''மதம் மாற்றும் நடவடிக்கைகளில் ஈடுபடும் அமைப்புகளுக்கு எப்சிஆர்ஏ பதிவு மறுக்கப்பட வேண்டும்''; உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு..! - Seithipunal
Seithipunal


''மத மாற்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் அமைப்புகள் வெளிநாடுகளில் இருந்து நிதி பெற அனுமதிக்க கூடாது.'' என உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளதோடு, அறக்கட்டளை போன்ற அமைப்புகள் எப்சிஆர்ஏ சட்டத்தில் பதிவு செய்வதை உரிமையாகக் கோர முடியாது. வெளிநாட்டு நன்கொடைகளைப் பெறுவது சட்டப்பூர்வமான உரிமையோ அல்லது முழுமையான உரிமையோ இல்லை என உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே தெளிவுபடுத்தியுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது.

கொடைக்கானல் கன்சீயன் பப்ளிக் அறக்கட்டளை சார்பில் எப்சிஆர்ஏ சட்டத்தின் (வெளிநாட்டு நிதியுதவி ஓழுங்குமுறை சட்டம்) கீழ் வெளிநாட்டு நிதியுதவி பெற சான்றிதழ் கோரி விண்ணப்பிக்கப்பட்டது. 

இந்த விண்ணப்பத்தை நிராகரித்து மத்திய உள்துறை துணை செயலாளர் 19.1.2025-இல் உத்தரவிட்டார். குறித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி, கொடைக்கானல் கன்சீயன் பப்ளிக் அறக்கட்டளை சார்பில் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதன்படிம், இந்த மனுவை, நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், எம்.டி.சுமதி ஆகியோர் விசாரித்தனர். அப்போது மனுதாரர் சார்பில், ''எங்கள் அறக்கட்டளை சார்பில் ஜென் தியான மையத்தை நடத்தி வருகிறோம். இது மதரீதியான அமைப்பு அல்ல. தியானம் சார்ந்த நடவடிக்கைகளை மதரீதியானதாகக் கருதக் கூடாது. எங்களின் செயல்பாடுகளை மதரீதியானவை என்று முத்திரை குத்த முடியாது. எனவே வெளிநாட்டு நிதியுதவி பெற அனுமதி வழங்க வேண்டும்.'' என வாதிடப்பட்டது.

அதற்கு மறுப்பு தெரிவித்து மத்திய அரசு சார்பில் குறிப்பிடுகையில், ''மனுதாரர் அறக்கட்டளை மதரீதியான நிகழ்ச்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மதமாற்றம் மற்றும் நாட்டின் மதச்சார்பற்ற தன்மைக்கு ஊறு விளைவிக்கும் பிற நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படக்கூடிய வெளிநாட்டு நிதியின் வருகையைக் கட்டுப்படுத்துவது மத்திய அரசின் கொள்கை. அந்த அடிப்படையிலேயே மனுதாரரின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. எனவே மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்.''எனக் கூறப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;

''ஜென் என்ற சொல் ஈர்ப்புத்தன்மை கொண்டது. பல பிரபலங்கள் ஜென் முறையை ஆதரித்துள்ளனர். உச்சகட்ட ஞானத்தையும் தெளிவையும் தேடும் யாராலும் ஜென் முறையைப் புறக்கணிக்க முடியாது. இதனால் ஜென் பாதையைப் பின்பற்றும் ஒருவருக்கு ஏன் எப்சிஆர்ஏ பதிவு மறுக்கப்பட வேண்டும் என சிந்தித்தோம். அப்போது அறக்கட்டளையை உருவாக்கியவரும், அறக்கட்டளையின் பின்னணியில் முக்கிய உந்துசக்தியாக இருப்பவர் ஒரு கிறிஸ்தவ பாதிரியார் என மத்திய அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.

கிறிஸ்தவம் மீட்பரை மையமாகக் கொண்ட மதம் என்பதை யாரும் மறந்துவிட முடியாது. அனைவரையும் இயேசு கிறிஸ்துவின் மந்தைக்குள் கொண்டுவருவதே அவர்களின் இறையியல் மற்றும் மதரீதியான நோக்கமாகும். 

அனைவரையும் உள்ளடக்கிய தன்மையைக் கொண்ட இந்து மதத்தைப் போலன்றி, மற்ற மதங்கள் இயல்பாகவே மற்றவர்களை விலக்கி வைக்கும் அல்லது தனித்து நிற்கும் தன்மையைக் கொண்டவை. யூதர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் ஆகியோரில் தீவிரப் பற்றுடையவர்கள் தங்கள் மதமே உண்மையான மற்றும் முழுமையான இறைவெளிப்பாடு என்று நம்புகின்றனர். அவர்களின் புனித நூல்களும் அவ்வாறே கூறுகின்றன.

இந்த அடிப்படையில் மனுதாரர் அறக்கட்டளையின் இணையதளத்தைப் பார்வையிட்டோம். அங்குள்ள தியான மையத்தில் புத்தர் சிலைக்கு மேலே சிலுவை போன்ற அமைப்பு இருப்பதை பார்த்தோம். 

மனுதாரர் அறக்கட்டளைக்கு வெளிநாட்டு நிதியுதவி சான்றிதழ் வழங்க மறுத்து பிறப்பித்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ள காரணம் முற்றிலும் ஏற்புடையது. மனுதாரர் அறக்கட்டளை விண்ணப்பத்தில் அதன் தன்மையை 'மதம் சார்ந்தது' என்று சரியாகக் குறிப்பிடாததால் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது.

அறக்கட்டளை போன்ற அமைப்புகள் எப்சிஆர்ஏ சட்டத்தில் பதிவு செய்வதை உரிமையாகக் கோர முடியாது. வெளிநாட்டு நன்கொடைகளைப் பெறுவது சட்டப்பூர்வமான உரிமையோ அல்லது முழுமையான உரிமையோ இல்லை என உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே தெளிவுபடுத்தியுள்ளது. 

வெளிநாட்டு நிதியுதவியால் நாட்டின் அரசியல் சூழல் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது என்றும் உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. பெரிய நாடுகள் அல்லது அவற்றின் அமைப்புகள் பிற நாடுகளின் பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு நேரடியாக வழங்கும் நிதியுதவி கடந்த காலங்களில் ஏற்கெனவே இருந்த அரசாங்கங்களைக் கவிழ்த்து புதியவர்களை ஆட்சியில் அமர்த்தியதைப் போல ஆபத்தாக அமையலாம்.

இத்தகைய சூழல்களைக் கையாள்வதற்குத் தேவையான அதிகாரங்களை எப்சிஆர்ஏ சட்டம் மத்திய அரசுக்கு அளிக்கிறது. மனுதாரர் அறக்கட்டளை மதரீதியான நிகழ்ச்சிகளில் ஈடுபட்டிருந்தபோதிலும், தங்களை மதச்சார்பற்றவர்களாகத் சித்தரித்துள்ளனர். 

நாட்டின் மதச்சார்பற்ற தன்மை மற்றும் சமூக நல்லிணக்கத்தைப் பாதிக்காத செயல்பாடுகளைக் கொண்ட மத அமைப்புகள் எப்சிஆர்ஏ சட்டத்தின் பதிவுபெறத் தகுதியுடையவை. அதேநேரத்தில் ஒரு மத நம்பிக்கையிலிருந்து மற்றொரு மத நம்பிக்கைக்கு மக்களை மதம் மாற்றும் நடவடிக்கைகளில் ஈடுபடும் அமைப்புகளுக்கு எப்சிஆர்ஏ பதிவு மறுக்கப்பட வேண்டும்.

இந்த காரணங்களால் மனுதாரர் அறக்கட்டளைக்கு சான்றிதழ் வழங்க மறுத்து எப்சிஆர்ஏ பிறப்பித்த உத்தரவு உறுதி செய்யப்படுகிறது. மேல்முறையீடு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.'' என்று நீதிபதிகள் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Madurai Bench of the High Court orders that FCRA registration be denied to organizations involved in religious conversion activities


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?


செய்திகள்



Seithipunal
--> -->