நாட்டின் முக்கிய அணுசக்தி தகவல்களை வெளிநாடுகளுக்கு கோடிகளுக்கு விற்ற போலி விஞ்ஞானி அக்தர் ஹுசைனி மும்பையில் கைது..! 
                                    
                                    
                                   Fake scientist arrested in Mumbai for selling countrys important nuclear information to foreign countries
 
                                 
                               
                                
                                      
                                            பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் விஞ்ஞானி எனக் கூறிக் கொண்டு, முக்கிய அணுசக்தி தகவல்களை வெளிநாடுகளிடம் பரிமாறி, கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்த அக்தர் ஹுசைனி (60) என்பவரை  மும்பையில் போலீசார் கைது செய்துள்ளனர்.
ஜார்க்கண்டின் ஜாம்ஷெட்பூரைச் சேர்ந்த இவர், மும்பையில் செயல்படும், பார்க் எனப்படும் பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் விஞ்ஞானி எனக் கூறிக்கொண்டு, நாடு முழுதும் பயணம் செய்து சலுகைகளை அனுபவித்து வந்துள்ளார்.
இதையறிந்து அக்தர் ஹுசைனியை மும்பை போலீசார் சமீபத்தில் அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து, 10க்கும் மேற்பட்ட வரைபடங்கள், அணு ஆயுதங்கள் தொடர்பான தரவுகள் கைப்பற்றப்பட்டன. அத்துடன் வரிடமிருந்து, போலி பாஸ்போர்ட்டுகள், ஆதார், பான், பாபா அணு ஆராய்ச்சி மையத்தின், இரு வேறு பெயர்கள் உடைய போலி அடையாள அட்டைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதனையடுத்து, டில்லியில் வசித்த அக்தர் ஹுசைனியின் சகோதரர் அடில் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து, மும்பை போலீசார் கூறுகையில்: ''பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் விஞ்ஞானி என, தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட அக்தர் ஹுசைனி, 1995 முதல், வெளிநாடுகளிடம் இருந்து பணம் பெற்று வந்துள்ளார். முதலில் லட்சக்கணக்கில் பெற்ற அவர், 2000க்கு பின், கோடிக் கணக்கில் பணம் பெற்றுள்ளார். இதற்காக முக்கிய அணுசக்தி தகவல்களை அவர் கொடுத்துள்ளார்.
அத்துடன், அணுசக்தி நிலையங்கள் பற்றிய வரைபடங்களையும் அவர் அளித்துள்ளார். அக்தர் ஹுசைனி பெயரில் உள்ள ஒரு தனியார் வங்கிக் கணக்கில் சந்தேகத்துக்குரிய பரிவர்த்தனைகள் நடந்துள்ளன. இது குறித்து விசாரணை நடக்கிறது. அக்தர் ஹுசைனி, அவரது சகோதரர் அடில் ஆகியோர் பாகிஸ்தானுக்கு சென்றிருக்கலாம் என்றும், அந்நாட்டின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., உடன், அவர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

கடந்த, 2004-இல், மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாயிலிருந்து, அக்தர் ஹுசைனி நாடு கடத்தப்பட்டதும், அதன்பின், போலி பாஸ்போர்ட் மூலம் வெளிநாடுகளுக்கு அவர் சென்று வந்ததும் தெரிய வந்துள்ளது. ஈரானுக்கு 20 முறையும், சவுதி அரேபியாவிற்கு 15 முறையும், ரஷ்யா, தாய்லாந்து போன்ற நாடுகளுக்கும் அவர் சென்று வந்துள்ளார். இருவரிடம் தீவிர விசாரணை நடக்கிறது. இதில் தொடர்புடையோர் விரைவில் கைது செய்யப்படுவர்கள்.'' என்று மும்பை போலீசார் தெரிவித்துள்ளனர்.
                                     
                                 
                   
                       English Summary
                       Fake scientist arrested in Mumbai for selling countrys important nuclear information to foreign countries