எடப்பாடிக்கு எதிராக வேலுமணி–சண்முகம் தரப்பு புதிய வியூகம்!ரூட் போட்டு கொடுத்த அமித்ஷா.. களமிறங்கிய எஸ்பி வேலுமணி, சிவி சண்முகம்!
Velumani Shanmugam faction devises a new strategy against Edappadi
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அரசியல் செய்து வரும் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி மற்றும் சிவி சண்முகம் தரப்பு, தற்போது சட்டப்பேரவைக்குள் தனி அணியை உருவாக்க முயற்சித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் ஒரு பகுதியாகவே பட்ஜெட் விவாதத்திற்கு முன்பாக அமைச்சர் ஆனந்த் மற்றும் சபாநாயகர் ஜேசிடி பிரபாகரை அவர்கள் சந்தித்ததாக கூறப்படுகிறது.
வேளாண் பட்ஜெட் உரை வாசிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அதிமுக முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி.வேலுமணி, சிவி சண்முகம் மற்றும் கே.பி.அன்பழகன் ஆகியோர் அமைச்சர் ஆனந்தின் அறைக்குச் சென்று சுமார் 10 நிமிடங்கள் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆலோசனையில் அமைச்சர் செங்கோட்டையனும் பங்கேற்றதாக கூறப்படுகிறது.
இதையடுத்து எஸ்.பி.வேலுமணி தரப்பினர் சபாநாயகர் ஜேசிடி பிரபாகரையும் சந்தித்ததாக தெரிகிறது. பட்ஜெட் விவாதம் தொடங்குவதற்கு முன்பாக இந்த சந்திப்பு நடைபெற்றது அரசியல் வட்டாரங்களில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
கடந்த சில மாதங்களாகவே எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக எஸ்.பி.வேலுமணி, சிவி சண்முகம் உள்ளிட்டோர் அரசியல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. அதிமுக தலைமையை கைப்பற்றும் நோக்கத்துடன் செயல்பட்டதாக கூறப்பட்ட நிலையில், பின்னர் பல்வேறு அரசியல் சூழ்நிலைகளால் எடப்பாடி பழனிசாமி அணியுடன் இணைந்து செயல்பட வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே எடப்பாடி பழனிசாமியை அதிமுக தலைமையிலிருந்து அகற்ற பாஜகவின் உதவியை நாடியதாகவும், அது சாத்தியமில்லையெனில் தவெக பக்கம் செல்லத் தயாராக இருப்பதாகவும் வேலுமணி தரப்பு தெரிவித்ததாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டது.
இந்த நிலையில், கடந்த வாரம் எஸ்.பி.வேலுமணி தரப்பினர் டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அப்போது உடனடியாக தவெகவில் இணைய வேண்டாம் என்றும், அதற்கு பதிலாக சட்டப்பேரவைக்குள் ‘போட்டி அதிமுக’ போன்ற தனி அணியை உருவாக்க முயற்சி செய்யலாம் என்றும் ஆலோசனை வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து சட்டப்பேரவையிலேயே தனி அணியாக செயல்படுவதற்கான முதல் கட்ட நடவடிக்கைகளை வேலுமணி–சண்முகம் தரப்பு மேற்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பட்ஜெட் விவாதத்தின்போது எடப்பாடி பழனிசாமிக்கு பேச வாய்ப்பு வழங்கப்பட்ட பின்னர், தங்களுக்கும் பேசுவதற்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என அமைச்சர் ஆனந்த் மற்றும் சபாநாயகர் ஜேசிடி பிரபாகரிடம் அவர்கள் கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது.
இதற்கு அமைச்சர் ஆனந்தும், சபாநாயகர் ஜேசிடி பிரபாகரும், முதல்வர் விஜய்யிடம் ஆலோசித்து முடிவு செய்வதாக பதிலளித்ததாக தெரிகிறது. இதனால் வேலுமணி தரப்பு அதிருப்தி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
சட்டப்பேரவைக்குள் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தனி அணியை உருவாக்கும் முயற்சி வெற்றி பெறுமா, தவெக அரசு இதற்கு அனுமதி அளிக்குமா, அல்லது இந்த முயற்சி அடுத்த கட்டத்தில் வேறு அரசியல் கூட்டணியாக மாறுமா என்பது தமிழக அரசியல் வட்டாரங்களில் தற்போது பரபரப்பாக எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும், எஸ்.பி.வேலுமணி மற்றும் சிவி சண்முகம் தரப்பின் இந்த முயற்சிகள் குறித்தும், அமித்ஷாவுடனானதாக கூறப்படும் சந்திப்பு குறித்தும் சம்பந்தப்பட்ட தரப்புகளிடம் இருந்து அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் இதுவரை வெளியாகவில்லை.
English Summary
Velumani Shanmugam faction devises a new strategy against Edappadi