“ஆளுங்கட்சியில் இருந்தும் மரியாதை இல்லை!” – தவெகவில் புலம்பும் முன்னாள் அதிமுக மாவட்டச் செயலாளர்கள்.. என்ன நடக்கிறது?
No respect despite being in the ruling party Former AIADMK district secretaries lament within TVK What is happening
தமிழகத்தில் தவெக ஆட்சியை பிடித்த பிறகு அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் தவெகவில் இணைந்தனர். குறிப்பாக அதிமுகவில் இருந்த முன்னாள் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட பல முக்கிய நிர்வாகிகள் தவெக பக்கம் சென்றனர். அந்த வகையில் தலைநகர் சென்னையைச் சேர்ந்த முன்னாள் அதிமுக மாவட்டச் செயலாளர்களான ராஜேஷ், பாலகங்கா, கே.பி.கந்தன் ஆகியோரும் தவெகவில் இணைந்தனர்.
அதிமுகவில் இருந்து வருபவர்களுக்கு உரிய மரியாதையும், முக்கிய பொறுப்புகளும் வழங்கப்படும் என தவெக தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, அதிமுகவில் உள்ள பெரும்பாலான தொண்டர்கள் தவெகவில் இணைய வேண்டும் என அழைப்பு விடுத்திருந்தார். அதேபோல், அதிமுகவில் இருந்து வருபவர்களுக்கு உரிய மரியாதையும் பதவியும் வழங்கப்படும் என அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் உறுதியளித்ததாகவும் கூறப்பட்டது.
இதையடுத்து அதிமுகவில் இருந்த பல்வேறு நிர்வாகிகள் தவெகவில் இணைந்தனர். சென்னையில் தவெக வளர்ச்சி பெற்றுவரும் நிலையில், அதிமுகவின் முக்கிய மாவட்டச் செயலாளர்களாக இருந்த கே.பி.கந்தன், ராஜேஷ், பாலகங்கா ஆகியோரும் தவெகவில் இணைந்தனர். அவர்களை புஸ்ஸி ஆனந்த் நேரில் வரவேற்றதாகவும் கூறப்படுகிறது.
ஆனால், தவெகவில் இணைந்த பின்னர் இவர்களுக்கு எதிர்பார்த்த அளவில் முக்கிய பொறுப்புகள் வழங்கப்படவில்லை என்ற அதிருப்தி ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே சென்னையில் தவெக நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்கள் பல்வேறு பொறுப்புகளில் இருப்பதால், புதிதாக மாற்றுக் கட்சிகளில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகளை வழங்குவதில் கட்சிக்குள் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே மதுராந்தகம் இடைத்தேர்தல் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளதால், சென்னையைச் சேர்ந்த தவெக அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பலரும் அங்கு முகாமிட்டு தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், அதிமுகவில் இருந்து தவெகவுக்கு வந்த முன்னாள் மாவட்டச் செயலாளர்களுக்கு கட்சி தலைமையிடமிருந்து எதிர்பார்த்த அளவுக்கு அழைப்பு வரவில்லை என்ற ஆதங்கம் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன், மரிய வில்சன் உள்ளிட்டோர் தங்களை சந்திப்பதோ, தேர்தல் பணிகள் தொடர்பாக ஆலோசனை நடத்துவதோ இல்லை என முன்னாள் அதிமுக நிர்வாகிகள் தங்களது ஆதரவாளர்களிடம் கூறி வருவதாகவும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. அதேநேரத்தில், நீண்ட காலமாக விஜய் மக்கள் இயக்கத்தில் இருந்தவர்களுக்கே கட்சியில் முக்கியத்துவம் வழங்கப்படுவதாகவும் அவர்கள் கருதுவதாக கூறப்படுகிறது.
இருப்பினும், உள்ளூரில் தங்களது அரசியல் செல்வாக்கு குறைந்துவிடக்கூடாது என்பதற்காக, சொந்த செலவில் வாகனங்களில் சென்று மதுராந்தகத்தில் தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தினமும் சொந்த செலவில் பெட்ரோல் போட்டு சென்று வரும் நிலையில், கட்சியில் இருந்து உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்ற மனவருத்தம் அவர்களிடம் இருப்பதாக கூறப்படுகிறது.
“அதிமுகவில் இருந்திருந்தால் மரியாதையுடன் இருந்திருப்போம். தற்போது ஆளுங்கட்சியில் இருந்தாலும் எங்களை யாரும் மதிப்பதில்லை” என முன்னாள் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் தங்களது ஆதரவாளர்களிடம் புலம்பி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிமுகவில் இருந்து பெருமளவில் நிர்வாகிகளை இணைத்துக் கொண்ட தவெகவுக்கு, அவர்களுக்கு உரிய அரசியல் இடத்தை வழங்குவது தொடர்பாக உருவாகியுள்ள இந்த அதிருப்தி புதிய சவாலாக மாறுமா என்பது இடைத்தேர்தல் களத்தில் கவனம் பெற்றுள்ளது.
English Summary
No respect despite being in the ruling party Former AIADMK district secretaries lament within TVK What is happening