கால் விரல்களை இழந்து தவித்த நடிகர் பாவா லட்சுமணனுக்கு ரூ.2 லட்சம் உதவி செய்த லெஜண்ட் சரவணன்!
Legend Saravanan provides 2 lakh in aid to actor Pava Lakshmanan who was in distress after losing his toes
தமிழ் சினிமாவில் நடிகர் வடிவேலுவுடன் இணைந்து பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களைச் சிரிக்க வைத்தவர் நடிகர் பாவா லட்சுமணன். அண்மைக் காலமாக சினிமா வாய்ப்புகள் குறைந்ததால் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருந்த அவர், தனது தற்போதைய நிலையை கண்ணீர் மல்க பகிர்ந்த வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் கவனத்தை ஈர்த்தது.
அந்த பேட்டியில், கர்நாடகாவில் தேர்தல் பிரச்சார நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது எதிர்பாராத விதமாக ஜெனரேட்டர் மீது கால்வைத்ததால் ஏற்பட்ட காயம் பின்னர் தீவிர தொற்றாக மாறியதாக அவர் தெரிவித்திருந்தார். ஆரம்பத்தில் வலி தெரியாத நிலையில், பத்து நாட்களுக்குப் பிறகு கால் கடுமையாக வீங்கியதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், தொற்று அதிகரித்ததால் மூன்று விரல்களை அறுவை சிகிச்சை மூலம் அகற்ற வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் கூறியிருந்தார்.
விரல்கள் அகற்றப்பட்டதால் தற்போது நடக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாகவும், உணவு மற்றும் மருத்துவச் செலவுகளுக்குக் கூட பணமின்றி தவித்து வருவதாகவும், தங்கி இருக்கும் வீட்டையும் காலி செய்யும்படி கூறியுள்ளதாகவும் அவர் உருக்கமாகப் பேசியிருந்தார். மேலும், தமிழக முதலமைச்சர் விஜய் தனக்கு ஏதேனும் உதவி செய்தால் நன்றாக இருக்கும் என்றும் அவர் கண்ணீருடன் கோரிக்கை விடுத்திருந்தார்.
பாவா லட்சுமணனின் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, தொழிலதிபரும் நடிகருமான லெஜண்ட் சரவணன் மனிதாபிமான அடிப்படையில் உதவ முன்வந்துள்ளார். அவரது உத்தரவின் பேரில், நடிகர் கூல் சுரேஷ் மற்றும் உதவியாளர்கள் பாவா லட்சுமணனின் வீட்டிற்கு நேரில் சென்று ரூ.2 லட்சம் மதிப்பிலான காசோலையை வழங்கினர்.
இந்த உதவியை பெற்றுக் கொண்ட பாவா லட்சுமணன், "நான் லெஜண்ட் சரவணன் சார் படத்தில் இதுவரை நடித்ததில்லை. அவரை நேரில் பார்த்தது கூட இல்லை. இருந்தும், என் கஷ்டத்தைப் பார்த்து இந்த இக்கட்டான சூழலில் உதவி செய்திருக்கிறார். இந்த உதவியை என் வாழ்நாளில் மறக்க முடியாது" என்று கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார்.
லெஜண்ட் சரவணனின் இந்த மனிதநேய உதவிக்கு சமூக வலைதளங்களில் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
English Summary
Legend Saravanan provides 2 lakh in aid to actor Pava Lakshmanan who was in distress after losing his toes