செங்கோட்டையனுக்கு த.வெ.க.வில் பொதுச்செயலாளர் பதவி! நாளை காலை இணைவு நிகழ்ச்சி!
TVK Sengottaiyan ADMK Vijay
அ.தி.மு.க.வின் மூத்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க.) தலைவர் விஜய்யை இன்று மாலை நேரில் சந்தித்துப் பேசியது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சந்திப்புக்குப் பிறகு, அவர் நாளை (நவம்பர் 27, புதன்கிழமை) விஜய்யின் கட்சியில் இணைய வாய்ப்புள்ளதாகவும், அவருக்கு அமைப்புப் பொதுச் செயலாளர் பதவி வழங்கப்படும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தி.மு.க. சந்திப்பும் ராஜிநாமாவும்
முன்னதாக இன்று காலை, செங்கோட்டையன் சட்டமன்றச் செயலகம் சென்று பேரவைத் தலைவர் அப்பாவுவிடம் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்வதற்கான கடிதத்தை வழங்கினார். அதன்பின்னர், அவர் அமைச்சர் சேகர் பாபுவையும் சந்தித்துப் பேசினார். இதனால், அவர் தி.மு.க.வில் இணைவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.
த.வெ.க.வில் இணைப்புச் சாத்தியம்
அனைத்து எதிர்பார்ப்புகளையும் தவிடு பொடியாக்கும் விதமாக, இன்று மாலை சென்னை பட்டினம்பாக்கம் பகுதியில் உள்ள த.வெ.க. தலைவர் விஜய்யின் வீட்டிற்குச் செங்கோட்டையன் வருகை தந்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
த.வெ.க.வில் இணைவதற்கு முன்னர் தனக்கு வழங்கப்படும் பதவிகள் குறித்து செங்கோட்டையன் விஜய்யுடன் ஆலோசனை நடத்தியதாகக் கூறப்படுகிறது. இந்த ஆலோசனை சுமார் 2 மணி நேரம் நடந்ததாவும் தெரியவந்துள்ளது. நாளை காலை 11 மணி அளவில் த.வெ.க.வில் செங்கோட்டையன் இணைய உள்ளார் என்றும் சொல்லப்படுகிறது.
பதவித் தகவல்:
இந்தக் கூட்டங்களுக்குப் பிறகு, அவருக்குக் கட்சியின் அமைப்புப் பொதுச் செயலாளர் பதவி வழங்கப்படலாம் எனத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அ.தி.மு.க.வை எம்.ஜி.ஆர். தொடங்கிய காலம் முதல் உறுப்பினராக இருந்து, அமைச்சராகப் பணியாற்றி, சமீபத்தில் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையனின் இந்தத் திடீர் முடிவு, தமிழக அரசியல் களத்தை வேகப்படுத்தியுள்ளது.
English Summary
TVK Sengottaiyan ADMK Vijay