இபிஎஸ் உத்தரவுக்கு நோ சொன்ன வேலுமணி... அதிமுகவில் மீண்டும் வெடித்தது உள்கட்சிப் போர்! - எஸ்.பி.வேலுமணி தரப்பு கடிதம்..
Velumani said no EPS order internal war broke out again AIADMK Letter from SP Velumani
அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டத்தில், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட சொந்த மாவட்டத்தைத் தவிர்த்து வேறு மாவட்டங்களில் நடைபெறும் போராட்டங்களில் பங்கேற்க முடியாது என முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தரப்பு தெரிவித்துள்ளது. இந்த நிலைப்பாடு அதிமுகவில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக சந்தித்த தோல்வியைத் தொடர்ந்து, கட்சிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக எஸ்.பி. வேலுமணி தரப்பு எம்.எல்.ஏ.க்கள் தனி அணியாக செயல்பட்டனர். சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் அவர்கள் தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததை அடுத்து, அதிமுகவில் இபிஎஸ் அணி, எஸ்.பி. வேலுமணி அணி என இரு அணிகள் உருவாகின.

பின்னர் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து இரு தரப்பினரும் மீண்டும் ஒன்றிணைந்தனர். இதற்கிடையில், சி. விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் பலர் தவெகவில் இணைந்தனர்.அதிமுகவின் தேர்தல் தோல்விக்கான காரணங்களை விரிவாக ஆராய வேண்டும் என்று சி.வி. சண்முகம் மற்றும் எஸ்.பி. வேலுமணி ஆகியோர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
மேலும், ஏற்கனவே வகித்து வந்த கட்சி பொறுப்புகளை மீண்டும் வழங்க வேண்டும் என்று வேலுமணி தரப்பினர் எடப்பாடி பழனிசாமிக்கு இரண்டு முறை கடிதம் அனுப்பியதாகவும், அதற்கு இதுவரை பதில் அளிக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.இந்த சூழலில், சென்னை பாலவாக்கத்தில் உள்ள சி.வி. சண்முகத்தின் இல்லத்தில் நேற்று இரவு எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், கே.பி. அன்பழகன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர்.
சுமார் 5 மணி நேரம் நடைபெற்ற இந்த ஆலோசனை அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றது.இதற்கிடையே, விவசாயக் கடன் தள்ளுபடி மற்றும் மேகதாது அணை விவகாரம் உள்ளிட்ட பிரச்சினைகளில் தவெக அரசின் நிலைப்பாட்டை கண்டித்து, ஆகஸ்ட் 14-ந்தேதி மாநிலம் முழுவதும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக அறிவித்தது.இந்த நிலையில், வேலுமணி தரப்பில் இருந்து கட்சித் தலைமைக்கு புதிய கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
காவிரி விவகாரத்தில் கர்நாடக அரசை கண்டித்து அதிமுக அறிவித்துள்ள போராட்டத்திற்கு தங்களது முழு ஆதரவு இருப்பதாக தெரிவித்துள்ள அவர்கள், சொந்த மாவட்டத்தைத் தவிர்த்து வேறு மாவட்டங்களில் நடைபெறும் ஆர்ப்பாட்டங்களில் தங்களால் பங்கேற்க முடியாது என தெரிவித்துள்ளனர்.
மேலும், தங்களை புறக்கணிக்கும் நோக்கத்திலேயே வேறு மாவட்டங்களில் போராட்டத்திற்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாக தாங்கள் கருதுவதாகவும் வேலுமணி தரப்பு தெரிவித்துள்ளது. ஏற்கனவே வகித்து வந்த மாநில மற்றும் மாவட்ட பொறுப்புகள் மீண்டும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்ட உறுதி என்ன ஆனது என்றும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
ராமநாதபுரத்தில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு நத்தம் விஸ்வநாதனும், தேனியில் நடைபெறும் போராட்டத்திற்கு எஸ்.பி. வேலுமணியும் தலைமை தாங்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்ததாக கூறப்படுகிறது.
ஆனால், வேறு மாவட்டங்களில் நடைபெறும் போராட்டங்களுக்கு தலைமை தாங்க முடியாது என இருவரும் கட்சித் தலைமைக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த புதிய நிலைப்பாடு அதிமுகவில் மீண்டும் உள்கட்சி விவாதத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Velumani said no EPS order internal war broke out again AIADMK Letter from SP Velumani