காத்துவாங்கிய தேமுதிக அலுவலகம்! விருப்பமனு வாங்கக்கூட ஆள் இல்லை!பிரேமலதா விஜயகாந்த் எடுத்த அதிரடி முடிவு
DMDK office in limbo No one even takes voluntary petitions Premalatha Vijayakanth drastic decision
தமிழக சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு, போட்டியிட விரும்பும் வேட்பாளர்களிடமிருந்து விருப்பமனுக்கள் பெறும் பணியில் தேமுதிக தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், விருப்பமனுக்கள் சமர்ப்பிக்கும் கால அவகாசம் மேலும் 3 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார். அதன்படி, வரும் பிப்ரவரி 15ஆம் தேதி மாலை 4 மணி வரை பூர்த்தி செய்யப்பட்ட மனுக்களை சமர்ப்பிக்கலாம்.
தமிழக சட்டசபைத் தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் நெருங்கி வரும் சூழலில், திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, தவெக மற்றும் நாம் தமிழர் கட்சி ஆகியவை நான்கு முனைப் போட்டிக்குத் தயாராகி வருகின்றன. அனைத்து கட்சிகளும் விருப்பமனு பெறுதல், நேர்காணல் நடத்துதல் உள்ளிட்ட பணிகளை வேகமாக மேற்கொண்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, தேமுதிக கடந்த 6ஆம் தேதி மாநிலம் முழுவதும் உள்ள 234 சட்டசபைத் தொகுதிகளுக்கான விருப்பமனு விநியோகத்தைத் தொடங்கியது. பொதுத் தொகுதிகளுக்கு ரூ.15,000 மற்றும் தனித் தொகுதிகளுக்கு ரூ.10,000 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, பிப்ரவரி 12ஆம் தேதிக்குள் விருப்பமனுக்களை சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கடந்த திங்கள்கிழமை கட்சி தலைமையகத்தில் விருப்பமனு பெற யாரும் வராதது தொடர்பாக சமூக வலைதளங்களில் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் வெளியாகி விவாதம் கிளம்பியது. அன்றைய தினம் அஷ்டமி திதி என்பதால் யாரும் வரவில்லை என கட்சி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நவமி தினத்திலும் அலுவலகம் அமைதியாக இருந்ததாக கூறப்பட்டது.
இந்நிலையில், கால அவகாசம் முடிவடையவிருந்த நிலையில், மேலும் 3 நாட்கள் நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளதாக பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார். இதனால், விருப்பமனுக்கள் பெறும் செயல்முறை மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளது.
English Summary
DMDK office in limbo No one even takes voluntary petitions Premalatha Vijayakanth drastic decision