என்னது.. மூன்றும் ஒன்னா...? தமிழ்நாட்டு அரசியலில் புதிய கூட்டணி சதி...! பகீர் கிளப்பிய அமைச்சர் நிர்மல் குமார்...!
What are all three same new alliance conspiracy Tamil Nadu politics Minister Nirmal Kumar who stirred up trouble
தமிழக அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், தி.மு.க., அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. இடையே அரசியல் கூட்டணி மற்றும் ஆட்சி அமைப்பு தொடர்பான முயற்சிகள் நடைபெற்று வருவதாக சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், அமைச்சரவை பதவிகளை பகிர்ந்து கொள்வதிலேயே தற்போது போட்டி நிலவி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழக அமைச்சரவை கூட்டத்திற்குப் பிறகு தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் நிர்மல் குமார், தி.மு.க., அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. இணைந்து அரசியல் நகர்வுகளை முன்னெடுத்து வருவதாக தங்களது கட்சி நீண்ட நாட்களாக கூறி வருவதாக தெரிவித்தார். தமிழக அரசியலை தங்களது வசப்படுத்தும் நோக்கில் இந்த மூன்று கட்சிகளும் இணைந்து செயல்பட முயற்சிப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

மேலும், தவெக சட்டமன்ற உறுப்பினர்களை பணம் கொடுத்து தங்களது பக்கம் இழுக்கும் முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும், ஒரு சட்டமன்ற உறுப்பினருக்கு ரூ.50 கோடி வரை பேரம் பேசப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்த முயற்சிகள் ஜனநாயகத்திற்கு எதிரானவை என்றும் அவர் விமர்சித்தார்.தி.மு.க. முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனே பா.ஜ.க.வுடன் பேச்சுவார்த்தை நடைபெறுவதாக தெரிவித்துள்ளதாக சுட்டிக்காட்டிய அமைச்சர், முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினும், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் கடைசி கட்ட அரசியல் முயற்சியாக பா.ஜ.க.வுடன் இணையும் சூழல் உருவாகியுள்ளதாக குற்றம்சாட்டினார்.
யாருக்கு எத்தனை அமைச்சரவை பதவிகள் வழங்கப்படும் என்பதிலேயே தற்போது பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும், அதுவே அரசியல் போட்டிக்கான முக்கிய காரணமாக மாறியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், இன்னும் ஒரு ஆண்டுக்குள் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. ஆகிய இரு கட்சிகளும் தனித்தனியாக செயல்பட முடியாத நிலை உருவாகி, இறுதியில் பா.ஜ.க.வுடன் இணையும் சூழல் உருவாகும் என்றும் அவர் கூறினார்.
அ.தி.மு.க. குறித்து பேசிய அவர், மிகப்பெரிய மக்கள் இயக்கமாக இருந்த அந்தக் கட்சியை எடப்பாடி பழனிசாமி தற்போது லெட்டர் பேட் இயக்கம் போன்று மாற்றியுள்ளதாக விமர்சித்தார். மேலும், ஸ்டாலின் மற்றும் பழனிசாமி குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் எதிர்காலத்தில் பா.ஜ.க. தலைமையிலான மத்திய அமைச்சரவையில் இடம்பெற உள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.பத்திரப்பதிவுத்துறையில் நடந்ததாக கூறப்படும் முறைகேடுகள் குறித்தும் அமைச்சர் நிர்மல் குமார் கடுமையாக விமர்சித்தார்.
முந்தைய ஆட்சிக்காலத்தில் அந்தத் துறை ஊழலின் மையமாக மாறியிருந்ததாகவும், அப்போது அமைச்சராக இருந்த மூர்த்தி, "மினிஸ்டர் கட்டிங்" என்ற பெயரில் முறைகேடாக பணம் வசூலித்ததாகவும் குற்றம்சாட்டினார். ஒவ்வொரு பத்திரப்பதிவு அலுவலகத்திலும் இதற்காக தனித்தனியாக நபர்கள் நியமிக்கப்பட்டு, பணம் வசூலிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.தவெக ஆட்சியில் பத்திரப்பதிவுத்துறை முழுமையாக சீரமைக்கப்பட்டுள்ளதாகவும், பல புதிய நிர்வாக மாற்றங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இனி அந்தத் துறையில் ஊழல் அல்லது முறைகேட்டில் யார் ஈடுபட்டாலும், எந்தவித பாரபட்சமும் இன்றி சட்டப்படி கைது செய்யப்பட்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.பழனி கோவில் நில விவகாரம் குறித்து பேசிய அமைச்சர், அந்த வழக்கில் தொடர்புடைய அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றும், அரசு சார்பில் யாருக்கும் எந்தவித பாதுகாப்பும் வழங்கப்படாது என்றும் தெரிவித்தார்.
தற்போதைய ஆட்சியில் சதவீத அடிப்படையிலான பரிவர்த்தனை கலாசாரத்திற்கு இடமில்லை என்றும், பழனி கோவில் நில விவகாரத்தில் அரசுடன் தொடர்புடைய யாருக்கும் சம்பந்தம் இல்லை என்றும் அவர் விளக்கமளித்தார்.மேலும், முந்தைய ஆட்சிக்காலத்தில் திருவான்மியூர்–உத்தண்டி மேம்பால ஒப்பந்தத்தில் நடைபெற்றதாக கூறப்படும் முறைகேடுகள் கண்டறியப்பட்டுள்ளதால், அந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், முறைகேடாக வழங்கப்பட்ட ஒப்பந்தங்களை மறுஆய்வு செய்து சீரமைக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
காவல் மரணங்கள் தொடர்பாக கருத்து தெரிவித்த அமைச்சர், முந்தைய ஆட்சிகளில் இதுபோன்ற சம்பவங்கள் மறைக்கப்பட்டதாக குற்றம்சாட்டினார். தற்போதைய அரசு சட்டத்தின் அடிப்படையில் வெளிப்படையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், எந்த நபரையும் காப்பாற்றும் நோக்கம் அரசுக்கு இல்லை என்றும் தெரிவித்தார். சபரிவர்மன் குடும்பத்தினரை அமைச்சர்கள் விரைவில் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிப்பார்கள் என்றும் அவர் கூறினார்.
English Summary
What are all three same new alliance conspiracy Tamil Nadu politics Minister Nirmal Kumar who stirred up trouble