“இரட்டை இலைக்கு ஓட்டு போடாதீங்கனு எம்ஜிஆரே கேட்டார்.. ஆனாலும் வென்றது இரட்டை இலை!” – தாராபுரத்தின் 1977 தேர்தல் பின்னணி - Seithipunal
Seithipunal


தாராபுரம் இடைத்தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், அந்த தொகுதியில் அதிமுகவுக்கு இருக்கும் நீண்டகால அரசியல் செல்வாக்கு குறித்து விவாதங்கள் எழுந்துள்ளன. இந்த நிலையில், 1977ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் தாராபுரத்தில் நடந்த சுவாரஸ்யமான சம்பவம் ஒன்றை பத்திரிகையாளர் தராசு ஷியாம் சுட்டிக்காட்டியுள்ளார். இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டாம் என அப்போது அதிமுக நிறுவனர் எம்ஜிஆரே பிரச்சாரம் செய்த போதிலும், இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட வேட்பாளரே வெற்றி பெற்றதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தராசு ஷியாம் கூறியதாவது: எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கி சந்தித்த முதல் சட்டப்பேரவைத் தேர்தல் 1977ஆம் ஆண்டு நடைபெற்றது. அந்த தேர்தலில் தாராபுரம் தொகுதியில் ஐய்யாசாமி என்பவர் அதிமுக வேட்பாளராக நிறுத்தப்பட்டிருந்தார். ஆனால், வேட்பாளரை கட்சி சார்பில் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கும் பி பார்ம் தொடர்பாக எதிர்பாராத குழப்பம் ஏற்பட்டது.

கட்சி தலைமை அலுவலகத்தில் இருந்து அனுப்பப்பட்ட பி பார்ம், ஐய்யாசாமிக்கு பதிலாக அலங்கியம் பாலகிருஷ்ணன் என்பவரிடம் சென்றுவிட்டதாக தராசு ஷியாம் தெரிவித்துள்ளார். அலங்கியம் பாலகிருஷ்ணனும் அதிமுகவைச் சேர்ந்தவர்தான் என்றும், ஆனால் அவர் சிங்கம் சின்னத்தில் போட்டியிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையே ஐய்யாசாமி மீது சில புகார்கள் எழுந்ததாகவும், வேட்பாளர் மாற்றம் தொடர்பாக கட்சி தரப்பில் முடிவு எடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால், தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்ட ஐய்யாசாமியின் பி பார்மை தொழில்நுட்ப ரீதியாக திரும்பப் பெறவோ அல்லது ரத்து செய்யவோ முடியாத சூழல் ஏற்பட்டதாக தராசு ஷியாம் தெரிவித்துள்ளார். அதேபோல், ஐய்யாசாமியும் தனது வேட்புமனுவை வாபஸ் பெற மறுத்ததாக அவர் கூறியுள்ளார்.

இதனால், தேர்தல் விதிகளின்படி அதிமுகவின் அதிகாரப்பூர்வ பி பார்ம் ஐய்யாசாமியிடம் இருந்ததால், அவரையே அதிமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டதாக தராசு ஷியாம் தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில் அவருக்கு இரட்டை இலை சின்னமும் ஒதுக்கப்பட்டது.

இந்நிலையில், எம்ஜிஆர் சிங்கம் சின்னத்தில் போட்டியிட்ட அலங்கியம் பாலகிருஷ்ணனுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ததாகவும், இரட்டை இலைக்கு வாக்களிக்க வேண்டாம் என வாக்காளர்களிடம் கேட்டுக்கொண்டதாகவும் தராசு ஷியாம் தனது பேட்டியில் தெரிவித்துள்ளார். ஆனால், தேர்தல் முடிவில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட ஐய்யாசாமியே வெற்றி பெற்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவத்தை குறிப்பிட்ட தராசு ஷியாம், தாராபுரத்தில் இரட்டை இலைக்கு இருக்கும் நீண்டகால செல்வாக்கை புரிந்துகொள்ள இந்த வரலாற்று நிகழ்வு உதவும் என தெரிவித்துள்ளார். அதே நேரத்தில், எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா வழியில் அரசியல் செய்வதாக விஜய் தொடர்ந்து கூறி வரும் நிலையில், அதிமுக மற்றும் திமுக இடையேயான அரசியல் தொடர்புகள் குறித்து பேசும்போது வரலாற்று பின்னணியையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

1988ஆம் ஆண்டு ஜானகி அணிக்கு சட்டப்பேரவையில் பெரும்பான்மை இல்லாத சூழல் ஏற்பட்டபோது, அதிமுக ஆட்சி தொடர திமுக தலைவர் கருணாநிதியிடம் ஆர்.எம்.வீரப்பன் ஆதரவு கேட்டதாகவும் தராசு ஷியாம் தனது பேட்டியில் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே, திமுக–அதிமுக இடையேயான அரசியல் தொடர்புகள் என்பது தற்போதைய சூழலில் புதிதாக உருவான ஒன்று அல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் அடிப்படையில், திமுக–அதிமுகவை விமர்சித்து விஜய் முன்வைக்கும் கருத்துகள் வாக்காளர்களிடம் எவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது கேள்விக்குறிதான் என தராசு ஷியாம் தனது பார்வையை தெரிவித்துள்ளார். விஜய்யின் பேச்சு கட்சியினருக்கு பிடித்திருக்கலாம்; ஆனால், அது மட்டும் தேர்தல் வெற்றியை தீர்மானிக்கும் என்று கூற முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், தவெக கூட்டணி கட்சிகளுக்கு பிரச்சாரத்தில் போதிய இடம் வழங்கப்படவில்லை என்ற விமர்சனத்தையும் தராசு ஷியாம் முன்வைத்துள்ளார். கூட்டணி கட்சிகளின் உள்ளூர் நிர்வாகிகளின் பெயர்கள்கூட விஜய்யின் பேச்சில் இடம்பெறவில்லை என்றும், கூட்டணி கட்சியினரும் எதிர்பார்த்த அளவுக்கு களத்தில் பிரச்சாரம் செய்யவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

இறுதியில், ஒரு வேட்பாளரை வெற்றி பெற வைப்பதிலும் தோல்வியடையச் செய்வதிலும் கடைக்கோடியில் உள்ள வாக்காளர்களின் முடிவே முக்கியமானது என்றும் தராசு ஷியாம் தெரிவித்துள்ளார். வாக்குப்பதிவு நடைபெறும் நேரத்தில்தான் வாக்காளர்கள் உண்மையில் யாருக்கு வாக்களிக்கிறார்கள் என்பது தெரியவரும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். “நல்லதே நடக்கும்” என விஜய் கூறி வரும் நிலையில், தவெகவுக்கு உண்மையில் என்ன நடக்கிறது என்பதை தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தும் என தராசு ஷியாம் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Even MGR himself asked people not to vote for the Two Leaves symbol yet the Two Leaves won The backdrop of the 1977 election in Dharapuram


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?


செய்திகள்



Seithipunal
--> -->