"பாலியல் குற்றச்சாட்டை சட்டப்படி எதிர்கொள்வோம்" சைபர் கிரைமில் புகாரளித்த விஜய் சேதுபதி!
We face harassement issue according law Vijay Sethupathi files complaint cybercrime
சில நாட்களுக்கு முன்பு ரம்யா மோகன் என்பவர் அவருடைய எக்ஸ் தளத்தில், "நடிகர் விஜய் சேதுபதி தனக்குத் தெரிந்த ஒரு பெண்ணை பல ஆண்டுகளாக பாலியல் இன்பத்திற்காகப் பயன்படுத்திக்கொண்டதாக" பதிவிட்டிருந்தார். குறிப்பாக 'விஜய் சேதுபதிக்கும் கோலிவுட்டின் காஸ்டிங் கவுச் சம்பவங்களுக்கும் தொடர்பு இருக்கிறது" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும், 'கடந்த சில ஆண்டுகளாக ஒரு பெண் விஜய் சேதுபதியால் பயன்படுத்தப்பட்டதாகவும், தற்போது அந்த பெண் மறுவாழ்வு மையத்தில் இருக்கிறார்.விஜய் சேதுபதி, கேரவனுக்கு வருவதற்காக அந்த பெண்ணுக்கு ரூ.2 லட்சத்தையும், கேரவன் ஓட்டுபவர்களுக்கு ரூ.50000 தருகின்றனர்" என்று அந்த பதிவில் பகிரப்பட்டிருந்தது.
இந்த செய்தி வைரலான சில மணி நேரங்களில், அந்த பதிவு சம்பந்தப்பட்ட பக்கத்திலிருந்து நீக்கப்பட்டது. இதற்கு மீண்டும் விளக்கம் கொடுத்த ரம்யா மோகன், சம்பந்தப்பட்ட பெண்ணின் பாதுகாப்பிற்காக இந்த பதிவுகளை நீக்குவதாக குறிப்பிட்டிருந்தார்.
விஜய் சேதுபதி:
இதுதொடர்பாக விஜய் சேதுபதி தெரிவித்ததாவது, "என்னை பற்றி கொஞ்சம் தெரிந்தவர்களுக்கு கூட, இது உண்மை இல்லை என்று தெரியும். அவர்களே இதை பார்த்தால் சிரிப்பார்கள். எனக்கும் என்னைப் பற்றி தெரியும். இது போன்ற அசிங்கமான குற்றச்சாட்டுகள் என்னை பாதிக்காது. என்னை சேர்ந்தவர்களும், எனது குடும்பத்தினரும் இதனால் மன உளைச்சளுக்கு ஆளாகியிருக்கின்றனர்.
இதை அப்படியே விட்டுவிடுங்கள். அந்த பெண் தன்னை பற்றி அனைவரும் பேச வேண்டும் என்பதற்காக இப்படி செய்கிறார். இதனால் அவருக்கு சில நிமிடங்கள் புகழ் கிடைக்கிறது, அதை அனுபவித்துக்கொள்ளட்டும். தான் நடித்த படம் நன்றாக ஓடிக்கொண்டிருக்கும் வேளையில், இவ்வாறு அவதூறு பரப்புவதன் மூலம் அப்படத்தின் வெற்றி பாதிக்கப்படும் என சிலர் நினைத்திருக்கக்கூடும் என்றும் ஆனால் அவ்வாறு நடக்காது.
இன்றைய சூழலில் ஒரேயொரு சமூக ஊடகக் கணக்கு இருந்தால் யார் வேண்டுமானாலும் யாரைப் பற்றியும் எதையும் தெரிவிக்கலாம். பாலியல் குற்றச்சாட்டை சட்டப்படி எதிர்கொள்ள முடிவு செய்துள்ளோம் " என்று தெரிவித்துள்ளார்.இதுசார்பாக சைபர் கிரைமில் விஜய் சேதுபதி தரப்பில் புகாரளிக்கப்பட்டுள்ளது.
English Summary
We face harassement issue according law Vijay Sethupathi files complaint cybercrime