வலுக்கட்டாய கடன் வசூல்! 5 ஆண்டுகள் சிறை! தமிழக சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றம்!
TN Assembly new law Loan
சென்னை: கட்டாய கடன் வசூலை தடுக்கும் புதிய சட்ட மசோதா தமிழக சட்டப்பேரவையில் இன்று ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த மசோதாவின்படி, கடன் பெற்ற நபர், அவரது பெற்றோர், வாழ்க்கைத்துணை மற்றும் குழந்தைகள் மீது கடன் நிறுவனங்கள் அல்லது அதன் முகவர்கள் வலுக்கட்டாய நடவடிக்கைகள் மேற்கொள்ளக் கூடாது. மீறல் ஏற்படும் பட்சத்தில், சட்டத்திற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
கடனாளியின் குடும்பத்தினரை மிரட்டுதல், தொடர்ந்து பின் தொடருதல் உள்ளிட்ட செயல்களுக்கு எதிராக 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையோ அல்லது 5 லட்சம் ரூபாய் வரை அபராதமோ அல்லது இரண்டும் சேர்த்துத் தண்டிக்கலாம்.
மேலும், கடனை வசூலிக்க வெளி நபர்களை பயன்படுத்துவது, ஆவணங்களை சட்ட விரோதமாக கைப்பற்றுவது போன்ற செயல்களுக்கு 5 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும்.
இந்த "கட்டாய கடன் வசூல் தடுப்பு மசோதா"வை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். பிறகு, விவாதத்திற்குப் பின், இது ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.