''முதல்வர் ஜோசப் விஜய்யின் 40 நாள் ஆட்சி, மூன்றாம் ரோம் மன்னர் கலிகுலாவை நினைவுபடுத்துகிறது''; டிடிவி தினகரன் கடும் விமர்சனம்..!
TTV Dhinakaran severely criticizes Chief Minister Joseph Vijays 40day rule stating it brings to mind the Roman Emperor Caligula
''சட்டப்பேரவையையே ஷூட்டிங் ஸ்பாட்டாக மாற்றி சினிமாவில் பேசுவது போல வசனங்களை அடுக்குவது, ரீல்ஸ் போட உதவுமே தவிர, மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண உதவாது'' என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தவெக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
''தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதத்துக்கு முதல்வர் ஜோசப் விஜய் வழங்கிய பதிலுரை, மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வாக அமையும் என்ற எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், அது ஆவேசம், ஆக்ரோஷம், நக்கல், நையாண்டி கலந்த புளித்துப்போன சினிமா வசனங்களின் தொகுப்பாகவே அமைந்தது.
தேர்தலுக்கு முன்பு வெளியிடப்பட்ட தவெகவின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற பயிர்க்கடன் தொடர்பான வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றக் கோரி, தமிழகம் முழுவதும் போராடி வரும் விவசாயிகளை, எதிர்க்கட்சிகளின் தூண்டுதலின் பேரில் போராடுவதாகக் கூறுவது, விவசாயிகளையும் அவர்கள் முன்னெடுத்துள்ள போராட்டத்தையும் கொச்சைப்படுத்தும் செயலாகும் என்பதை முதல்வர் உணர்ந்திருக்க வேண்டாமா?

கடந்த மே 10-ஆம் தேதி, முதல்வராக பதவியேற்கும் முன்பு, முந்தைய அரசின் அலட்சியத்தால்தான் தமிழகம் முழுவதும் போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்ததாகக் கூறிய முதல்வர் ஜோசப் விஜய், பொறுப்பேற்ற 40 நாட்களில் அதைத் தடுக்க எடுத்த உறுதியான நடவடிக்கைகள் என்ன?
முதல்வராகப் பொறுப்பேற்ற பின் போட்ட முதல் மூன்று கையெழுத்துகளில் ஒன்றான போதைப்பொருள் தடுப்புப் படை தற்போது தூங்கிக் கொண்டிருக்கிறதா?
தேர்தல் அறிக்கையில் மாதம் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று அறிவித்துவிட்டு, ஆட்சிக்கு வந்த பிறகு 500 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தும் நுகர்வோருக்கு, இரண்டு மாதங்களுக்கு சேர்த்து 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என அறிவித்த முதல்வர், எதோ அறிவித்த தேர்தல் வாக்குறுதியையே நிறைவேற்றியதை போல சிலாகித்து பேசியிருப்பது வாக்குறுதியை மறந்து பேசியதா? அல்லது மறைத்து பேசியதா?

தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் கூட்டணி ஆட்சி என்ற புரட்சியை நிகழ்த்திவிட்டதாக மார்தட்டிக் கொள்ளும் முதல்வர் ஜோசப் விஜய், தேர்தலுக்கு முன்பு உருவான கூட்டணியைக் கொண்டா ஆட்சி அமைத்தார்? இன்று உங்களுக்கு ஆதரவாக மாறியிருக்கும் எதிரணியின் சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு வாக்களித்த தொகுதி மக்கள், உங்களுக்கு எதிராக வாக்களித்தவர்கள் என்பதை இந்த நேரத்தில் உங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.
குதிரை பேரம் நடத்தி, ஆட்சி அதிகாரத்தில் பங்கு வழங்குவதாக ஆசை வார்த்தை கூறி சிலரைத் தட்டித் தூக்கியதும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர்களை உங்கள் அரசியல் சுயநலத்திற்காக ராஜினாமா செய்ய வைத்ததும் தான் நீங்கள் பேசும் ஜனநாயகமா?
நடிகர் வடிவேலு நடித்த திரைப்படத்தில் வரும் "திரும்பத் திரும்ப பேசுற நீ" என்ற நகைச்சுவை வசனத்தைப் போல, "கால அவகாசம் வேண்டும், கால அவகாசம் வேண்டும்" என்று அனைத்திற்கும் கால அவகாசம் கேட்கும் முதல்வர், அன்றாடம் நடைபெறும் கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட சட்டம் – ஒழுங்கு பிரச்சினைகளை போர்க்கால அடிப்படையில் கட்டுப்படுத்த வேண்டிய சூழலில், தொடர்ந்து கால அவகாசம் கேட்பது தனது பொறுப்பைத் தட்டிக்கழிக்கும் செயலாகவே தெரிகிறது.

"ஊழல் செய்ய, லஞ்சம் வாங்க, கொள்ளையடிக்க தவெகவினருக்குத் தெரியாது" என்று பேசிய முதல்வருக்கு, ஆட்சிப் பொறுப்பேற்ற 40 நாட்களில் தவெக நிர்வாகிகளுக்குத் தெரிந்த சில செயல்களை நினைவூட்ட விரும்புகிறேன்.
அரசு அலுவலகங்களில் "ஆய்வு" என்ற பெயரில் அத்துமீறி நுழையத் தெரியும். அரசுப் பள்ளிகளுக்குள் புகுந்து முதல்வரின் படத்தை வைத்தும், சினிமா பாடல்களை மாணவர்களைப் பாட வைத்தும் ரீல்ஸ் எடுக்கத் தெரியும். ஏழைத் தொழிலாளர்களை மிரட்டி செங்கல், ஜல்லி வாங்கத் தெரியும். சாலையோர வியாபாரிகளை மிரட்டி மாமூல் வசூலிக்கத் தெரியும்.
பெண்களின் ஆபாச வீடியோக்களை எடுத்து அதைக் காட்டி மிரட்டத் தெரியும். வேலை வாங்கித் தருவதாகக் கூறி, சொந்தக் கட்சியின் பெண் நிர்வாகியையே ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்யத் தெரியும். இப்படிப்பட்ட பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளானவர்களையும், அதிகார அத்துமீறலில் ஈடுபடும் நிர்வாகிகளையும் தனது கட்சியில் வைத்துக்கொண்டு, தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கில் சமரசம் செய்ய மாட்டேன் என்று முதல்வர் சினிமா வசனம்போல் பேசிக் கொண்டிருப்பது நகைப்புக்குரியது.

ஆக மொத்தத்தில், கடந்த 40 நாட்களாக முதல்வர் ஜோசப் விஜய்யின் ஆட்சி என்பது, தனக்கு நெருக்கமானவர்களுக்கு அரசு பதவிகளை வழங்குவது, பெண்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் தனது கட்சியினரைக் கட்டுப்படுத்தத் தவறுவது, ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள ஜனநாயகத்தின் மாண்பையே மீறுவது ஆகிய செயல்பாடுகளின் தொகுப்பானது, தன்னைத் தெய்வத்தின் திருக்குமாரர் எனக் கருதி, தனது செல்லக் குதிரையான இன்சிடாட்டஸுக்கு (Incitatus) உயரிய அரசு பொறுப்பை வழங்க முயன்றதாக வரலாற்றில் குறிப்பிடப்படும் மூன்றாம் ரோம் மன்னர் கலிகுலாவை (Caligula) நினைவுபடுத்துகிறது.
எனவே, தமிழகத்தில் அன்றாடம் நடைபெறும் ஒவ்வொரு குற்றச் சம்பவத்திற்கும் கடந்த கால ஆட்சியையே காரணம் காட்டி காலம் கடத்தாமல், ஆக்கப்பூர்வமான நிர்வாகத்தை முன்னெடுத்து, தேர்தலில் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளில் கவனம் செலுத்துமாறு தவெக அரசையும், அதன் முதல்வர் ஜோசப் விஜய்யையும் வலியுறுத்துகிறேன்'' எனத் தினகரன் தெரிவித்துள்ளார்.
English Summary
TTV Dhinakaran severely criticizes Chief Minister Joseph Vijays 40day rule stating it brings to mind the Roman Emperor Caligula