''முதல்வர் எப்படிப் பேசுகிறார் என்பதை விட, அவர் எந்தக் கொள்கை வழியில் நடக்கிறார் என்பதுதான் முக்கியம்''; மு.வீரபாண்டியன்..!
M Veerapandian says that the policy path the Chief Minister follows is more important than the way he speaks
''முதல்வர் எப்படிப் பேசுகிறார் என்பதை விட, அவர் எந்தக் கொள்கை வழியில் நடக்கிறார் என்பதுதான் முக்கியம். ஆலயங்களும் அவற்றின் சொத்துகளும் 'இந்தியா' என்ற மகத்தான தேசத்திற்குச் சொந்தமானவை. இந்தியாவிற்கு நிகரான கோயில் உலகில் வேறெங்கும் இல்லை'' என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.
இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் விருதுநகரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் கூறியதாவது;
மேகேதாட்டு அணை விவகாரம் என்பது இரண்டு மாநிலங்களின் ஒற்றுமை மற்றும் இந்தியாவின் ஒருமைப்பாடு சார்ந்தது என்றும், மேகேதாட்டுவில் எக்காரணம் கொண்டும் அணை கட்டக் கூடாது. இதில் மத்திய அரசு வெறும் பார்வையாளராக இருக்கக் கூடாது என்று கருது கூறியுள்ளார்.

அத்துடன், எவ்வளவு பெரிய வல்லுநர்களும், பொறியாளர்களையும் கொண்டு அணை கட்டினாலும், காவிரி அன்னை தமிழ்நாட்டை நோக்கித்தான் உடைத்துக்கொண்டு வருவாள் என்று சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், ஒடிசா போன்ற மாநிலங்களில் பட்டினிச் சாவு ஏற்பட்டபோது, இடதுசாரி இயக்கங்கள் கொடுத்த அழுத்தத்தால், குறைந்தபட்ச ஊதியத்துடன் மக்களுக்கு வேலை வழங்க வேண்டும் என்ற நோக்கில் 100 நாள் வேலைத் திட்டம் கொண்டு வரப்பட்டது என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தமிழ்நாட்டிலும் இத்திட்டம் தடையின்றி, மக்களுக்குக் குறைந்தபட்சம் 150 நாட்களுக்குக் குறையாமல் வேலை வாய்ப்பை உறுதி செய்யும் வகையில் செயல்படுத்தப்பட வேண்டும் என்றும், இந்தப் பணிக்கு காந்தியின் பெயர்தான் சரியாக இருக்கும். அதனால் காந்தியின் பெயரிலே இது தொடர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், மத்திய அரசு தொழிலாளர் சட்டங்களை 44-லிருந்து 04 ஆக சுருக்கியுள்ளது என்றும், இதனைத் தமிழ்நாட்டில் அமல்படுத்த மாட்டோம் என்று கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயனைப் போல, தமிழக முதல்வரும் அறிவிக்க வேண்டும் என்று வலுயுறுத்தியுள்ளார்.

அத்துடன், அம்மோனியா வாயுக் கசிவு காரணமாக, புலம்பெயர்ந்த ஏழைத் தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். வாயு சம்பந்தப்பட்ட தொழிற்சாலைகள் அதிகமாக உள்ள சென்னை மணலி பகுதியில் தமிழகத் தொழில் பாதுகாப்புத் துறை தீவிர ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார். மேலும், தமிழகத்திற்கு வரும் புலம்பெயர் தொழிலாளர்களின் கல்வி, மருத்துவம் மற்றும் வாழ்விட உரிமைகளை அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
அதேப்போன்று, தனியார் நிறுவனங்களுடன் பேசி, லாபத்தை விடத் தொழிலாளர்களின் உயிர் முக்கியம் என்பதில் தமிழக அரசு முழு கவனம் செலுத்த வேண்டும் எனவும், கத்தாரில் ஏற்பட்ட எரிவாயு விபத்தில் சிக்கிய அமீரகத் தொழிலாளர்கள் குறித்த முழுமையான விவரங்களைத் தமிழக அரசின் அயலகத் துறை வெளியிட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.
மேலும், நிர்வாகத்தில் சில குளறுபடிகளும் இடர்களும் இருப்பது இயல்புதான் என்றும், இது புதிய அரசு என்பதால், அவர்கள் நல்லாட்சி கொடுக்க நாம் கால அவகாசம் கொடுத்து ஒத்துழைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இருப்பினும், சட்டம் - ஒழுங்கைக் காப்பதிலும், பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு வழங்குவதிலும் எவ்வித கால அவகாசமும் தேவையில்லை என்றும், அதில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மேலும், சட்டம் - ஒழுங்கு விஷயத்தில் முதல்வரின் தலைமையிலான சட்ட இயந்திரம் முழு வீச்சில் முடுக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், நாட்டில் 40 கோடி பேர் உழைப்பதை 04 பேர் சுரண்ட நினைக்கிறார்கள் என்றும், உழைப்பவருக்கான சமூக உரிமைச் சமுதாயம் இங்கு உருவாக வேண்டும். சமூகக் குற்றங்களை மாணவர்கள், இளைஞர்கள் வேடிக்கை பார்க்கும் பார்வையாளர்களாக இருக்கக் கூடாது என்று தெரிவித்துள்ளார்.
மேலும், பாதிக்கப்படும் பெண்கள் நம் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும் என்றும், சட்டங்கள் மட்டுமே குற்றங்களை ஒழித்துவிடாது எனவும், மனித மனங்களும் மாற வேண்டும் என்றும், ஒவ்வொரு வீட்டிலும் சமூகக் கல்வி இருந்தால் மட்டுமே குற்றங்களைத் தடுக்க முடியும் எனவும் சுட்டிக்காட்டி பேசியுள்ளார்.

அத்துடன், நாங்கள் தற்போதைய புதிய அரசுக்கு ஆதரவளிப்பது என்பது கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டாக எடுத்த முடிவு என்று குறிப்பிட்டதோடு, ஆளுநர் போன்ற சக்திகள் உள்ளே நுழைந்துவிடக் கூடாது என்பதற்காகவே ஆதரவளித்தாகவும், இந்த ஆட்சி 05 ஆண்டுகள் நீடிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், முதல்வர் விஜய் மதச்சார்பற்ற அரசாக நின்று, மக்களுக்கு நல்லாட்சி தர வேண்டும் என்றும், எங்களுக்கு அவர் உண்மையாக இருப்பார் என நம்புவதாக குறிப்பிட்டுள்ளார். எங்களின் கோரிக்கைகள் எப்போதும் அதிகாரிகள் பக்கமோ, அமைச்சர்கள் பக்கமோ இருக்காது, தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் பக்கமே இருக்கும் என்று தெளிவுப்படுத்தியுள்ளார்.
அத்துடன், பொறுப்புக்கு முதல்வர் புதியவர் என்றும், விரைவில் அவர் தன் கடமையை உணர்ந்து அவரே சட்டமன்றத்தில் கேள்விகளுக்கு பதில் அளிப்பார் என்று தெரிவித்துள்ளார். சட்டமன்றம் என்பது கேலி செய்யும் அரங்கம் அல்ல என்றும், ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் வேறு வேறு அல்ல, இரண்டுமே ஜனநாயகத்திற்கு வலு சேர்க்கும் இரு தூண்கள் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், முதல்வர் எப்படிப் பேசுகிறார் என்பதை விட, அவர் எந்தக் கொள்கை வழியில் நடக்கிறார் என்பதுதான் முக்கியம் என்று சுட்டிக்காட்டியுள்ளதோடு, ஆலயங்களும் அவற்றின் சொத்துகளும் 'இந்தியா' என்ற மகத்தான தேசத்திற்குச் சொந்தமானவை எனவும், இந்தியாவிற்கு நிகரான கோயில் உலகில் வேறெங்கும் இல்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் குறிப்பிட்டுள்ளார்.