தமிழகத்தை பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ள ஜெம் வீரமணி பாலியல் வழக்கு; சிக்கிய வீடியோ ஆதாரங்கள்; உதவியாளருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்..!
14 day judicial custody for the assistant in the Gem Veeramani sexual misconduct case
ஜெம் கிரானைட் உரிமையாளர் வீரமணி சிறுமிகளுடன் இருக்கும் வீடியோ ஆதாரங்களை மறைத்ததாக அவரது உதவியாளர் கணேசன் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில் அவரை, 14 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜெம் கிரானைட் தொழிலதிபர் வீரமணி சிறுமிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ள நிலையில், அவருக்கு உடந்தையாக இருந்த சாந்தி மற்றும் மகேந்திர சிம்ஹம் ஆகியோர் மீது மத்திய குற்றப்பிரிவு காவல்துறை வழக்குப்பதிவு செய்து ஆகஸ்ட் 29-ஆம் தேதி கைது செய்து புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கின் விசாரணையில், வீரமணியின் ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத்தில் சுமார் 23 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்த அவரது உதவியாளர் கணேசன் என்பவர் குறித்தும் காவல்துறைக்கு தகவல்கள் கிடைத்தன. அதன்படி, அந்த கணேசன், ஜெம் நிறுவனத்தில் இருந்து விலகி, பாலாஜி குளோபல் எண்டர்பிரைசஸ் நிறுவனத்தில் தற்போது பணியாற்றி வருகிறார் என்பதையும் காவல்துறையினர் கண்டுபிடித்தனர்.

உடனடியாக நடவடிக்கையில் இறங்கிய காவல்துறை கணேசனை கைது செய்தது. அத்துடன், அவரது செல்போனை ஆய்வு செய்த போது அதில் பல சிறுமிகளிடம் வீரமணி ஆபாசமாக இருப்பது போன்ற காணொளி இருந்துள்ளன. அந்த காணொளி தொடர்பாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்காமல் தனது செல்போனில் வைத்திருந்ததாக கணேசன் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து, சிறுமியின் ஆபாச காணொளியை வைத்திருந்தது மற்றும் அது தொடர்பாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்காதது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கணேசனை கைது செய்த காவல்துறையினர் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி பத்மா முன்பு ஆஜர்படுத்தப்பட்ட கணேசனை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து பலத்த பாதுகாப்புடன் கணேசனை புழல் சிறைக்கு அழைத்து சென்று காவல்துறையினர் சிறையில் அடைத்துள்ளனர்.
அத்துடன், வீரமணியிடம் இருந்து சுமார் 70 கோடி ரூபாய் வரை காவல்துறை, அரசியல் பிரமுகர்களுக்கு பணம் கைமாறி இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், வீரமணியின் வீடியோ ஆதாரங்களும் கிடைத்திருப்பது வழக்கை மேலும் வலுவடைய செய்துள்ளது. இந்த விவகாரம் தமிழகத்தில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
14 day judicial custody for the assistant in the Gem Veeramani sexual misconduct case