தமிழ்நாட்டுக்குள் இந்தி நுழைவதற்கான "பாசிசத்தின் மெயின் டீமாகச் செயல்படுவது யார்?'' வேல்முருகன் கேள்வி..!
Velmurugan questions who is allowing Hindi to enter Tamil Nadu government departments
''நெடுஞ்சாலை முதல் மருத்துவமனை வரை, இந்தியின் ஆதிக்கமா? ஒவ்வொரு முறையும் இந்தியை அரசுத் துறைகளுக்குள் நுழையவிடுவது யார்? இந்தித் திணிப்புக்குத் துணைபோகும் அந்த “கறுப்பு ஆடுகள்” யார்? தமிழ்நாடு அரசு அவர்களை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்குமா?''என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;
''தமிழகத்தின் இருமொழிக் கொள்கையைத் தரைமட்டமாக்கும் வகையில், மாநில அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கும் பல்வேறு துறைகளில் இந்தி இடம்பெறும் சம்பவங்கள் அடுத்தடுத்து வெளிவருவது கடும் கண்டனத்திற்குரியது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் நாசரேத் மாநில நெடுஞ்சாலையில் தமிழ், ஆங்கிலத்துடன் இந்தி இடம்பெற்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, அந்த இந்தி எழுத்துகள் அகற்றப்பட்டதுடன், இரு நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டனர்.
அந்தப் பிரச்சினை ஓய்வதற்குள், கரூர் மற்றும் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு வழங்கப்பட்ட மருந்து உறைகளில், மருந்து உட்கொள்ளும் முறைகள் உள்ளிட்ட விவரங்கள் தமிழ், ஆங்கிலத்துடன் இந்தியிலும் அச்சிடப்பட்டிருந்தது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. 2025 டிசம்பரில் இந்த உறைகள் அச்சிடப்பட்டதாகவும், தற்போது அவற்றின் பயன்பாட்டை நிறுத்த மருத்துவமனை நிர்வாகங்கள் உத்தரவிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அப்படியானால், இத்தனை மாதங்களாக அரசு மருத்துவமனைகளுக்குள் இந்தி இடம்பெற்றதை நிர்வாகம் கவனிக்காமல் இருந்ததா? அல்லது தெரிந்தே அனுமதித்ததா? இந்தி அச்சிடப்பட்ட மருந்து உறைகளைத் தேர்வு செய்து அரசுப் பணத்தில் கொள்முதல் செய்தது யார்? அச்சு மாதிரியைச் சரிபார்த்து ஒப்புதல் அளித்த அதிகாரிகள் யார்?
ஒவ்வொரு முறையும் இந்தியை அரசுத் துறைகளுக்குள் நுழையவிடுவது யார்? இந்தித் திணிப்புக்குத் துணைபோகும் அந்த “கறுப்பு ஆடுகள்” யார்? தமிழ்நாடு அரசு அவர்களை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்குமா?
அனைத்து சாதியினருக்கும் அர்ச்சகர் பணி நியமன ஆணை வழங்க தமிழ்நாடு அரசின் நிர்வாகக் கட்டமைப்புக்குள் இந்தி நுழைவதற்கான "பாசிசத்தின் மெயின் டீமாகச் செயல்படுவது யார்?” மக்கள் கண்டுபிடிக்கும் ஒவ்வொரு முறையும் கீழ்மட்ட அதிகாரிகளை மட்டும் பலிகடாவாக்கிவிட்டு, பின்னணியில் முடிவெடுத்தவர்களை அரசு பாதுகாக்கிறதா?
இந்நிலையில், மதுரை அருள்மிகு கள்ளழகர் திருக்கோயில் நுழைவாயிலில் தமிழ் எழுத்துகள் அகற்றப்பட்டதாக எழுந்துள்ள சர்ச்சையும் கூடுதல் கேள்விகளை எழுப்பியுள்ளது. அரசு தரப்பில் தமிழ் அகற்றப்படவில்லை என மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளதால், அந்தப் பெயர்ப்பலகையில் உண்மையில் என்ன மாற்றம் செய்யப்பட்டது என்பதையும், அதற்கான ஆவணங்களையும் அரசு வெளிப்படையாக வெளியிட வேண்டும்.
கோயில் பெயர்ப்பலகையில் மாற்றம் செய்தது யார்? எந்த உத்தரவின் அடிப்படையில் செய்தார்கள்? தமிழுக்கு எதிரான எந்த மாற்றமும் நடைபெறவில்லை என்பதை அரசு வெளிப்படையாக நிரூபிக்கத் தயாரா?
நெடுஞ்சாலைப் பலகை, அரசு மருத்துவமனை மருந்து உறை, கோயில் பெயர்ப்பலகை என வெவ்வேறு இடங்களில் ஒரே மொழி தொடர்பான சர்ச்சைகள் தொடர்ந்து எழுவது சாதாரண நிர்வாகத் தவறுகளின் தொடர்ச்சியா? அல்லது அரசு நிர்வாகத்தின் பல்வேறு அடுக்குகளில் கொள்கைக்கு முரணான செயல்பாடுகள் ஊடுருவியுள்ளனவா?
தமிழ்நாட்டின் இருமொழிக் கொள்கையை மதிப்பதாகக் கூறும் அரசு, அதன் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள துறைகளிலேயே இந்தி இடம்பெறுவதைத் தடுக்க வேண்டும். அனைத்து அரசு நிறுவனங்களிலும் பயன்படுத்தப்படும் அறிவிப்புப் பலகைகள், ரசீதுகள், மருந்து உறைகள், விண்ணப்பப் படிவங்கள் உள்ளிட்ட அச்சுப் பொருட்களை உடனடியாகத் தணிக்கை செய்து, இருமொழிக் கொள்கைக்கு முரணானவற்றை அகற்ற வேண்டும்.
மேலும், இந்தித் திணிப்புக்கு துணைபோகும் அதிகாரிகள் யாராக இருந்தாலும் அவர்களை அடையாளம் கண்டு, பொறுப்பை நிர்ணயித்து, துறைரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.''எனத் தெரிவித்துள்ளார்.
English Summary
Velmurugan questions who is allowing Hindi to enter Tamil Nadu government departments