டிய பொறுப்பு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் உள்ளது.
ஆனால் காங்கிரஸ் கட்சி அந்த மாபெரும் பொறுப்பை சரியாக உணர்ந்துள்ளதா என்கிற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. 60 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாத போதும் தொடர்ந்து காங்கிரஸ் கொடியை, ஒவ்வொரு ஊரிலும் பெருமையோடு கையில் ஏந்தியிருக்கும் காங்கிரஸ் தொண்டர்களின் உணர்வுகளையும், மதவாத, பிரிவினைவாத சூழ்ச்சிக்கு அடிபணியாமல் சமூக நீதி, சுயமரியாதை,
மாநில உரிமைகளுக்காகப் போராடுவதில் உறுதியோடு இருக்கும் நமது தமிழ்நாட்டு மக்களையும் நாம் கைவிட்டு விடக்கூடாது.

தமிழ்நாடு காங்கிரசில், எவ்வித கட்டுப்பாடுமற்று தொடரும் உட்கட்சிப் பிரச்சினைகள் மிகுந்த மனச்சோர்வை ஏற்படுத்துகிறது. சித்தாந்த ரீதியான அரசியலை காத்திரமாக முன்னெடுக்காமல், மக்கள் பிரச்சினைகளைப் பற்றிப் பேசாமல், வெறும் கூட்டல் கழித்தல்களை மட்டுமே செய்து கொண்டு,ஒரு சிலரின் சுயநலத்திற்காக தமிழ்நாடு காங்கிரஸ் கொஞ்சம் கொஞ்சமாக அழிவின் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. இதைத் தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது என்பதை உண்மையான காங்கிரஸ் தொண்டர்கள் உணர வேண்டிய நேரம் இது.
தலைவர் ராகுல்காந்தி அவர்களின் தன்னலமற்ற, கொள்கைப் பிடிப்பு மிகுந்த, அச்சமற்ற அரசியலுக்கு நேர் எதிரான பாதையில் தமிழ்நாடு காங்கிரஸ் சென்று கொண்டிருக்கிறது. அவரது கடின உழைப்பிற்கும், ஒப்பற்ற தியாகத்திற்கும் நாம் துரோகம் செய்ய முடியாது.
தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சிக்கு இருக்கும் அடையாளம், மரியாதை என்பது பெருந்தலைவர் காமராசர் கட்டிக் காத்த பாரம்பரியத்திற்கும், நேரு காந்தி குடும்பத்தின் தியாகத்திற்குமான தமிழ்நாட்டு மக்களின், அன்பும், மரியாதையும் தான் என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும்.'' என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் ஜோதிமணியின் இந்த பதிவுக்கு, விருதுநகர் தொகுதி காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் பதிலளித்து கூறியுள்ளதாவது;
''பதிவின் கடைசி பத்தியை கூட்டணி அரசியலுக்காக மறந்ததால் தான் இந்த நிலை. 2006-இல் மாநிலத்தில் அமைச்சரவையில் பங்கு பெற இருந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்ள தவறியது ஒரு உதாரணம்" என்று குறிப்பிட்டுள்ளார்.
அதாவது, கூட்டணி அரசியலுக்காக தி.மு.க. ஆட்சியை காமராஜர் ஆட்சி என்று செல்வப்பெருந்தகை உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் சிலர் புகழ்ந்ததையும், காங்கிரஸ் அடிமட்ட தொண்டர்கள் முதல் 02-ஆம் கட்ட தலைவர்கள் வரையிலான உண்மையான காங்கிரஸ் உணர்வாளர்கள் பெரும்பாலானவர்கள் விரும்பவில்லை என்பது மாணிக்கம் தாகூரின் கருத்தும் இதன் வெளிப்பாட்டை பிரதிபலிப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
English Summary
What does MP Manickam Tagore say is the reason for the decline of the Congress party