தமிழகத்தில் கள்ளத்துப்பாக்கி கலாச்சாரம்; சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளுக்கு முன்னுதாரணமாக திகழும் திமுகவினர்; டிடிவி தினகரன் கண்டனம்..!
TTV Dhinakaran condemns the DMK members for setting a precedent for law and order breakdowns
திமுகவால் தான் கள்ளத்துப்பாக்கி கலாச்சாரம் தலைதூக்கியிருப்பதாக பொதுமக்கள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழகத்தில் அரங்கேறும் பல்வேறு சட்டவிரோதச் செயல்களிலும், சட்டம் ஒழுங்கு பிரச்னைகளிலும் திமுக நிர்வாகிகளுக்கும் தொடர்பிருப்பதை இச்சம்பவம் மேலும் உறுதிபடுத்தியுள்ளதாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது:
''நெல்லை அருகே கள்ளத்துப்பாக்கிகளை விற்பனை செய்ததாக திமுக நிர்வாகி கைது – சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளுக்கு முன்னுதாரணமாக திகழும் திமுகவினரின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது.
நெல்லை மேலப்பாளையம் பகுதியில் வீட்டிற்குள் கள்ளத்துப்பாக்கிகளை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்ததாக திமுகவின் பொறியாளர் அணியைச் சார்ந்த நிர்வாகி ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருப்பதாக ஊடகங்களிலும், நாளிதழ்களிலும் செய்திகள் வெளியாகியுள்ளன.

கடந்த ஆண்டு அரக்கோணத்தில் கள்ளத்துப்பாக்கி வைத்திருந்ததாக திமுக கவுன்சிலர் ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது நெல்லை அருகே கள்ளத்துப்பாக்கிகளை விற்பனை செய்ததாக மற்றொரு திமுக நிர்வாகி கைதாகியிருப்பதன் மூலம் தமிழகத்தில் திமுகவால் தான் கள்ளத்துப்பாக்கி கலாச்சாரம் தலைதூக்கியிருப்பதாக பொதுமக்கள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கஞ்சா விற்பனையில் தொடங்கி கொடியவகை போதைப் பொருட்கள் கடத்தல், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள், கள்ளத்துப்பாக்கிகள் விற்பனை என தமிழகத்தில் அரங்கேறும் பல்வேறு சட்டவிரோதச் செயல்களிலும், சட்டம் ஒழுங்கு பிரச்னைகளிலும் திமுக நிர்வாகிகளுக்கும் தொடர்பிருப்பதை இச்சம்பவம் மேலும் உறுதிபடுத்தியுள்ளது.
எனவே, கள்ளத்துப்பாக்கி விற்பனை செய்ததாக கைதாகியிருக்கும் திமுக நிர்வாகியை தீர விசாரித்து இதன் பின்னணியில் செயல்படுவோரையும் எந்தவித பாரபட்சமுமின்றி கைது செய்து அவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களை கேட்டுக் கொள்கிறேன்.''என்று அவர் தெரிவித்துள்ளார்.
English Summary
TTV Dhinakaran condemns the DMK members for setting a precedent for law and order breakdowns