ஆணவப் படுகொலையின் மையமா தமிழ்நாடு? உடனடியாகச் சிறப்புச் சட்டம் இயற்றித் தடுக்க வேண்டும் - தவெக ஆதவ் அர்ஜுனா! - Seithipunal
Seithipunal


தமிழக வெற்றிக் கழக தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா விடுத்துள்ள அறிக்கையில், "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்..." என்று உலகிற்கே சமத்துவத்தைக் கற்றுக் கொடுத்த தமிழகம், திறனற்ற ஆட்சியாளர்களால் இப்போது வெட்கித் தலைகுனியும் நிலையில் உள்ளது. 

நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டையில், பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர் கவின்குமார், சாதி ஆணவப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். பட்டப் பகலில் நடைபெற்ற இக்கொடூரச் சம்பவம், மிகுந்த மனவேதனையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

ஐ.டி. துறையில் பொறியாளராகப் பணியாற்றி வந்த கவின்குமார், நன்கு படித்தவர்; யுனிவர்சிட்டி கோல்டு மெடலிஸ்ட்; மாதம் இரண்டு லட்சத்திற்கும் மேல் ஊதியம் பெறுபவர். அவரது குடும்பமும் நல்ல பொருளாதாரப் பின்னணி கொண்டது.

அனைத்து வகையிலும் நல்ல நிலையில் இருந்து வந்த கவின்குமார், மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த பெண்ணைக் காதலித்து வந்த நிலையில் இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்து, பெற்றோரின் சம்மதத்தை நாடியுள்ளனர். ஆனால் அவர்களின் திருமணத்திற்கு அப்பெண்ணின் குடும்பத்தினர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், அப்பெண்ணின் சகோதரர் சுர்ஜித், கவின்குமாரைப் படுகொலை செய்ததாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.

தங்களின் எதிர்கால வாழ்க்கையைத் தாங்களே முடிவு செய்துகொள்ளும் உரிமை தங்களுக்கு இருந்தும், பெண் வீட்டாரின் சம்மதத்தோடுதான் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்றிருந்த கவின்குமாரை, ஈவு இரக்கமிண்றி படுகொலை செய்த கொடுஞ்செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

சட்டம் - ஒழுங்கைக் காக்கும் பொறுப்பில் இருக்கும் காவல் துறை அதிகாரிகளின் குடும்பமே தங்களின் கடமையில் இருந்து தவறி இருப்பது, இந்தச் சமூகத்தில் எந்த அளவிற்குச் சாதியப் பாகுபாடு புரையோடிப் போய் இருக்கிறது என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது.

50 ஆண்டுகளாகத் தமிழகத்தை ஆட்சி செய்தவர்கள், சமூக, பண்பாட்டு, பகுத்தறிவுத் தளத்தில் தந்தை பெரியாரையும் அண்ணல் அம்பேத்கரையும் பின்பற்றுவதாகக் கூறிக்கொள்கின்றனர். ஆனால், சமூகத்தில் அமைதியை நிலைநாட்டும் அவர்களின் கொள்கைகளைக் கைவிட்டுவிட்டனர். வெறும் ஓட்டுகளுக்காக மட்டுமே அந்தத் தலைவர்களைப் பயன்படுத்திக் கொண்டதையே, இந்த ஆணவப் படுகொலைகள் அம்பலப்படுத்துகின்றன.

இந்த வழக்கில் சுர்ஜித் கைது செய்யப்பட்ட போதிலும், அவருடைய பெற்றோர் காவல் துறையில் பணிபுரிவதால், ஆரம்பம் முதலே வழக்கு விசாரணை நேர்மையாக நடைபெறுவதைத் தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டும். தகுதி வாய்ந்த அரசு சிறப்பு வழக்கறிஞரை நியமித்து, இந்த வழக்கை விரைவாக நடத்திட வேண்டும். குற்றவாளிகளுக்குச் சட்டப்படியான அதிகபட்ச தண்டனையைப் பெற்றுத்தர வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அவர்களின் ஒப்புதலின் பேரில் வலியுறுத்துகிறேன்.

மேலும் ஆண்டுதோறும் அதிகரித்துக்கொண்டே போகும் சாதி ஆணவப் படுகொலைகளும் அதையொட்டிய சமூகக் கொடுமைகளும் ஆணவப் படுகொலையின் மையமாக மாறி வருவதையும், அதைத் தடுக்கச் சிறப்புச் சட்டம் நிச்சயம் தேவை என்பதையும் நமக்கு ஆணித்தரமாக உணர்த்துகிறது.

எனவே, ஆணவப் படுகொலைகளைத் தடுக்கும் சிறப்புச் சட்டத்தைத் தமிழ்நாடு அரசு உடனடியாக இயற்ற வேண்டும். அதைச் சமரசமின்றி அமல்படுத்தி, இதுபோன்ற சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அவர்களின் ஒப்புதலின் பேரில் கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

TVK Vijay Aadav Arjuna Nellai Incident


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?


செய்திகள்



Seithipunal
--> -->