நாடு தழுவிய 'டிஜிட்டல் கைது' மோசடி; குறிவைக்கப்படும் பெங்களூரு, ஐதராபாத், டெல்லி  போன்ற பெரு நகரங்கள்: ஒன்றிய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை..! 
                                    
                                    
                                   Big cities like Bengaluru and Delhi targeted in nationwide digital fraud
 
                                 
                               
                                
                                      
                                            ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய சைபர் குற்றவியல் ஒருங்கிணைப்பு மையம், நாடு முழுவதும் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள 'டிஜிட்டல் கைது' மோசடிகள் குறித்து விரிவான ஆய்வு ஒன்றை மேற்கொண்டுள்ளது.
குறித்த ஆய்வின் முடிவில், நாட்டில் பதிவாகும் மொத்த வழக்குகளில் மூன்றில் இரண்டு பங்கு, அதாவது, சுமார் 66% வழக்குகள் பெங்களூரு, ஐதராபாத் மற்றும் டெல்லி-என்.சி.ஆர். ஆகிய மூன்று பெருநகரங்களிலேயே பதிவாகியிருப்பதாக தெரிவித்துள்ளது.

இந்த நகரங்களைத் தொடர்ந்து மும்பை, சூரத், புனே ஆகிய நகரங்களிலும் இந்தி டிஜிட்டல் கைது மோசடிகள் அடிக்கடி நடப்பதாக கூறப்பட்டுள்ளது.  இந்த மோசடியில் சிக்கும் நபர்களில் 76 சதவீதத்துக்கும் அதிகமானோர் 30 முதல் 60 வயதுக்குட்பட்டவர்கள் என்பதும், இதன் மூலம் உத்தியோகத்தில் இருப்பவர்கள் அல்லது சேமிப்பு உள்ளவர்களையே மோசடிக் கும்பல் குறிவைப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இந்த மோசடிக் கும்பல்கள் பொதுவாக ஒருவரின் டெலிகிராம், வாட்ஸ்அப் போன்ற செயலிகள் மூலம் மக்களைத் தொடர்புகொண்டு, தங்களை காவல்துறை, சி.பி.ஐ., போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அல்லது ரிசர்வ் வங்கி அதிகாரிகள் என அறிமுகப்படுத்திக் கொள்கின்றனர். பின்னர், இவர்கள் 'உங்கள் மீது வழக்கு உள்ளது, உங்களைக் கைது செய்யப் போகிறோம் அல்லது உங்கள் சொத்துக்களை முடக்கப் போகிறோம்' என்று கூறி மக்களை ஏமாற்றி அச்சத்திற்கு உள்ளாக்குகின்றனர். 

இதை அறிந்துக்கொள்ளாமல் அவர்களின் மிரட்டலுக்குப் பயந்து போன நபர்களிடம் இருந்து பெருந்தொகையை வங்கிக் கணக்குகள் மூலம் அவர்கள் பணத்தை பறிக்கின்றனர். இந்த 'டிஜிட்டல் கைது' மோசடி நாடு தழுவிய பெரும் பிரச்சினையாக வளர்ந்துள்ளது. இதனால், உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
                                     
                                 
                   
                       English Summary
                       Big cities like Bengaluru and Delhi targeted in nationwide digital fraud