2021 தேர்தலின் போது.. முதுகெலும்பு இல்லாத திருமாவளவன்! விக்ரமன் விமர்சிக்க இதுதான் காரணமா.?
Vck vikraman criticized thirumavalavan screenshot viral
உச்சநீதிமன்ற பெண் வழக்கறிஞர் ஒருவர் தன்னை காதலிப்பதாக கூறி ஏமாற்றி பணம் பறித்ததாக விடுதலை சிறுத்தைகள் கட்சி இணை செய்தி தொடர்பாளர் விக்ரமன் மீது கடந்த ஏப்ரல் மாதம் புகார் தெரிவித்திருந்தார். விக்ரமன் சாதிய ரீதியில் அசிங்கமாக பேசி 12 லட்சத்திற்கும் மேல் பணம் பறித்து உளவியல் ரீதியாக கொடுமைப்படுத்தியதாக பரபரப்பான குற்றச்சாட்டுகளை சுமத்தி இருந்தார்.

விக்ரமன் நீண்ட நாட்களாக ஊடகவியலாளாராக இருந்து வந்த நிலையில் திடீரென விடுதலை சிறுத்தை கட்சியில் இணைந்த உடனே கட்சியில் இணை செய்தி தொடர்பாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. இதற்கிடையே பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இரண்டாம் இடத்தை பிடித்த விக்ரமனின் முகம் பலருக்கும் பரிச்சயம் ஆனது. இந்த நிலையில் விக்ரமன் மீது புகார் தெரிவித்த உச்சநீதிமன்ற பெண் வழக்கறிஞர் கிருபா முனுசாமி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுக்கு இந்த விவகாரம் குறித்து கடிதம் எழுதி இருந்தார்.

இதனைத் தொடர்ந்து வழக்கறிஞர் கிருபா முனுசாமி விவகாரம் தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் 5 நபர்கள் கொண்ட உண்மை கண்டறியும் குழுவை அமைத்தார். அந்த குழு தற்பொழுது வரை என்ன ஆனது என்றே தெரியவில்லை. இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி விக்கிரமானால் பாதிக்கப்பட்ட வழக்கறிஞர் கிருபா முனுசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் விக்ரமன் தன்னையும், தன்னைப் போன்ற பல பெண்களையும், தன் பாலின ஈர்ப்பு ஆண்களையும் ஏமாற்றியுள்ளதாக குற்றம் சாட்டி உள்ளார். இது தொடர்பான ஆதாரங்கள் மற்றும் விக்ரமனுடன் பேசிய ஸ்கிரீன்ஷாட்களை பதிவிட்டுள்ளார்.

அவ்வாறு வெளியிடப்பட்ட ஒரு ஸ்கிரீன்ஷாட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் குறித்து விக்ரமன் பேசியிருப்பது தற்பொழுது பேசும் பொருளாக மாறி உள்ளது. விசிக இணை செய்தி தொடர்பாளராக இருக்கும் விக்ரமன் "முதுகெலும்பு இல்லாத திருமாவளவன் தலைமையில் இருப்பதற்கு வெட்கமாக இருக்கிறது" என வழக்கறிஞர் கிருபா முனுசாமியிடம் தெரிவித்துள்ளார். இந்த புகைப்படம் தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த ஸ்கிரீன் ஷாட்டில் விக்ரமன் கடந்த 2021 மார்ச் மாதம் 17ஆம் தேதி கிருபா முனுசாமி உடன் பேசியுள்ளார். அந்த காலகட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல் கூட்டணி பேச்சு வார்த்தை நடைபெற்று முடிவடைந்தது. திமுக தலைமையிலான கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு வெறும் 6 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டது. இதன் காரணமாக விக்ரமன் விசிக தலைவர் திருமாவளவன் குறித்து இத்தகைய கருத்தை பகிர்ந்து இருப்பாரோ என்ற சந்தேகம் இணையதள வாசிகள் மத்தியில் எழுந்துள்ளது. வழக்கறிஞர் கிருபா முனுசாமியின் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
English Summary
Vck vikraman criticized thirumavalavan screenshot viral