சிறப்பு! மறைந்த கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாளான செம்மொழி நாள் இன்று...! 
                                    
                                    
                                   Today Semmozhi Naal birthday late kalaingar Karunanidhi
 
                                 
                               
                                
                                      
                                            இன்று ஜூன் 3-ந்தேதி,அன்னை தமிழுக்கு சிறப்பு செய்யும் வகையிலும், புகழ் சேர்க்கும் வகையிலும், தமிழாகவே வாழ்ந்து தமிழ் மொழிக்காக அனைத்து அர்ப்பணிப்பும் செய்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் 102-வது பிறந்த நாள் செம்மொழி நாளாக தமிழகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

இதனை நேற்று முன்தினம் மதுரையில் 47 ஆண்டுகளுக்கு பிறகு அதாவது 1978-ம் ஆண்டுக்கு பின்னர் நடந்த தி.மு.க. பொதுக்குழுவில் இந்த நன்னாளை செம்மொழி நாளாக கொண்டாடப்படும் என்ற அறிவிப்பு நிறைவேற்றப்பட்ட 27 தீர்மானங்களில் முதல் தீர்மானமாக இடம்பெற்றிருந்தது.
அதில், 'முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி பிறந்தநாளான ஜூன் 3-ம் நாளை செம்மொழி நாளாக நாடெங்கும் கொண்டாடுவோம்' என்று தெரிவிக்கப்பட்டது.மேலும், இந்த தீர்மானத்தை அரசும் ஏற்றுக்கொண்டு, இந்த நாளை செம்மொழி நாளாக அறிவித்து அரசு விழாவாக கொண்டாடுகிறது. இந்த ஆண்டு முதல் ஜூன் 3-ந்தேதி செம்மொழி நாளாக அரசு சார்பில் தொடர்ந்து கொண்டாடப்படும். இன்று தமிழ்நாடு அரசின் சார்பில் கலைஞர் கருணாநிதியின் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்த இருக்கிறார்.
இதைத் தொடர்ந்து கலைவாணர் அரங்கில் நடக்கும் செம்மொழி விழாவில் கலைஞர் மு.கருணாநிதி செம்மொழி தமிழ் விருதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார். மேலும் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் புதிய நூல்கள் வெளியிடுதல், வயதுமுதிர்ந்த 5 தமிழறிஞர்களுக்கு உயர்த்தப்பட்ட உதவித்தொகை ஒப்பளிப்பு ஆணை வழங்குதல், செம்மொழி நாள் போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்குதல், தமிழ்நாடு அரசின் நான்காண்டு சாதனை மலர் வெளியிடுதல் ஆகிய நிகழ்வுகளும் பிரமாண்டமாக அரங்கேறுகின்றன.
இந்திய மொழிகளை பொறுத்தமட்டில் முதலாவதாக செம்மொழி அந்தஸ்தை பெற்றது தமிழ் மொழிதான். தமிழ் மொழிக்கு பிறகுதான் சமஸ்கிருதம், கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஒடியா உள்பட 11 மொழிகள் செம்மொழி அந்தஸ்தை பெற்றன. இதில், 4 மொழிகள் தென்மாநில மக்கள் பேசும் மொழிகளாகும். நாட்டிலேயே தமிழ் மொழி முதலாவதாக செம்மொழி அந்தஸ்தை பெறுவதற்காக மறைந்த முதல்-அமைச்சர் கருணாநிதி எடுத்த முயற்சிகளுக்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான சோனியா காந்தி பெரிதும் துணை நின்றார்.
செம்மொழி என்பது ஒரு மொழியில் இலக்கிய பழமை செறிந்திருப்பதன் அடிப்படையில் தரப்படும் சிறப்பு பெருமையாகும். செம்மொழியாக ஒரு மொழியை தேர்வு செய்ய அதன் இலக்கிய படைப்புகள் வளம் மிகுந்தவையாகவும், பழமையானதாகவும், அதன் தோன்றல் ஏனைய மொழிகளை சாராததாகவும் இருக்கவேண்டும். மேலும் அந்த மொழி 1500 முதல் 2000 ஆண்டுகள் வரையிலான வரலாறு மற்றும் பழமையான இலக்கியங்களை கொண்டிருக்கவேண்டும்.
உலக மொழிகளில் லத்தீன், கிரேக்கம், ஹீப்ரூ, பாரசீகம் ஆகிய மொழிகள் இத்தகைய தகுதிகளை பெற்றிருக்கின்றன.2004-ம் ஆண்டு ஜூன் 6-ந்தேதி அப்போதைய ஜனாதிபதி அப்துல்கலாம் நாடாளுமன்றத்தில் செம்மொழியாக அறிவித்து தமிழுக்கு மகுடம் சூட்டினார். இந்த அளப்பரிய சாதனைக்கு சொந்தக்காரர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி என்றால் அது மிகையல்ல. இதுமட்டுமல்ல 2010-ம் ஆண்டு கோவையில் உலக தமிழ் செம்மொழி மாநாட்டை 5 நாட்கள் நடத்தி தமிழுக்கு பெருமை சேர்த்தார். அந்த மாநாட்டுக்காக கலைஞர் கருணாநிதி எழுதி ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்து புகழ்மிக்க பாடகர்கள் பாடிய 'செம்மொழியான தமிழ் மொழியாம்' பாடல் தமிழ் உள்ளளவும் தமிழர்களின் உணர்வை தட்டி எழுப்பிக்கொண்டே இருக்கும்.
                                     
                                 
                   
                       English Summary
                       Today Semmozhi Naal birthday late kalaingar Karunanidhi