“எடப்பாடியை முதல்வராக்க விஜய்யிடம் ஆதரவு கேட்க இருந்தோம்!” – விஜய் மீது டிடிவி தினகரன் சரமாரி குற்றச்சாட்டு - Seithipunal
Seithipunal


மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் பிரசாரம் மற்றும் பரஸ்பர விமர்சனங்கள் அதிகரித்துள்ளன. இந்த நிலையில், மதுராந்தகத்தில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பிரச்சாரம் மேற்கொண்டார். பிரச்சாரத்துக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தவெக மற்றும் அதன் தலைவர் விஜய் குறித்து பல்வேறு கருத்துகளை தெரிவித்தார்.

திமுகவுடன் எடப்பாடி பழனிசாமி கூட்டணி அமைக்க முயற்சித்ததாக தவெக தரப்பில் கூறப்படுவது தவறான தகவல் என்று டிடிவி தினகரன் தெரிவித்தார். இதுதொடர்பாக ஏற்கனவே மே 8ஆம் தேதியே தான் விளக்கம் அளித்ததாகவும் அவர் கூறினார். “எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்க விஜய்யிடம் ஆதரவு கேட்க முடிவு செய்திருந்தோம்” என்று டிடிவி தினகரன் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், தங்களிடம் இருந்த 25 எம்எல்ஏக்களை தவெக தரப்பு அணுகியதாகவும், அதன் காரணமாகவே விஜய்யிடம் ஆதரவு கேட்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறினார். “திமுகவுடன் பேசியதாக கூறுவதும், பாஜக பின்னணியில் இருந்ததாக கூறுவதும் தவறு. எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்க முயற்சித்தோம். அதற்கு சிலர் ஒத்துக்கொள்ளவில்லை. பின்னர் திருமாவளவனை முதல்வராக்கும் முயற்சியும் நடந்தது” என்று அவர் தெரிவித்தார்.

இந்த விவகாரத்தில் பாஜகவுக்கு எந்தப் பங்கும் இல்லை என்றும் டிடிவி தினகரன் திட்டவட்டமாக கூறினார். மேலும், தவெக ஆட்சியை தக்கவைத்துக் கொள்வதற்காக அதிமுக எம்எல்ஏக்களை அணுகி ராஜினாமா செய்ய வைக்க முயற்சி செய்ததாகவும், மதிமுக எம்எல்ஏக்களையும் அணுகியதாகவும் அவர் குற்றம்சாட்டினார். ஆனால், மதிமுக எம்எல்ஏக்கள் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை என்றும் தெரிவித்தார்.

விஜய் ஆட்சியை காப்பாற்ற எடுத்ததாகக் கூறப்படும் முயற்சிகள் வெளிப்பட்டுவிட்டதால், அதை மறைப்பதற்காக திமுக–அதிமுக கூட்டணி குறித்த பேச்சுகள் முன்வைக்கப்படுவதாக டிடிவி தினகரன் விமர்சித்தார். இதுதொடர்பாக திருச்சியில் விஜய் பேசியபோது, “இருவரும் ஒன்றாக வருவார்கள்” என்று கூறியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், அதிமுக தலைமையை கொச்சைப்படுத்தும் வகையில் விஜய் தொடர்ந்து பேசி வருவதாக டிடிவி தினகரன் குற்றம்சாட்டினார். குறிப்பாக எடப்பாடி பழனிசாமி திமுகவுடன் கூட்டணி வைக்க முயன்றதாக கூறப்படுவதை அவர் மறுத்தார். அதிமுகவின் முன்னாள் தலைவர்களான எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்துவிட்டதாக விஜய் கூறி வருவது குறித்தும் அரசியல் விவாதம் தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில், தவெக வேட்பாளர்கள் மரகதம் குமரவேல் மற்றும் சத்தியபாமா ஆகியோரும் தங்களது பிரச்சாரங்களில் திமுக ஆதரவுடன் அதிமுக ஆட்சி அமைக்க முயற்சி செய்ததாக கூறப்படும் விவகாரத்தை தொடர்ந்து முன்வைத்து வருகின்றனர். அதே நேரத்தில், தேர்தலுக்கு முந்தைய அரசியல் நகர்வுகள் தொடர்பாக தவெக மற்றும் எதிர்க்கட்சிகள் இடையே கடுமையான வார்த்தைப் போர் நடைபெற்று வருகிறது.

இந்த சூழலில், “இப்போது விஜய் தான் களவாணி; திமுக–அதிமுக ஒன்றாகவா நிற்கிறது?” என்று டிடிவி தினகரன் கேள்வி எழுப்பினார். இடைத்தேர்தல் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ள நிலையில், டிடிவி தினகரனின் இந்தக் கருத்துகள் அரசியல் களத்தில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

We had planned to seek Vijay support to make Edappadi the Chief Minister TTV Dhinakaran levels a barrage of accusations against Vijay


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?


செய்திகள்



Seithipunal
--> -->