இன்று த.வெ.க. தலைவர் விஜய் தலைமையில் நடக்கும் பொதுக்குழு கூட்டம்!
TVK Vijay GS Meet
கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் தலைமையில் நடந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் விபத்தில் 41 பேர் உயிரிழந்தது நாட்டையே அதிர்ச்சியடையச் செய்தது. இதையடுத்து விஜய் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. ஆரம்பத்தில் மவுனம் காத்திருந்த அவர் பின்னர் வீடியோவொன்றை வெளியிட்டு ஆழ்ந்த வருத்தம் தெரிவித்தார். உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்கி, அவர்களை மாமல்லபுரத்தில் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
இதன்பின் த.வெ.க. தனது அன்றாட அரசியல் பணிகளில் மீண்டும் கவனம் செலுத்தத் தொடங்கியது. கட்சியின் செயற்பாடுகளை வலுப்படுத்தும் நோக்கில், பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் தலைமையில் 28 பேர் கொண்ட நிர்வாகக்குழுவை விஜய் நியமித்தார். மேலும், 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் கட்சி சார்பில் வக்கீல்கள் நியமிக்கப்பட்டனர். தொண்டரணி, மகளிரணி, இளைஞரணி, மாணவரணிகளுக்குப் புதிய நிர்வாகிகளும் அறிவிக்கப்பட்டனர்.
கரூர் சம்பவம் மீண்டும் நிகழாமல் தடுக்கும் விதமாக, 2,500 இளைஞர்களைக் கொண்ட “மக்கள் பாதுகாப்புப் படை” அமைக்கப்பட்டது. இவர்களுக்கு பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரிகள் ரவிக்குமார் மற்றும் குழுவினர் சிறப்பு பயிற்சி வழங்கினர்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில், சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு த.வெ.க.வின் அடுத்தகட்ட வியூகங்கள் வகுக்கப்படும் பொதுக்குழு கூட்டம் இன்று மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெறுகிறது. சுமார் 2,000 பேர் பங்கேற்கும் இந்த கூட்டம், கரூர் சம்பவத்துக்கு பிறகு விஜய் கலந்து கொள்கின்ற முக்கிய அரசியல் நிகழ்வாகும்.
அழைப்புக் கடிதம் மற்றும் அடையாள அட்டை கொண்ட உறுப்பினர்களுக்கே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. காலை 9.15 மணிக்குள் அரங்கிற்குள் வருவது கட்டாயம் எனக் கட்சி அறிவுறுத்தியுள்ளது. கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதும், விஜய் சிறப்புரையாற்றவுள்ளார். பின்னர் அனைவருக்கும் அறுசுவை விருந்து வழங்கப்படும்.