நள்ளிரவில் மாணவி ஏன் வெளியே வந்தார்... மம்தா சர்ச்சை பேச்சு!
WB College girl abuse case TMC Mamata
மேற்கு வங்கத்தின் துர்காபூரில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குப் பின்புறம் கடந்த வெள்ளிக்கிழமை இரவு 23 வயது எம்பிபிஎஸ் மாணவி ஒருவருக்கு மீது கூட்டுப் பாலியல் வன்கொடுமை நடந்தது. ஒடிசாவைச் சேர்ந்த அந்த மாணவி, துர்காபூரிலுள்ள மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படித்து வந்தார்.
அன்று இரவு ஆண் நண்பருடன் வெளியே உணவருந்த செல்லும்போது, வழியில் கும்பல் ஒன்று அவர்களைத் தாக்கி, மருத்துவமனை வளாகத்தின் பின்புறம் இழுத்துச் சென்று மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தது. தற்போது மாணவி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவத்துடன் தொடர்புடைய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்; மேலும் 2 பேர் மீது தேடுதல் நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன.
இந்தச் சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரியில் பயிற்சி மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டிருந்தார். அந்த வழக்கில் குற்றவாளி ஆயுள் தண்டனை பெற்றார். இப்போது மீண்டும் இதேபோன்ற சம்பவம் நிகழ்ந்திருப்பது மக்களிடையே கோபத்தையும் அச்சத்தையும் உருவாக்கியுள்ளது.
இந்நிலையில், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி செய்தியாளர்களிடம், “இது ஒரு தனியார் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் நடந்தது. மாணவி எப்படி இரவு 12.30 மணிக்கு வெளியே வந்தார் என்பதையும் விசாரிக்க வேண்டும். தனியார் கல்லூரிகள் தங்கள் மாணவர்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். பெண்களும் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் முன் எச்சரிக்கை அவசியம்,” என்றார்.
அதே நேரத்தில், “இத்தகைய குற்றங்கள் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும். மூன்று குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர், மற்றவர்களும் விரைவில் பிடிக்கப்படுவார்கள்,” எனவும் அவர் தெரிவித்தார்.
English Summary
WB College girl abuse case TMC Mamata