ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படுவதற்கான ஒப்பந்த அறிவிப்புக்கு சிபிஐஎம் எதிர்ப்பு..! - Seithipunal
Seithipunal


''மின்சார சட்ட திருத்த மசோதா இதுவரை நாடாளுமன்றத்தில் நிறைவேறவில்லை. ஆனாலும் ஒன்றிய பாஜக அரசு ஸ்மார்ட் மீட்டரை பொருத்துவதற்கான நிர்ப்பந்தங்களை அனைத்து மாநில அரசுகள் மீதும் திணித்து வருகிறது.

தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் அழைப்பு விடுத்துள்ள ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படுவதற்கான ஒப்பந்த புள்ளி அறிவிப்பை கைவிட வேண்டும்.'' என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

''தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படுவதற்கான ஒப்பந்த புள்ளிகளை கோரி அழைப்பு விடுத்துள்ளது. ஸ்மார்ட் மீட்டர் திட்டம் என்பது மின் வாரியத்தை முழுக்க முழுக்க தனியார் வசம் ஒப்படைக்கிற திட்டத்தின் ஒரு பகுதியே ஆகும். ஆகவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இத்தகைய ஒப்பந்த புள்ளி அறிவிப்பினை வன்மையாக கண்டிப்பதோடு அதை கைவிட வேண்டுமெனவும் வலியுறுத்துகிறது.

மின்சார சட்ட திருத்த மசோதா இதுவரை நாடாளுமன்றத்தில் நிறைவேறவில்லை. ஆனாலும் ஒன்றிய பாஜக அரசு ஸ்மார்ட் மீட்டரை பொருத்துவதற்கான நிர்ப்பந்தங்களை அனைத்து மாநில அரசுகள் மீதும் திணித்து வருகிறது.

2023-ஆம் ஆண்டு திமுக அரசு இத்தகைய ஒப்பந்த புள்ளிகளை கோரிய போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அதனை கடுமையாக எதிர்த்தது. திமுக அரசும் அதனைத் திரும்ப பெற வேண்டி வந்தது. தற்போது தவெக அரசும் அதே பாதையில் பயணிக்கிறது. தமிழ்நாடு முழுவதும் உள்ள 12 மண்டலங்களிலும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்துகிற பணியினை துவக்கி உள்ளது.

கேரளாவில் இடது ஜனநாயக முன்னணி அரசு இருந்தபோது ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் பணியை அரசு நிறுவனமே தனது மூலதன செலவில் (Capex முறை) சோதனை ஓட்டம் மூலமாக துவக்கியது.

ஆனால், தமிழ்நாட்டில் ஒப்பந்த புள்ளிகள் தனியாரிடமிருந்து வரவேற்கப்பட்டு (Totex முறை) செய்யப்படுவதால் இது தனியார் மயத்திற்கான நகர்வாகவே உள்ளது என்பது தெளிவு. இதன் விளைவுகள் எதிர்காலத்தில் மிகக் கடுமையானவையாக இருக்கும். முழுக்க முழுக்க மின்சார சேவையை சந்தையின் சூதாட்டத்திற்கு ஒப்படைப்பதே அன்றி வேறு ஒன்றும் இல்லை.

தற்போது நடைமுறையில் உள்ள 200 யூனிட் இலவச மின்சாரம், விவசாயத்திற்கு வழங்கப்படும் இலவச மின்சாரம், சிறு குறு தொழில்களுக்கு வழங்கப்படும் மானியங்கள், கைத்தறி நெசவு தொழிலுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரம், குறுக்கு மானியங்கள் உள்ளிட்ட பல்வேறு சமூக நல நடவடிக்கைகள் கேள்விக்குறியாக்கப்படும்.

மின்சாரக் கட்டணம், விநியோகம் மீதான அரசின் கட்டுப்பாடும் கை கழுவப்படும். வணிக நிறுவனங்களுக்கு தற்போது விதிக்கப்படும் உச்ச நேரக் கட்டணங்கள் வீடுகள் மீதும் திணிக்கப்படும். இது தவிர மாநில உரிமைகள், சமூக நீதி, வேலைவாய்ப்புகள் மீதும் கடுமையான பாதிப்புகளை தனியார் மயம் ஏற்படுத்தும்.

ஆகவே, அரசின் இத்தகைய முடிவு எந்த வகையிலும் ஏற்கத்தக்கது அல்ல. ஒன்றிய அரசின் நிர்பந்தத்திற்கும், நவீன தாராளமய பொருளாதாரப் பாதையின் அழுத்தத்திற்கும் பணிகிற இம்முடிவை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.'' எனத் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

CPIM opposes tender notification for smart meter installation


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?


செய்திகள்



Seithipunal
--> -->