மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: தவெக கூட்டணியின் வேட்பாளர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் காலியாக உள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்த இரு தொகுதிகளுக்கும் அக்டோபர் 6-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், அக்டோபர் 9-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. இதற்கான வேட்புமனுத் தாக்கல் நேற்று அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியது.

ஏற்கெனவே ஆளுங்கட்சியான தி.மு.க. சார்பில் மதுராந்தகம் தொகுதியில் பரந்தாமனும், தாராபுரம் தொகுதியில் சுகன்யாவும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு களத்தில் உள்ளனர். இந்நிலையில், அவர்களுக்குப் போட்டியாகத் தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான 'மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி' சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை அக்கட்சி முறைப்படி வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக வெற்றிக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மதுராந்தகம் (தனி) தொகுதியில் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான திருமதி K. மரகதம் குமரவேல் போட்டியிடுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, தாராபுரம் (தனி) தொகுதியில் திருப்பூர் தென்கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான திருமதி சத்தியபாமா களமிறக்கப்பட்டுள்ளார்.

இரு தொகுதிகளிலுமே மக்கள் மத்தியில் பரிட்சயமான முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களை வேட்பாளர்களாகக் களமிறக்கி, தேர்தலில் கடுமையான போட்டியை உருவாக்கத் தவெக கூட்டணி வியூகம் அமைத்துள்ளது.

கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் கூட்டணிக் கட்சித் தோழர்கள் அனைவரும் எவ்வித வேறுபாடுமின்றி இணைந்து, வெற்றி ஒன்றையே ஒரே குறிக்கோளாகக் கொண்டு களப்பணியாற்ற வேண்டும் என்றும், வேட்பாளர்களுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றுத் தர வேண்டும் என்றும் அக்கட்சியின் தலைமை அன்போடு கேட்டுக்கொண்டுள்ளது. வேட்பாளர் அறிவிப்பு வெளியாகிவிட்டதால், இவ்விரு தொகுதிகளிலும் தேர்தல் பிரச்சாரக் களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

TVK Fields Former Lawmakers for Maduranthakam and Dharapuram Assembly By Elections


கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...




Seithipunal
--> -->