விசிக, மதிமுகவுக்கு சோபா அனுப்பியது உண்மை தான்! ஆதவ் அர்ஜுனா பேச்சு! அதிர்ச்சியில் திருமாவளவன்!
It is true that sofas were sent to VCK and MDMK Aathav Arjuna speaks out Thirumavalavan left shocked
மதுராந்தகம் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக கூட்டணியின் பொதுக்கூட்டத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா திமுகவை கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார். விசிக, மதிமுக, ஐயூஎம்எல் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளை தவெக வரவேற்றதன் பின்னணி குறித்தும் விளக்கம் அளித்த அவர், வைகோ மற்றும் திருமாவளவனை யாராலும் பணம் கொடுத்து வாங்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
மதுராந்தகம் தொகுதியில் தவெக கூட்டணி கட்சிகளின் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் விசிக தலைவர் திருமாவளவன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, காங்கிரஸ் மாநிலத் தலைவர் மாணிக்கம் தாகூர், அமைச்சர் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட கூட்டணி தலைவர்கள் பங்கேற்றனர். தவெக கூட்டணி அமைக்கப்பட்ட பிறகு நடைபெறும் முதல் பெரிய பொதுக்கூட்டமாக இது அமைந்தது.
இந்த கூட்டத்தில் பேசிய ஆதவ் அர்ஜுனா, திமுக கூட்டணியில் இருந்து கட்சிகளை வெளியேற்றுவதற்காக தவெக தரப்பில் சோபா அனுப்பப்பட்டதாக திமுக தரப்பில் கூறப்படுவதை குறிப்பிட்டார். “ஆமாம், சோபா அனுப்பினோம். ஐயூஎம்எல் கட்சியினர் 60 ஆண்டுகளாக அமைச்சரவையில் கால் மேல் கால் போட்டு அமர்வதற்காக சோபா அனுப்பினோம்” என்று அவர் பேசினார்.
மேலும், அமைச்சரவையில் குறிப்பிட்ட குடும்பத்தினருக்கு மட்டுமே தொடர்ந்து வாய்ப்பு வழங்கப்பட வேண்டுமா என்றும் அவர் கேள்வி எழுப்பினார். ஒடுக்கப்பட்ட சமூகத்தில் இருந்து வன்னி அரசு அமைச்சராக வரக்கூடாதா என்றும் கேள்வி எழுப்பிய ஆதவ் அர்ஜுனா, அது தனிநபருக்கான பதவி அல்ல என்றும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கான பிரதிநிதித்துவம் என்றும் தெரிவித்தார்.
விசிக மற்றும் ஐயூஎம்எல் கட்சிகள் அமைச்சரவையில் பதவி கேட்டால், அதனை ‘சோபா வாங்கிவிட்டார்கள்’ என்று விமர்சிப்பது சரியா என்றும் அவர் கேள்வி எழுப்பினார். மேலும், காங்கிரஸ் பாஜக கூட்டணியில் இருந்து விலகி வேறு கூட்டணிக்கு சென்ற வரலாறும் அனைவருக்கும் தெரியும் என்றும் கூறினார்.
விசிக தலைவர் திருமாவளவன் மற்றும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆகியோரை யாராலும் பணம் கொடுத்து வாங்க முடியாது என்றும் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார். கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களை மரியாதையுடன் அணுகுவதாகவும் அவர் கூறினார்.
தொடர்ந்து உதயநிதி ஸ்டாலினை விமர்சித்த ஆதவ் அர்ஜுனா, கூட்டணி இல்லாமல் இருந்திருந்தால் உதயநிதி ஸ்டாலின் தேர்தலில் டெபாசிட் கூட பெற்றிருக்க முடியாது என தனது அரசியல் கருத்தை தெரிவித்தார். கூட்டணி கட்சிகளின் ஆதரவால்தான் பல இடங்களில் வெற்றி சாத்தியமாகிறது என்றும் அவர் கூறினார்.
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தலில் வாக்குகளைப் பெறுவதற்காக பணம் வழங்க மாட்டோம் என்றும், தவெக தலைவர் விஜய் மீது தங்களுக்கு நம்பிக்கை இருப்பதாகவும் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார்.
திமுகவை தொடர்ந்து விமர்சித்த அவர், அந்த கட்சி அதிகாரத்தை மையமாக வைத்தே அரசியல் செய்வதாக குற்றம்சாட்டினார். திமுக இரண்டாவது முறையாக வெற்றி பெற்ற வரலாறு இல்லை என்றும், கூட்டணி இல்லாமல் திமுகவால் கணிசமான தொகுதிகளில் வெற்றி பெற முடியுமா என்றும் அவர் சவால் விடுத்தார்.
மதுராந்தகம் இடைத்தேர்தல் பிரச்சாரம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தவெக கூட்டணியின் முதல் பொதுக்கூட்டத்தில் கூட்டணி தலைவர்கள் ஒரே மேடையில் பங்கேற்றிருப்பதும், ஆதவ் அர்ஜுனா திமுகவை கடுமையாக விமர்சித்துப் பேசியிருப்பதும் அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.
English Summary
It is true that sofas were sent to VCK and MDMK Aathav Arjuna speaks out Thirumavalavan left shocked