'அமோனியா வாயுக் கசிவால் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா 25 லட்சம் இழப்பீடு கிடைப்பதை மாநில அரசு உறுதி செய்ய வேண்டும்'; மார்க்சிஸ்ட் கோரிக்கை..!
The Marxist party demands compensation of 25 lakh each for the families of those who died due to the ammonia gas leak
''அமோனியா வாயுக் கசிவு காரணமாக மரணமடைந்த தொழிலாளர்கள் குடும்பத்துக்கு மாநில அரசு அறிவித்துள்ள ரூபாய் 2 லட்சம் இழப்பீடு என்பது மிகக் குறைவானது. அவர்களுக்கு ரூபாய் 25 லட்சம் இழப்பீடு கிடைப்பதை மாநில அரசு உறுதி செய்ய வேண்டும்'' என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
''திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் பகுதியில் உள்ள கன்னிகைப்பேரில் செயல்பட்டு வரும் செயின்ட் பால் கடல்சார் உணவு தொழிற்சாலையில் 200-க்கும் அதிகமான பெண் தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். கடந்த 21-ம் தேதி காலை 10 மணியளவில் நிறுவனத்தில் பயன்படுத்தப்பட்ட அமோனியா வாயுக் கசிவு காரணமாக, இரவு நேர பணி முடித்து ஓய்விலிருந்த 74 தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் 9 பேர் மரணமடைந்துள்ளனர். 30-க்கும் அதிகமானோர் வெண்டிலேட்டர் உள்ளிட்ட பயன்பாடுகள் தேவைப்படும் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர். மற்ற அனைவருமே பல்வேறு உபாதைகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மரணம் அடைந்தோரின் குடும்பத்தினருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது ஆறுதலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறது.
மேற்படி விபத்து நிர்வாகத்தின் அலட்சியத்தால், தொழிற்சாலைகள் பாதுகாப்பு விதிகளை உரிய முறையில் பின்பற்றாத காரணத்தால் ஏற்பட்டுள்ளது. அதேபோல் தொழிற்சாலைகள் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறையின் ஆய்வு கடந்த 2025 டிசம்பருக்குப் பின் இல்லை. மேலும், ஆலைக்குள் 18 வயதுக்கு கீழான பெண் தொழிலாளர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டதாக தெரிகிறது.
தற்போது சிகிச்சை பெற்று வருவோரிலும் வயது குறைவானவர்கள் உள்ளதாக கூறப்படுகிறது. இவை அனைத்தும் சட்ட விரோதமாகும். சட்டத்திற்கு புறம்பான செயல்களுக்காக சம்மந்தப்பட்ட நிர்வாகத்தின் மீது தொழிற்சாலைகள் துறை நடவடிக்கை எதுவும் எடுத்ததாகத் தெரியவில்லை.
இந்நிலையில், ஒன்றிய பாஜக அரசு தொழிற்சாலைகளை ஆய்வு செய்து சுயமாகவே சான்றளிக்கலாம் என புதிய சட்ட தொகுப்பில் திருத்தியிருப்பது உடனடியாக நீக்கப்பட வேண்டும் என சிபிஎம் வலியுறுத்துகிறது.
தொழிலாளர்கள் ஆலையிலேயே பாதுகாப்பற்ற நிலையில் தங்க வைக்கப்பட்டது, குழந்தை தொழிலாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டது ஆகியவை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளாலும் ஆய்வு செய்யப்பட்டு தடுக்கப்படவில்லை என்பது அதிகாரிகளின் அலட்சியத்தை வெளிப்படுத்துகிறது.
மூன்றாவது, விபத்து நடந்த ஆலையில் மணிப்பூர், அசாம், ஒடிசா மாநிலங்களைச் சார்ந்த தொழிலாளர்கள் புலம்பெயர் தொழிலாளர் சட்டத்தின்படி பதிவு செய்யப்படவில்லை. இதன் மீது நடவடிக்கை எடுப்பதில்லை என்பது தனியார் நிறுவனங்களுக்கு கண்மூடித்தனமாக அளிக்கப்படும் ஆதரவு நடவடிக்கைகளாகத் தெரிகிறது. இதை சிபிஎம் வன்மையாக கண்டிக்கிறது.
மாநிலம் முழுவதும் வெளி மாநில தொழிலாளர்கள் கடும் சுரண்டலுக்கும், குறைந்த ஊதியம், பாதுகாப்பற்ற பணிச்சூழல், காலவரம்பின்றி போதுமான ஓய்வு வழங்காமல் வேலை வாங்குவது, சுகாதாரமற்ற இடங்களில் தங்க வைப்பது போன்ற பலவிதமான சிரமங்களுக்கு மத்தியில்தான் தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். அணிதிரட்டப்படாத தொழிலாளர்களாக இருப்பதால் கொத்தடிமை என்ற நிலைக்கு தாழ்ந்து போயுள்ளனர்.
மேற்படி விபரங்களிலிருந்து மாநில அரசு அறிவித்துள்ள ரூபாய் 2 லட்சம் இழப்பீடு என்பது மிகக் குறைவானது. எனவே, அரசு உயர்த்தி அறிவிக்க வேண்டும். நிறுவனத்தின் சட்ட மீறல் காரணமாக மரணம் அடைந்த தொழிலாளர்கள் குடும்பத்தினருக்கு சட்டப்படியான ரூபாய் 25 லட்சம் இழப்பீடு கிடைப்பதை மாநில அரசு உறுதி செய்ய வேண்டும்.
இனிவரும் காலங்களில் இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடக்காமல் தடுக்க வேண்டும். மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களுக்கு உயர் சிகிச்சை அளிப்பதுடன், காயமடைந்த அனைவருக்கும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என சிபிஎம் வலியுறுத்துகிறது.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி நாளை மறுதினம் (ஜூன் 25) திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கின்றனர்'' எனத் தெரிவித்துள்ளார்.
English Summary
The Marxist party demands compensation of 25 lakh each for the families of those who died due to the ammonia gas leak