திருந்தாத திமுக...வருந்தாத உதயநிதி...! 'திராவிடத்தை ஒழிப்போம்'....! - எச். ராஜாவின் அதிரடி முழக்கம்!
Unchanged DMK Unrepentant Udhayanidhi Let eradicate Dravidianism H Raja
தமிழக பாஜக மூத்த தலைவர் எச். ராஜா தனது எக்ஸ் தள பதிவில் கடுமையான அரசியல் விமர்சனங்களை முன்வைத்து தெரிவித்திருப்பதாவது,"திருந்தாத திமுக... மாறாத உதயநிதி...” என்ற வரிகளுடன் தனது பதிவை தொடங்கியுள்ள அவர், இல்லாத திராவிட அடையாளத்தின் பெயரில் தமிழக மக்களை பிரித்து ஆளும் அரசியல் உத்தியை பல ஆண்டுகளாக திமுக பயன்படுத்தி வந்ததாக குற்றம்சாட்டியுள்ளார்.
அரசியல் அதிகாரத்தை இழந்த பின்னரும், மக்களின் தீர்ப்பை புரிந்துகொள்ளாமல் தொடர்ந்து இந்து மத நம்பிக்கைகளை புண்படுத்தும் வகையில் கருத்துக்கள் வெளியிடப்படுவது கடுமையாக கண்டிக்கத்தக்கது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.எதிர்க்கட்சித் தலைவராக பதவியேற்ற உதயநிதி ஸ்டாலின், சட்டமன்ற உரையிலேயே “சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்” என்ற கருத்தை முன்வைத்திருப்பது, தேர்தலுக்கு பிறகும் திமுக தனது பழைய இந்து விரோத அரசியலை மீண்டும் தூசி தட்டி எடுத்திருப்பதை வெளிப்படுத்துவதாக எச். ராஜா விமர்சித்துள்ளார்.

திருப்பரங்குன்றம் தொடங்கி சட்டமன்ற அவை வரை, திமுகவின் இந்து மத எதிர்ப்பு பேச்சுகளும் நடவடிக்கைகளும் இடைவிடாமல் தொடர்கின்றன என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். மக்கள் மனநிலையை புரிந்துகொள்ளாமல், அதே அரசியல் அணுகுமுறையையே திமுக மீண்டும் மீண்டும் கடைப்பிடிப்பது அதன் அடிப்படை சிந்தனையையே வெளிக்காட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“தமிழக மக்கள் தங்களுக்கு நேர்ந்த துரோகங்களுக்கும் அநீதிகளுக்கும் பதிலடி கொடுக்கும் வகையில் திமுகவை ஆட்சியிலிருந்து அகற்றிய பின்னரும், அந்தக் கட்சி தன் தவறுகளை திருத்திக்கொள்ளாமல் அதே பாதையில் பயணிக்கிறது என்றால், இந்து மதத்திற்கு எதிரான மனப்போக்கு திமுகவின் அரசியல் இரத்த ஓட்டத்திலேயே கலந்துவிட்டது என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இறைநம்பிக்கை கொண்ட இந்துக்கள் இனி திமுகவில் தொடரக்கூடாது என்றும், நெற்றியில் திருநீறு மற்றும் குங்குமம் அணியும் திமுக உறுப்பினர்கள் உடனடியாக அந்தக் கட்சியிலிருந்து விலக வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
திமுகவின் அரசியல் வீழ்ச்சியில்தான் தமிழகத்தின் எதிர்கால வளர்ச்சி மறைந்திருப்பதாகவும், தமிழர்கள் அமைதியுடனும் நிம்மதியுடனும் வாழ வேண்டுமெனில் “திராவிடம் இல்லாத தமிழகம்” உருவாக வேண்டும் என்றும் எச். ராஜா தனது பதிவில் கடுமையாக குறிப்பிட்டுள்ளார்.இந்த பதிவு தமிழக அரசியல் வட்டாரங்களில் புதிய சர்ச்சையையும் விவாதங்களையும் ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
English Summary
Unchanged DMK Unrepentant Udhayanidhi Let eradicate Dravidianism H Raja