கரூர்: 41 பேர் உயிரிழந்ததற்கு தமிழ்நாடு சட்டப்பேரவையில் இரங்கல்!
TN Assembly Tributes paid to Karur Stampede
கரூர் தவெக கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் உயிரிழந்தோருக்கு தமிழக சட்டப்பேரவையில் இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது. ஆறு மாத இடைவெளிக்குப் பிறகு நடைபெற்ற இந்த கூட்டம் காலை தொடங்கியது.
கூட்டத் தொடக்கத்தில், கடந்த ஆறு மாதங்களில் மரணமடைந்த சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் உறுப்பினர்களுக்கான இரங்கல் குறிப்புகள் வாசிக்கப்பட்டது. அதன் பிறகு, கரூர் தவெக பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேருக்காக இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, உறுப்பினர்கள் அனைவரும் இரண்டு நிமிடங்கள் எழுந்து நின்று மௌன அஞ்சலி செலுத்தினர்.
மேலும், ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் சிபு சோரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சுதாகர் ரெட்டி, மறைந்த ஐஏஎஸ் அதிகாரி மற்றும் மருத்துவர் பீலா வெங்கடேசன் ஆகியோரின் மறைவுக்காகவும் தனித்தனியாக இரங்கல் தீர்மானங்கள் வாசிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டன.
சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, அவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் இன்று நாள் முழுவதும் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
குறிப்பிடத்தக்க வகையில், இந்த முறை முதல்முறையாக மறைந்த முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்களின் புகைப்படங்கள் பேரவைக் கூட்டத்தின் திரைகளில் ஒளிப்பரப்பப்பட்டன.
English Summary
TN Assembly Tributes paid to Karur Stampede