''மக்களுக்கு திமுக அரசு நன்மை செய்ததாக சரித்திரம் இல்லை: மக்கள் பிரச்சினைக்கு குரல் கொடுப்பது அதிமுக மற்றும் பாஜ தான்.'' எடப்பாடி பழனிச்சாமி..!
It is AIADMK and BJP that are giving voice to the problems of the people says Edappadi Palaniswami
திமுகவை எதிர்த்து மக்கள் பிரச்சினைக்கு குரல் கொடுப்பது அதிமுக மற்றும் பாஜ தான். வேறு எந்தக் கட்சியும் இல்லை என அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். மேலும் ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்கள் பிரச்சினைக்கு முதல் குரல் கொடுக்கும் கட்சி அதிமுக, எங்களுக்குத் துணை நிற்பது பாஜ, எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் 'தமிழகத்தை மீட்போம் மக்களை காப்போம்' சுற்றுப்பயணத்தை எடப்பாடி பழனிச்சாமி மேற்கொண்டுள்ளார். இப்பயணத்தில் கோவில்பட்டி பழைய பேருந்து நிலையம் அருகே இபிஎஸ் உடன் பங்கேற்ற தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் பேசினார்.
அப்போது, 1972-ஆம் ஆண்டு எம்ஜிஆர் அதிமுக.,வை துவங்கியபோது ஏற்பட்ட மறுமலர்ச்சி போன்ற எழுச்சி கோவில்பட்டியில் ஏற்பட்டுள்ளது. பிரதமர் மோடி எங்கு சென்றாலும் தமிழ் கலாசாரத்தை பரப்பிக் கொண்டிருக்கிறார். அவருடைய திட்டங்களை தமிழகத்துக்குக் கொண்டுவர இபிஎஸ் ஒருவரால்தான் முடியும். அதிமுக - பாஜக இரட்டைக் குழல் துப்பாக்கியாக செயல்பட்டு மக்களுக்கு நன்மை செய்யும் என்று குறிப்பிட்டுள்ளார்.

நயினார் நாகேந்திரனின் உரையை அடுத்து பேசிய இபிஎஸ், ''இந்த ஆட்சி மக்கள் விரோத ஆட்சி எப்போது அகற்றப்படும் என்று மக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள். 2026-இல் திமுக கூட்டணியை வீழ்த்தி அதிமுக கூட்டணி ஆட்சி அமைக்கும். அதிமுக, பாஜக இயல்பான கூட்டணி. நாங்கள் கூட்டணி வைத்ததும் ஸ்டாலினுக்கு தேர்தல் ஜுரம் வந்துட்டது. அதனால் பதறுகிறார் என்று தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஸ்டாலினுக்கு ஆட்சி பறிபோய்விடும் என்று அச்சம் வந்துவிட்டது என்றும், நல்லது செய்தால் தான் மீண்டும் ஆட்சிக்கு வரமுடியும் என்றும், திமுக நன்மை செய்ததாக சரித்திரம் இல்லை. எல்லா துறையிலும் ஊழல், லஞ்சம் மிகுந்த மாநிலம் தமிழகம் என்றும் கடுமையாக பேசியுள்ளார்.
மேலும், பாஜக அதிமுகவை விழுங்கிவிடும் என்று ஸ்டாலின் நினைக்கிறார். எப்படியெல்லாம் அவதூறு கிளப்புகிறார் . நாங்கள் எப்போது பாஜவுடன் கூட்டணி வைத்தோமோ, அப்போதே திமுக வீழ்ச்சி அடைந்துவிட்டது என்றும் மேலும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், நாட்டில் இரண்டு முறை பெரும்பான்மையுடன் வென்று, மூன்றாவது முறையும் பாஜ வெற்றி அடைந்திருக்கிறது. உலகளவில் இந்தியாவின் மதிப்பு அதிகரித்திருக்கிறது, அந்தளவு சிறப்பாக பிரதமர் மோடி ஆட்சி செய்கிறார். 1999 மற்றும் 2001 ஆகிய தேர்தல்களில் பாஜவுடன் திமுக கூட்டணி அமைத்தது என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், அதிமுகவுக்கும், பாஜவுக்கும் தனித்தனி கொள்கை உள்ளதாகவும், திமுகவுக்கும் கூட்டணி கட்சிகளுக்கும் கொள்கையே கிடையாது என்றும் பேசியுள்ளார். அத்துடன், திமுக கூட்டணி கட்சிகளுக்கு ஒரே கொள்கை என்கிறார் ஸ்டாலின் அப்படியெனில் ஒரே கட்சியாக சேர்ந்துவிடலாமே, எதற்காக தனித் தனி கட்சி? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
திமுகவை எதிர்த்து மக்கள் பிரச்சினைக்கு குரல் கொடுப்பது அதிமுக மற்றும் பாஜ தான். வேறு எந்தக் கட்சியும் கிடையாது. ஆட்சியில் நாங்கள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்கள் பிரச்சினைக்கு முதல் குரல் கொடுக்கும் கட்சி அதிமுக, எங்களுக்குத் துணை நிற்பது பாஜ என்று பேசியுள்ளார்.

அத்துடன் அவர் தொடர்ந்து பேசுகையில், உதயநிதியை படிப்படியாகக் கொண்டுவர முயற்சிக்கிறார்கள் என்றும், திமுகவின் ஒரே சாதனை உதயநிதியை துணை முதல்வர் ஆக்கியதுதான் என்று விமர்சித்துள்ளார். மேலும் இதை தவிர வேறு என்ன திட்டம் கொடுத்திருக்கிறார்கள்…? இந்தியாவிலேயே முன் மாதிரி ஆட்சி திராவிட மாடல் ஆட்சி என்கிறார். எதில் என்று கேட்டால், கடன் வாங்குவதில் தான் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
அவர்கள் வாங்கிய அந்த கடனை எல்லாம் அவர்கள்தான் கட்ட வேண்டும். வரி மூலமாக கடன் திருப்பிச் செலுத்த வேண்டும். குறிப்பிட்ட அளவுதான் கடன் வாங்க முடியும் அதற்கு மேல் போய்விட்டால் ஆட்சி திவாலாகிடும்.அதேப்போன்று இன்று திமுக ஆட்சி திவாலாகிவிட்டது என்று அவர் மக்களிடம் பேசியுள்ளார்.
மேலும் முதல்வர் ஸ்டாலினுக்கு என்ன பேசுவது என்றே தெரியவில்லை. நான் ஊர் ஊராகப் போவதில் உங்களுக்கு என்ன கஷ்டம்.? என்று கேள்வி எழுப்பியுள்ளார். இவ்வளவு மக்கள் வெள்ளத்தை பார்த்ததும் மீண்டும் மருத்துவமனைக்குப் போவார். கோவில்பட்டியே குலுங்கும் காட்சியைப் பார்த்தால் அவரால் தாங்க முடியுமா? என்று எடப்பாடி பழனிச்சாமி மேலும் பேசியுள்ளார்.
English Summary
It is AIADMK and BJP that are giving voice to the problems of the people says Edappadi Palaniswami